×

தமிழ்நாடு அரசின் அனைத்து புள்ளி விவரங்களும் வெளிப்படையாக உள்ளது : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

சென்னை : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (30.6.2025) சென்னை மெட்ரோ இரயில் நிறுவன கூட்டரங்கில் நடைபெற்ற 19 வது தேசிய புள்ளியியல் தின விழாவில், தரவுகளின் அடிப்படையில் சிறப்பு ஆய்வறிக்கை தயார் செய்யும் போட்டியில் மாநில மற்றும் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் புள்ளியியல் சார்ந்த பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி அளிப்பதற்காக பொருள்இயல் மற்றும் புள்ளியியல் துறை – தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இடையே துணை முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை,

இந்திய புள்ளியியல் துறையின் தந்தை (Father of Indian Statistics) என்று போற்றப்படுகிற பேராசிரியர் பி.சி.மஹாலநோபிஸ் (P.C.Mahalanobis) அவர்களுடைய பிறந்தநாளை இன்றைக்கு தேசிய புள்ளியியல் நாளாக கொண்டாடுகின்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உங்களையெல்லாம் சந்திக்கின்ற இந்த வாய்ப்பை பெற்றதற்கு நான் மீண்டும் மகிழ்ச்சி அடைகின்றேன்.

உங்களுக்கெல்லாம் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றேன். புள்ளியியலுடைய அருமை நிறைய பேருக்கு தெரியாமல், புரியாமல் இருந்த காலம் ஒன்று இருந்தது. Western countries-ல statistics-க்கு கொடுத்த முக்கியத்துவம் முன்பெல்லாம் நம்முடைய நாட்டில் அது கிடையாது. அவர்கள் நாட்டில் கொடுத்த முக்கியத்துவம் நம்ம நாட்டில் கொடுப்பதற்கு கொஞ்சம் காலதாமதம் ஆனது.

அதுபற்றிய Awareness நம்முடைய நாட்டில் கொஞ்சம் குறைவாகவே இருந்தது. ஆனால், இன்றைக்கு அந்த நிலைமை தலைகீழாக மாறி இருக்கின்றது. புள்ளியியலோட அவசியத்தை நாம் அனைவரும் இன்றைக்கு கொஞ்சம் லேட்டா புரிஞ்சுக்கிட்டாலும், புரிஞ்சுக்கிட்டுருக்கோம். புள்ளியியல்னு சொன்னா, அது, ஒரு நாட்டுக்கோ, நிறுவனத்துக்கோ மட்டும் தான் தேவை அப்படிங்கிற சூழல் இன்றைக்கு கிடையாது.

புள்ளியியல் இன்றைக்கு ஒவ்வொரு வீட்டிற்கும் தேவை அப்படிங்கிற நிலைமை இன்றைக்கு மாறி உள்ளது. உங்கள் வீட்டினுடைய மாத பட்ஜெட் மற்றும் வருடாந்திர பட்ஜெட் என்று எல்லாவற்றையும் முறையாக பதிவு செய்து, பகுப்பாய்வு (analyse) செய்து பார்க்கின்ற பழக்கம் இன்றைக்கு நம்முடைய தமிழ்நாட்டில் பல குடும்பங்களில் உருவாகி இருக்கிறது.

இதெல்லாம் மிக, மிக ரொம்ப ஆரோக்கியமான முன்னேற்றம், மாற்றம். இப்போது A.I.னு சொல்கிற Articificial Intelligence காலத்தில் வாழ்ந்துட்டு இருக்கிறோம். ஒரு நல்ல AI Model-க்கு ஆழமான தரவுகள் (data) இருக்கணும். செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence)-க்கு மட்டுமல்ல, ஒரு நல்ல அரசாங்கத்துக்கும் துல்லியமான data தான் அடிப்படை.

அந்த data-வை சேகரித்து தரக் கூடிய துறையாக, இந்த சிறப்பு வாய்ந்த துறையாக இன்றைக்கு இந்த புள்ளியியல் துறை திகழ்ந்து கொண்டிருக்கிறது. நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசை பொறுத்தவரை நிறைய மக்கள் நலத் திட்டங்களை ஆட்சி பொறுப்பேற்ற முதல் நாளிலிருந்து நம்முடைய முதலமைச்சர் அவர்கள் கொடுத்து கொண்டிருக்கிறார்.

முதலமைச்சர் அவர்கள் அறிவிக்கின்ற திட்டங்கள் எல்லாம் மக்களுக்கு எந்த அளவுக்கு சென்று சேருகின்றது, பயன்படுகிறது. மக்களுடைய வாழ்வில் அது எப்படிப்பட்ட மாற்றத்தை சிறப்பான மாற்றத்தை உருவாக்கி கொண்டிருக்கிறது. இதை எல்லாம் தெரிந்து கொள்வதற்கு இந்த அரசுக்கு, முதலமைச்சர் அவர்களுக்கு நீங்கள் தான் துணை நிற்கின்றீர்கள்.

அதற்கு இந்த நேரத்தில் என்னுடைய நன்றியையும், பாராட்டுக்களையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன். உதாரணத்திற்கு, முதலமைச்சருடைய காலை உணவுத் திட்டம், அந்த திட்டத்தில் மாணவர்களுடைய வருகைப்பதிவு (attendance) எந்த அளவுக்கு உயர்ந்து (increase) உள்ளது, என்பது இந்த புள்ளியியல் துறை எடுத்த survey மூலம் தான் நம்முடைய அரசுக்கு தெரிய வந்தது.

அதேபோல, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பெறப்பட்ட மேல் முறையீட்டு விண்ணப்பங்கள் உங்களால் ஆய்வு செய்யப்பட்டு உரிய பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டார்கள். அந்த திட்டத்துடைய வெற்றிக்கும் இந்த துறை மிக, மிக முக்கியமான ஒரு காரணம்.

அதுமட்டுமல்ல, புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டங்களில் உயர்கல்வி சேர்க்கை விகிதம் (Gross Enrolment Ratio) எப்படி அதிகமானது. அதே மாதிரி, விடியல் பயணம் திட்டத்தினால் ஒவ்வொரு மகளிரும் மாதம் கிட்டத்தட்ட 900 ரூபாய் சேமிக்கிறார்கள் என்பதையும் இந்த துறை தான் ஆய்வு பண்ணி கண்டுபிடித்து சொன்னது.

அதுமட்டுமல்ல, விவசாயக் கூலி விவரங்களில் தொடங்கி மாநிலத்தினுடைய தொழில் வளர்ச்சி குறியீடுகள் வரை உங்களுடைய தரவுகள் தான் இந்த அரசுக்கு ஒரு அளவுகோலாக இன்றைக்குவரை திகழ்ந்து கொண்டிருக்கிறது.

இன்றைக்கு நாம் திராவிட மாடல் என்று பெருமையோடு சொல்லி கொள்கிறோம், அதற்கான அடிப்படைகள் எல்லாமே இந்த புள்ளிவிவரங்களை வைத்து தான் பெருமையோடு சொல்கின்றோம். ஏதோ போகிறபோக்கில் வார்த்தை ஜாலத்திற்காக “திராவிட மாடல்” என்று நாம் சொல்லவில்லை.

எல்லாத்தையும் புள்ளிவிவரத்தோடு ஆதாரத்தோடு தான் இங்கே சொல்லிக் கொண்டிருக்கிறோம். அனைத்து புள்ளி விவரங்களையும் data-வையும் நாம வெளிப்படையாக வைத்து சொல்கின்றோம். இன்னும் சொல்லப்போனால், பல surveyக்களை நாம் எடுத்து மக்களிடம் புள்ளிவிவரங்களை கொடுக்கின்றோம்.

புள்ளிவிவரங்களை சில அரசுகள் மறைக்கும், சில புள்ளிவிவரங்களை பொதுவெளியில் வெளியிட தயங்குவார்கள், வெளியிடமாட்டார்கள். ஏனென்றால், அந்த புள்ளிவிவரங்கள் அந்த அரசுக்கு சில சமயங்களில் சாதகமாக இருக்காது. அதனால் மறைப்பார்கள். அப்படி மறைக்கும் போது உண்மையான சமூக நிலைமை ஆராய்ச்சியாளர்களுக்கும், திட்டம் தீட்டக்கூடியவர்களுக்கும் தெரியாமல் போய் விடும்.

ஆனால், நம்முடைய திராவிட மாடல் அரசை பொறுத்தவரைக்கும் எங்களுடைய திட்டங்கள் மீதும், அதன் செயல்பாடுகள் மீதும் எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கின்றது. அதனால் தான், எல்லா தரவுகளையும் புள்ளிவிவரங்களையும் நாங்கள் பொதுவெளியில் வைக்கின்றோம்.

திட்டங்களில் சில இடங்களில் சரிவு இருந்தால்கூட, அதை சுட்டிக்காட்டும்போது அதை ஏற்றுக்கொண்டு சரி செய்வதற்கு நாங்கள் என்றைக்கும் தயாராக இருக்கின்றோம். மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று நினைக்கும் எல்லா ஆட்சியாளர்களுக்கும் முதுகெலும்புபோல இருக்கக் கூடியது இந்த புள்ளியியல் துறை தான்.

புள்ளிவிவரங்கள் என்ன கருத்தை சொல்கின்றது? என்ன trendஐ காட்டுகின்றது? என்பதை நாம் சரியாக புரிந்துகொள்வது தான் புள்ளியியல் துறையினுடைய வெற்றிக்கு அடிப்படையாக இருக்கும். இங்கே கூட, சிறப்பு ஆய்வறிக்கை போட்டி நடத்தப்பட்டிருப்பதாக கூறினார்கள். ஒரு Survey எடுத்து அதை எவ்வாறு செயல்படுத்தலாம் என்ற விதத்தில் நடத்தப்பட்ட அந்த போட்டியில் 240 பேர் பங்கேற்று உள்ளீர்கள் என்பது உள்ளபடியே மகிழ்ச்சியான செய்தி.

அதில் பங்கேற்ற அத்தனைபேருக்கும் எங்களுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன். இதில் மாவட்ட மற்றும் மாநில அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

சமூகத்துடைய அனைத்துத் துறை வளர்ச்சிக்கும் நம்முடைய புள்ளியியல் துறையினுடைய பங்கு மிக, மிக முக்கியமானது. அப்படிப்பட்ட முக்கியமான துறையைச் சேர்ந்த அனைத்து உயர் அலுவலர்களுக்கும், பணியாளர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும், மாணவர்களுக்கும், அதேபோல் புள்ளியியல் துறையில் உலகளவில் வருகின்ற புதிய ஆய்வுகளை உள்வாங்கிக் கொண்டு, நவீனத் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மென்மேலும் வளர்ச்சியடைய இந்த துறையை சார்ந்த அனைவருக்கும் என்னுடைய பாராட்டுகள், வாழ்த்துகள்.

The post தமிழ்நாடு அரசின் அனைத்து புள்ளி விவரங்களும் வெளிப்படையாக உள்ளது : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,Chennai ,19th National Statistics Day ,Chennai Metro ,Rail ,Corporation ,
× RELATED அன்புமணி மீதான ஊழல் வழக்கை சிபிஐ...