×

கடந்த 11 ஆண்டுகளில் ரூ.39.54 லட்சம் கோடியை வரியாக வசூலித்து ஒன்றிய அரசு கஜானாவை நிரப்பி இருக்கிறது: செல்வபெருந்தகை குற்றச்சாட்டு


சென்னை: கடந்த 11 ஆண்டுகளில் ரூ.39.54 லட்சம் கோடியை வரியாக வசூலித்து ஒன்றிய அரசு தனது கஜானாவை நிரப்பி இருக்கிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கடந்த 11 ஆண்டாக ஒன்றிய பாஜ அரசு வரிக்கு மேல் வரி பலமுனைகளில் விதித்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது. ஒன்றிய அரசு சமீபத்தில் ஏப்ரல் 8ம் தேதி பெட்ரோல், டீசல் மீது லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 2 கலால் வரி விதித்திருக்கிறது. இந்த கலால் வரி உயர்வினால் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூபாய் 11 முதல் 13 வரையிலும், ஒரு லிட்டர் டீசல் ரூபாய் 8 முதல் 10 வரையும் விலை உயர்வு ஏற்படும் என்று கூறப்பட்டது. தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலில் கலால் வரி ரூபாய் 19.90 ஆக இருந்தது ரூபாய் 21.90 ஆக உயர்ந்திருக்கிறது. அதேபோல் ஒரு லிட்டர் டீசல் கலால் வரி ரூபாய் 15.80 இல் இருந்து ரூபாய் 17.80 ஆக உயர்ந்திருக்கிறது.

அதேபோல, சமையல் எரிவாயு விலையும் சிலிண்டருக்கு ரூபாய் 50 உயர்த்தப்பட்டிருக்கிறது. கலால் வரி உயர்வினால் ஒன்றிய அரசின் வருமானம் பலமடங்கு கூடியிருக்கிறது. 2014 மே மாதம் கச்சா எண்ணெய் ஒரு பேரல் ரூபாய் 9,265. இன்று ரூபாய் 5596 மட்டுமே. ஆனால், 2014ல் டெல்லியில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூபாய் 71.41 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூபாய் 55.49 ஆகவும் இருந்தது. இன்று அதே பெட்ரோல் விலை ரூபாய் 94.77, ஒரு லிட்டர் டீசல் ரூபாய் 87.67 ஆகவும் உயர்ந்திருக்கிறது. கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் 40 சதவிதம் குறைந்திருக்கும் போது பெட்ரோல், டீசல் விலையை குறைத்து சாமானிய மக்கள் பயனடைகிற வகையில் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்காமல் மக்கள் மீது தொடர்ந்து சுமையை ஏற்றி வருகிறது. 11 ஆண்டுகளில் ரூ.39.54 லட்சம் கோடியை வரியாக வசூலித்து ஒன்றிய அரசு தனது கஜானாவை நிரப்பி இருக்கிறது.

The post கடந்த 11 ஆண்டுகளில் ரூ.39.54 லட்சம் கோடியை வரியாக வசூலித்து ஒன்றிய அரசு கஜானாவை நிரப்பி இருக்கிறது: செல்வபெருந்தகை குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Union government ,Selvaperundhagai ,Chennai ,Tamil Nadu Congress ,
× RELATED கேரள உள்ளாட்சி தேர்தலில் பாஜ தனது...