×

இடையறாத வழிபாடு

நன்றி குங்குமம் ஆன்மிகம்

வணக்கம் நலந்தானே!

இந்த நவராத்திரி வழிபாடு என்பதன் இலக்கை அறிந்து கொண்டால் நாம் இன்னும் நம் வழிபாட்டை லகுவாக்கிக் கொள்ளலாம். ஏனெனில், ஏன் வழிபாடு என்கிற கிரியை உள்ளது என்பதை தீர்க்கமாக புரிந்து கொள்ள வேண்டும். எதை நோக்கி நாம் வழிபடுகின்றோமோ அதுவாகவே நாம் ஆக வேண்டும் என்பது இறுதி உண்மை. இந்த உண்மைக்கு இடையே பல நிலைகள் உள்ளன. லௌகீக வாழ்க்கைக்கான தேவைகள் உட்பட சகலத்திற்குமே இங்கு வழிபாடு என்கிற கிரியையை நாம் கைக்கொள்கிறோம்.

பரவாயில்லை. மனதிற்கு எடுத்ததுமே நீ அதுவாக மாறி நில்… நீ வணங்கும் அந்த பிரம்மமே நீதான் என்பதை இக்கணமே அறிந்து விடு என்றால் மனம் முழி முழியென்று முழிக்கும். எனவே, முதலில் உனக்கு என்ன வேண்டுமோ அதை பிரார்த்தனையாகவோ அல்லது துதிகளாகவோ கேட்டுக் கேட்டு வாங்கிக் கொள் என்று சொல்வோமாயின் அது பவ்யமாக பின் தொடரும்.

இங்குதான் மனமே தான் அறியாதவாறு தன்னிடம் ஒரு அற்புதமான விஷயம் இருப்பதை அறிந்து கொள்கிறது. அதாவது மனம் எந்த விஷயத்தில் குவியம் கொள்கின்றதோ… எதில் மிகக் கூர்மையாக ஈடுபடுகின்றதோ அதே அளவிற்கு தன்னுடைய அகத்திற்குள் சென்றும் ஒடுங்குகின்றது. இருபுறமும் கூர்மையான கத்தியைப் போலத்தான் இது. நீங்கள் எதை நோக்கி வழிபடுகிறீர்களோ அந்த பிரதிமையின் தன்மையானது அதாவது நீங்கள் வழிபட்டுக் கொண்டிருக்கும் உருவம் உங்களுக்குள் வந்து தங்கும்.

நீங்கள் எங்கேயோ சிறியதாக கைகூப்பி தொடங்கிய வழிபாடானது மெல்ல மெல்ல பூஜை, உபாசனை என்று பெருகிப் பெருகி தான் என்கிற அகங்காரத்தை அழித்து தானேயான அந்த பிரம்மத்தை அமர வைத்து விடும். அப்போது செயலைச் செய்பவர் இல்லாமல் செயல் மட்டுமே நடக்கும் அதை நடத்துபவர் யாரென்று கேட்கும்போது எல்லாம் அவன் சித்தம் என்று சொல்வீர்கள்.

மனிதனுடைய உணர்வு மட்டங்களை, நிலைகளை வேதாந்தம் மூன்றாக பிரிக்கின்றது. முதலாவதாக ஜாக்ரத் எனும் விழிப்பு நிலை. இரண்டாவது சொப்பனம் என்கிற கனவு நிலை. மூன்றாவது சுழுப்தி என்கிற கனவுகள் கூட அற்ற தூக்கம். மேலும், இந்த நான்கு உணர்வு நிலைகளையும் தாண்டியதே ஞான நிலையாகும். நீங்கள் தூங்கும்போது உங்களின் உடல்பற்றிய பிரக்ஞை இல்லை. உங்களின் எந்த அவயங்களாலும் இன்பம் ஏற்படுவதில்லை. இப்படி எந்த இந்திரியங்களும் செயல்படாமலேயே உங்களுக்கு இன்பம் ஏற்படுவதை கவனியுங்கள்.

ஏன், உங்களை நீங்கள் மறந்து தூங்குவதை எப்போதாவது வேண்டாம் என்று சொல்லியிருக்கிறீர்களா? இல்லையே… இப்படி எந்த அவயங்களின் தொடர்பு இல்லாமலேயே மனம் தொழிற்படாமல் சென்று ஒடுங்கும் இடமே ஆத்ம ஸ்தானமாகும். இப்படி ராத்திரியில் தினமுமே ஆத்ம ஸ்தானமாகிய ஈசனிடத்தில் ஒடுங்கும் மனதை கவனத்தோடு அவதானித்து அது சென்று ஒடுங்கும் இடத்தை தரிசிப்பதே ஞானமாகும். அதாவது, தூக்கத்தில் மனம் சென்று ஒடுங்கும் இடத்தை அறிவதில்லை. ஆனால், ஞானியர் எப்போதுமே அங்குதான் இருக்கின்றார்கள். இப்படி துயிலும்போது அறிவதுதான் அறிதுயிலாகும். இது தினமும் செய்ய வேண்டிய ஆத்ம சாதனமும் ஆகும்.

இதற்காகவே, ஒன்பது ராத்திரியை சொல்லி அந்த ஒன்பது நாளும் தூங்காமல் தூங்கி என்பதுபோல அப்படி தூக்கம் வரும்போது உங்கள் மனம் சென்று அப்பாலுள்ள ஆத்மா எனும் அம்பாளை பிடித்துக் கொண்டால், அதற்குப் பிறகு தூங்க மாட்டீர்கள். தூங்கினாலும் அறிந்தே துயிலுவீர்கள். ஞானிகள் இந்த நிலையை துரீயம் என்கிறார்கள்.

கிருஷ்ணா (பொறுப்பாசிரியர்)

The post இடையறாத வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Kumkunum Anmigam ,Navratri ,Dinakaran ,
× RELATED கண் நோய்களை குணமாக்கும் அவரைக்காய்!