×

ஒன்றிய அரசு போதிய நிதியை கொடுக்கும் என நம்புகிறோம்: நெல்லையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

நெல்லை: ஒன்றிய அரசு மழை வெள்ள நிவாரணத்திற்கு போதிய நிதியை கொடுக்கும் என நம்புவதாக நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் நிவாரண உதவிகளை வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் மொத்தம் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் மொத்தம் ரூ.80 லட்சம் வழங்கப்படுகிறது. வெள்ளத்தில் 67 பேர் மாடுகளையும், 1264 பேர் வீடுகளையும், 504 பேர் ஆடுகளையும், 135 பேர் கன்றுகளையும், 28 ஆயிரத்து 392 பேர் கோழிகளையும் இழந்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் சேர்த்து நெல்லை மாவட்டத்தில் மொத்தம் ரூ.2 கோடியே 87 லட்சம் வெள்ள நிவாரணம் வழங்கப்பட உள்ளது.

முதற்கட்டமாக உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சமும், வீடுகளை இழந்த 5 பேருக்கும், கால்நடைகளை இழந்த 5 பேருக்கும் நிவாரண உதவிகளை நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

பின்னர் அவர் அளித்த பேட்டி:
நெல்லை மாவட்டத்தில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதற்கட்டமாக 11 பேருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணமாக கொடுத்துள்ளோம். இவை தவிர கால்நடை, வீடுகளை இழந்தவர்களுக்கு சர்வே எடுத்து நிவாரணம் வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் விரைவில் நிவாரணம் வழங்கப்படும். தென் தமிழக மக்களுக்கு தேவையான உதவிகளை உடனுக்குடன் செய்து வருகிறோம். கடந்த 10 தினங்களாக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் களத்தில் நின்று பணியாற்றி வருகிறோம்.

தெலங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தேவையில்லாமல் அரசியல் பேசுகிறார். 100 ஆண்டுகளுக்கு பின்னர் பெரிய மழை பெய்துள்ளது. கால்நடைகளை இழந்தவர்கள் சான்றிதழ் இருந்தாலே நிவாரணம் கொடுக்கப்படும். ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் முதலில் இது பேரிடர் இல்லை என்றார். இப்போது அவர் பாதிப்புகளை பார்க்க வருகிறார். கண்டிப்பாக பாதிப்புகளை பார்த்து விட்டு அவர் தகுந்த நிதியை கொடுப்பார் என்று நம்புகிறோம். பிரதமர் நேற்று தமிழக முதல்வரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மழை வெள்ள பாதிப்பு குறித்து பேசியுள்ளார். எனவே போதிய நிதியை கொடுப்பார்கள் என்று நம்புகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, மூர்த்தி, எம்எல்ஏ அப்துல்வகாப், கலெக்டர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஒன்றிய அரசு போதிய நிதியை கொடுக்கும் என நம்புகிறோம்: நெல்லையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி appeared first on Dinakaran.

Tags : EU government ,Minister Assistant Secretary ,Stalin ,Paddy ,Nella ,Deputy ,Minister ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வை அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் நடத்த ஒன்றிய அரசு திட்டம்