தமிழகத்திற்கான திட்டங்களுக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்குவதில்லை: அமைச்சர் எ.வ.வேலு குற்றச்சாட்டு

வேலூர்: வேலூரில் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த மழையின்போது தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, ஊட்டி ஆகிய இடங்களில் பாலங்களும், சாலைகளும் சேதமடைந்துள்ளது. இவை மாநில அரசு நிதியின் மூலம் சரி செய்யப்பட்டு வருகிறது. இந்த பாதிப்புகளை ஒன்றிய நிதி அமைச்சரை அழைத்து சென்று காட்டியும் நிவாரண நிதி வழங்கவில்லை. சாலைகளை அமைக்கவும் நிதி வழங்கவில்லை. எத்தனை முறைதான் நிதி கேட்பது. இந்த பணிகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ750 கோடி செலவிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பல பாலங்கள் வேகமாக கட்டி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுகிறது.

தமிழகத்தில் காலாவதியான சுங்கச்சாவடிகளை மூடவேண்டும் என பல முறை ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியும், நேரிலும் வலியுறுத்தினோம். ஆனால் ஒன்றிய அரசு, சுங்கச்சாவடிகளை மூட முடியாது என கூறி வருகிறது. சுங்க கட்டணத்தை குறைக்க வலியுறுத்தியும் கண்டுக்கொள்ளவில்லை. ஒன்றிய அரசு சார்பில் அனைத்து மாநில அமைச்சர்களுடன் வரும் 30ம் தேதி ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தின் சார்பில் நான் கலந்துகொள்கிறேன்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்குவது குறித்து முடிவு செய்ய வேண்டியது முதல்வர்தான். அவர் முடிவு செய்தால் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வோம். கீழ் மட்டத்தில் உள்ள தொண்டர்களில் ஆரம்பித்து, கேபினட்டில் உள்ள அவை முன்னவர் துரைமுருகன் உட்பட அனைவரும் அதனை உளமாற வரவேற்போம். இவ்வாறு அவர் கூறினார்.

The post தமிழகத்திற்கான திட்டங்களுக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்குவதில்லை: அமைச்சர் எ.வ.வேலு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: