×

செவ்வாய்க்கிழமை நல்ல நாளா, இல்லையா?

செவ்வாய்க் கிழமையை மங்களவாரம் என்று அழைப்பார்கள். அதனால், மங்களகரமான காரியங்களைச் செய்யலாம் என்று விவாதித்தாலும், நம்மவர்களுக்கு செவ்வாய் என்றாலே பய உணர்வு மனதில் தோன்றும். நவகிரஹங்களில் செவ்வாய் அங்காரகன் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். சனி, ராகு, கேதுவிற்கு அடுத்தபடியாக தீய கிரஹங்களில் ஒருவராக சித்தரிக்கப்படுகிறார். இயற்கையில் செவ்வாய் எஜமானரின் உத்தரவைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் ஒரு தொண்டனாக, படைவீரனாக, காவல்காரனாக இருக்கும் குணத்தினைக் கொண்டவர். விஸ்வாசம் நிறைந்த பணியாள் என்றாலும், மூர்க்க குணம் நிறைந்தவர். எதைப் பற்றியும் கவலைப்படாது, சற்றும் யோசிக்காது மிகவும் வேகமாக செயல்படக்கூடிய தன்மையை செவ்வாய் தருவார்.

தர்ம சாஸ்திரத்தில் ‘மௌன அங்காரக விரதம்’ என்று ஒரு விரதம் பற்றி மிகவும் விசேஷமாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது, செவ்வாய்க்கிழமை அன்று மௌனவிரதம் அனுஷ்டித்தால் ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும் என்கிறது சாஸ்திரம். செவ்வாயில் எந்த ஒரு விஷயத்தையும் அசைபோடாது வெறுமனே வாயை மூடிக்கொண்டிருப்பதால் சிரமங்கள் ஏதும் நேராது. முக்கியமாக செவ்வாய்க்கிழமை அன்று எந்த ஒரு தர்க்கத்திலும் ஈடுபடக்கூடாது, அவ்வாறு தர்க்கம் செய்வதாலோ, விவாதத்தில் ஈடுபடுவதாலோ தீமையே உண்டாகும். தற்காலத்தில் தங்களது பேச்சுத்திறமையின் (கேன்வாசிங்) மூலம் வாடிக்கையாளரைக் கவரும் தொழில் செய்யும் ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், நகைக்கடை போன்ற பெரிய நிறுவனங்கள்கூட செவ்வாய்க்கிழமை அன்று விடுமுறை விட்டுவிடுவதைக் காணலாம்.

செவ்வாய்க் கிழமையில் பொதுமக்களோடு பேசுவதன் மூலம் பரஸ்பரம் ஒரு சுமுக உறவு உண்டாகாது என்பது அவர்களது அனுபவத்தில் கிடைத்த பாடம். அதனாலேயே திருமண சம்பந்தம் பேசச் செல்பவர்கள், செவ்வாய் மங்களவாரமே என்றாலும் அதனைத் தவிர்க்கிறார்கள். ‘செவ்வாயோ… வெறும் வாயோ…’ என்ற ஒரு பழமொழியும் வழக்கத்தில் உண்டு. அதனால் தர்மசாஸ்திரம் காட்டும் வழியில் செவ்வாய்க் கிழமையில் மௌனவிரதம் இருக்க முயற்சிப்போம். இயலாவிட்டால் வீண் விவாதத்தினையாவது தவிர்ப்போம். மௌனமாக இருந்தால் அது மங்களவாரமே. சுபநிகழ்ச்சிகளின்போது எதுவும் பேசாமல் மௌனமாக இருக்கக்கூடாது என்பதால் செவ்வாய்க் கிழமையை நல்ல நாளாக கணக்கில் கொள்ள முடியாது.

?கணவன் – மனைவி ஒற்றுமை வளர எந்த விரதம் இருக்க வேண்டும்?
– வள்ளி செல்வம், சேத்தியாதோப்பு.

கேதார கௌரீ விரதம். சரியான தருணத்தில் கேட்கப்பட்டுள்ள பொருத்தமான கேள்வி. பிரதி வருடம் தீபாவளியைத் தொடர்ந்து வரும் அமாவாசை நாளில் மேற்கொள்ளப்படும் விரதம் இது. ஒரு சில குடும்பங்களில் அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை முன்னிட்டு சதுர்த்தசியிலேயே அதாவது, தீபாவளி அன்றே இந்த விரதத்தை கடைபிடிக்கும் பழக்கமும் உள்ளது. இந்த விரதத்தினை மேற்கொண்டு பார்வதி தேவி, சிவபெருமானின் உடலில் சரிபாகத்தினைப் பெற்றாள் என்று புராணங்கள் சொல்கின்றன. தம்பதியருக்குள் உண்டாகும் கருத்து வேற்றுமைகள் காணாமல் போய் என்றென்றும் ஒற்றுமை தழைக்க வேண்டும் என்பதற்காக அம்பிகை நமக்கு அருளியதுதான் இந்த கேதார கௌரீ விரதம். ஐப்பசி மாத (தீபாவளி) அமாவாசைக்கு 21 நாட்கள் முன்னதாக இந்த விரதத்தினைத் துவங்கி சரியாக 21வது நாளான அமாவாசை அன்று முடிக்க வேண்டும். பெரும்பாலான பெண்களுக்கு நடைமுறையில் இது சாத்தியமில்லை என்பதால் இறுதி நாளான தீபாவளி அமாவாசை நாளன்று 21 என்ற எண்ணிக்கையில் வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள், சந்தனவில்லை, விபூதி உருண்டை, அதிரசம், வடை ஆகியவற்றை நோன்புசட்டியில் வைத்து நோன்பு எடுக்கும் பழக்கம் உருவாயிற்று. ஆண்களும், பெண்களும் ஒன்றாக இணைந்து இந்த நோன்பு எடுக்க ஆலயத்திற்குச் செல்வதைக் காணலாம். கௌரீ சமேத கேதாரீஸ்வரராக விளங்கும் அர்த்தநாரீஸ்வரரை நோக்கி மனமுருகி பிரார்த்தனை செய்வதே இந்த கேதார கௌரீ விரதம்.

?தலைதிவசம் கொடுப்பதற்கு முன், வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடத்துவது சரிதானா?
– ஜெயராமன், சிதம்பரம்.

சரியில்லை. இறந்தவருடைய ஆத்மா பித்ருலோகத்தினைச் சென்றடைய ஒருவருட காலம் பிடிக்கிறது. தாய் அல்லது தந்தை எவரேனும் இறந்துவிட்டால் ஒரு வருட காலத்திற்கு எந்த சுபநிகழ்ச்சிகளையும் செய்வதில்லை. தீபாவளி, பொங்கல் உள்பட எந்தப் பண்டிகைகளையும் தலைதிவசம் முடியும் வரை கொண்டாடுவதில்லை. இறந்தவர்களின் நினைவாகவே இந்த ஒரு வருட காலமும் இருக்க வேண்டும் என்பதே இதற்குப் பொருள். ஆனால், இதில் சில விதிவிலக்குகளும் உண்டு. இறப்பு நிகழ்வதற்கு முன்னரே நிச்சயிக்கப்பட்ட திருமணத்திற்கு இந்த விதி பொருந்தாது. அதே போல திருமணத்திற்காகக் காத்திருக்கும் பெண் பிள்ளைகளுக்கும் தலைதிவசம் கொடுப் பதற்கு முன்பாக திருமணத்தை நடத்தலாம். பிரம்மச்சாரியாக இருக்கும் ஒருவனின் தாயோ அல்லது தந்தையோ இறந்து விட்டால், அவன் திருமணம் செய்து கொண்டு தம்பதியராக இணைந்து தலைதிவசம் கொடுப்பதும் குடும்பத்திற்கு நல்லது. ஆயுஷ்ய ஹோமம், சஷ்டி அப்த பூர்த்தி முதலான சாந்தி கர்மாக்களையும் செய்யலாம். இதனைத் தவிர்த்து கிரஹப்ரவேசம், குலதெய்வ வழிபாடு, காதுகுத்தல் உட்பட மற்ற சுபநிகழ்ச்சிகள் அனைத்தையும் தலைதிவசம் முடியும் வரை தவிர்க்க வேண்டியது அவசியம். அதே நேரத்தில் இறப்பு நிகழ்ந்த 16 நாட்களுக்குள் அதாவது, கரும காரியங்களைச் செய்து முடிக்கும் வரை எந்த ஒரு சுபநிகழ்ச்சியும் பங்காளிகள் உட்பட எவர் வீட்டிலும் செய்யக்கூடாது.

?எப்போதும் கடவுள் நினைவாகவே இருப்பவர்களை பக்திப் பழம் என்கிறார்களே! பக்திக்கும் பழத்துக்கும் என்ன சம்பந்தம்?
– மதிவாணன், அரூர்.

கனிதல் என்பது முதிர்தலின் அடையாளம். மொட்டு, மலர், காய், கனி என்ற வளர்ச்சியில் கனிதான் நிறைவான நிலை. அதற்குப் பிறகு உதிர்தல்தான். அப்படி உதிர்ந்தாலும், அந்தக் கனி மணலுக்குள் புதைய, அதன் விதை, அடுத்த மரத்தை உருவாக்கக் காத்திருக்கும். அதாவது, கனியையொப்ப மனப்பக்குவம் ஒருவருக்கு வருமானால், அவர் உதிர்தல் போன்ற எந்த நிலைக்கும் தயாராக இருப்பார். அதுவும் ஆன்மிகத்தால் கனிந்துவிட்டார் என்றால் அவரால் அவருடைய எல்லா கட்டத்திலும் ஏனைய அனைவருக்கும் நன்மைதான் விளையும். கனியின் மணம், சுவை, மீண்டும் விருட்சமாகக்கூடிய விதை எல்லாமே பிற அனைவருக்கும் பயன்படக் கூடியவை. எப்போதும் கடவுள் நினைவாக இருக்கும் பக்திப் பழங்களின் வாழ்க்கை முறையும் அப்படித்தான். பிறருக்காகவே மணம் பரப்பி, அவர்கள் வாழ்வில் சுவையூட்டி, அவர்களுடைய வம்சாவழியினருக்கும் பிரயோஜனப்படும் வகையில் வாழ்பவர்கள் அவர்கள். ஒரு பழத்துக்காக உலகையே சுற்றி வருவது என்பதும், அம்மையப்பரை வலம் வருவதும் ஒன்றுதான் என்ற புராண கால சம்பவத்திலிருந்தே பக்திக்கும் பழத்துக்கும் நெருக்கமான ஒற்றுமை இருந்திருக்கிறது என்பது புரியும். பூஜையில், இறைவனுக்குப் பழத்தை நிவேதனம் செய்கிறோமே!

?தாராளமாக இருப்பது நல்லதா? சிக்கனமாக இருப்பது நல்லதா?
– அஷோக் ரவி, அம்பத்தூர்.

ஆன்மிகத்தைப் பொறுத்தவரை சிக்கனமாகவும் இருக்க வேண்டும், தாராளமாகவும் இருக்க வேண்டும். எதில் தாராளம், எதில் சிக்கனம் என்பது முக்கியம். சிக்கனம் என்பது தேவையில்லாத செலவுகளை செய்யாமல் இருப்பது. தாராளம் என்பது அப்படி மிச்சப்படுகின்ற பணத்தை, தேவை உள்ளவர்களுக்குக் கொடுப்பது. தாராளம் இல்லாத சிக்கனம் பிறர் பொருளின் மீது ஆசையை உண்டாக்கும். சிக்கனம் இல்லாத தாராளம் வீண்பொருள் விரயத்தை ஏற்படுத்தும். எனவே சிக்கனமும் தாராளமும் ஒன்றுக்கொன்று இணைந்தவை என்பதை புரிந்து கொண்டால் நல்லது.

The post செவ்வாய்க்கிழமை நல்ல நாளா, இல்லையா? appeared first on Dinakaran.

Tags : Mars ,Navagrahas ,Ankaragan ,Saturn ,Raku ,Kedhu ,
× RELATED மரிக்கொழுந்து, மல்லிகை, செண்டு,...