×

சுகாதாரமற்ற பானிபூரிகளை விற்றால் கடைக்காரர்கள் மீது கிரிமினல் வழக்கு: உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை

சென்னை: சென்னை மெரினா கடற்கரை பகுதிகளில் உள்ள பானிபூரி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான குழு நேற்று ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு முழுவதும் அனைத்து பானி பூரி கடைகளும் ஆய்வு செய்யப்படுகிறது. குறிப்பாக சென்னையில் அதிகமாக கடைகள் இருப்பதால் 3 குழுவாக பிரித்து ஆய்வு செய்ய திட்டமிட்டு இருக்கிறோம். மொத்தமாக 20 பேர் உள்ளோம் தெரு கடைகள், சாட் கடைகள், பெரிய கடைகள் என 3ஆக பிரித்து அனைத்து வகையாக ஆய்வுகளும் செய்யப்படும். இந்த ஆய்வு முழுமையாக முடிய 2 அல்லது 3 நாட்கள் எடுத்துக்கொள்ளும். மேலும் ஆய்வு செய்யும் போது எடுக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்படும். முடிவுகள் வர 5 முதல் 10 நாட்கள் எடுத்து கொள்ளும்.

மேலும் பானிபூரி கடை எவ்வாறு நடத்த வேண்டும் என பயிற்சி வழங்க இருக்கிறோம். இந்த ஆய்வின் போது பானிபூரி அல்லது அதற்கு பயன்படுத்தும் ரசம் பானி சுகாதாரமாக இல்லை என்றால் உடனடியாக அது பறிமுதல் செய்யப்படும். மேலும் ஆய்வுக்கு அனுப்பப்படும் பானிபூரி மற்றும் ரசம் பானி சுகாதாரமாக இல்லாமல் உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் கெமிக்கல் கலக்கப்பட்டுள்ளது என தெரியவந்தால் அவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடுக்கப்படும். மக்கள் சுகாதாரமான பானிபூரிகளை உட்கொள்ளலாம் குறிப்பாக கையுறை பயன்படுத்தி பாதுகாப்பான முறையில் அளிக்கப்படும் பானிபூரிகளை சாப்பிடலாம். மேலும் ரசம் பானி லைட் பச்சை நிறத்தில் இருக்க வேண்டும். அதிக பச்சை நிறத்தில் இருந்தால் அதை சாப்பிடக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

* பிரியாணி கடைக்கு அபராதம்
அமைந்தகரையில் உள்ள பிரபல ஓட்டலில் பிரியாணியுடன் வழங்கிய வெங்காய பச்சடியில் புழு கிடப்பதாக, சமூக வலைதளங்களில் நேற்று முன்தினம் வீடியோ வைரலானது. அதன்பேரில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று சம்பந்தப்பட்ட ஓட்டலில் ஆய்வு செய்தனர். அப்போது, தரமற்ற முறையில் உணவு தயாரிப்பது தெரிந்தது. இதையடுத்து, அந்த கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும், தரமான முறையில் உணவுகளை தயாரித்து விற்பனை செய்ய வேண்டும், இனிமேல் புகார்கள் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்று ஓட்டல் நிர்வாகத்திற்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கைவிடுத்தனர்.

The post சுகாதாரமற்ற பானிபூரிகளை விற்றால் கடைக்காரர்கள் மீது கிரிமினல் வழக்கு: உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Food Safety Department ,CHENNAI ,Food Safety Officer ,Satish Kumar ,Marina Beach ,Pani Puri ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED கோவை மாநகரின் பல பகுதிகளில் உள்ள பானி...