×

தூத்துக்குடி மாவட்டத்தில் புரட்டாசி பட்டத்திற்கு தயாராகும் விவசாயிகள்

*உழவு பணி தீவிரம்

கோவில்பட்டி : கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் புரட்டாசி பட்டத்திற்கு தயாராகும் வகையில் உழவு பணியை விவசாயிகள் துவக்கி உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வரக்கூடிய புரட்டாசி பட்டத்திற்கு சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம், வெள்ளைச்சோளம், பருத்தி, கொத்தமல்லி, வெங்காயம், மிளகாய் போன்ற பயிர்கள் பயிரிட விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர். இதற்காக நிலங்களில் உள்ள காய்ந்த தட்டைகள், இலைதழைகளை அப்புறப்படுத்தி கோடை உழவு செய்தும், கிடைகள் அமர்த்தியும், கால்நடை சாணங்கள், குப்பைகளை தூவுதல் போன்ற பணிகளையும் செய்து வருகின்றனர்.

கடந்தாண்டு மழை மிகவும் குறைவாக பெய்ததால் போதிய விளைச்சல் கிடைக்காமல் நஷ்டம் ஏற்பட்டது. இருப்பினும் மனம் தளராத விவசாயிகள், நம்பிக்கையுடன் விவசாய பணிகளை தொடர்ந்து வருகின்றனர். கடந்த 2020-21ம் ஆண்டுக்கு வெங்காயம், உளுந்து, பாசி, நெல், சூரியகாந்தி போன்றவற்றுக்கு பயிர் காப்பீடு இழப்பீடு விடுவிக்கப்பட்டு உள்ளது. மக்காச்சோளம், கம்பு, வெள்ளைச் சோளம், மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றுக்கு இதுவரை பயிர் காப்பீடு வழங்கப்படவில்லை. இந்த காப்பீடு தொகையை வரக்கூடிய பருவ ஆண்டுக்கு முன்பு விடுவிக்க வேண்டுமென கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் மற்றும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கடந்த காலங்களில் அரசு விதை மானியம், உரம் மானியம், உழவு மானியம் வழங்கி வந்தது. அதனை தற்போதைய அரசு மானியத்திற்கு பதில் இடுபொருட்களாக வழங்கி வருகிறது. இதனால் எந்தவொரு பயனும் இல்லை. குறைந்தபட்சம் ஏக்கருக்கு உழவு செய்ய, விதைக்க, களை பறிக்க, மருந்து தெளிக்க ₹10 ஆயிரம் வரை தேவைப்படுகிறது. அருகில் உள்ள விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் 2020-21ம் ஆண்டுக்குரிய பயிர் காப்பீடு முழுமையாக கடந்த மாதம் விடுவிக்கப்பட்டுள்ளது.

வேலை ஆட்கள் கூலி, உரம், மருந்து விலை என அனைத்தும் நாளுக்கு அதிகரித்து வருவதாலும், மகசூல் விலை மட்டும் 10 ஆண்டுகளுக்கு முந்தைய விலையே இருப்பதாலும், விவசாயத்திற்கு ஆர்வப்பட்டு இளைய தலைமுறையினர் யாரும் வருவதில்லை.இதனால் பயிர் காப்பீட்டை நம்பியே விவசாயம் செய்ய வேண்டி உள்ளது. எனவே வரக்கூடிய பருவ ஆண்டுக்கு உரம், விதைகள் வாங்கும் வகையில் பயிர் காப்பீட்டை விடுவிக்க வேண்டும். இடுபொருட்களாக வழங்குவதை தவிர்த்து பழைய நடைமுறைப்படி விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு மானியம் விடுவிக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

The post தூத்துக்குடி மாவட்டத்தில் புரட்டாசி பட்டத்திற்கு தயாராகும் விவசாயிகள் appeared first on Dinakaran.

Tags : Thoothukudi district ,Kovilpatti ,Dinakaran ,
× RELATED திரைத்துறையில் பாலியல்...