×

நம்பிக்கை தரும் புடலை!

பல்வேறு இன்னல்களைச் சந்தித்து பயிர்களை விளைவித்து, விளைச்சல் எடுத்துவிடுகிறார்கள் வேளாண் பெருமக்கள். ஆனால் அவர்கள் விளைவித்த பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்வதில்தான் சிக்கல் ஏற்படுகிறது. சில நேரங்களில் விலை கிடைக்காமல், விளைபொருட்களை சாலையிலேயே கொட்டி விடுகிறார்கள். இதனால் மகசூல் எடுப்பது போல மார்க்கெட்டிங்கிலும் கவனம் செலுத்த வேண்டும். இவை இரண்டிலுமே தேர்ச்சி பெற்றவராய் இருக்கிறார் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே சின்னையன்குடிகாடு கிராமத்தை சேர்ந்த வெற்றிச்செல்வன். தோட்டத்தில் பந்தல் காய்கறிகளை அறுவடை செய்துகொண்டிருந்த வெற்றிச்செல்வத்தை ஒரு காலைப் பொழுதில் சந்திக்க சென்றிருந்தோம். அவர் பேசும்போது, எனக்கு படிப்பு சரியாக வராததால் சிறுவயதில் வயல் வேலைகளுக்கு செல்ல ஆரம்பித்து விட்டேன். இப்படித்தான் எனக்கு விவசாயம் அறிமுகமானது. வேறு இடங்களில் வேலைக்கு செல்வதை விட நாமே நமது தோட்டத்தில் காய்கறிகளைப் பயிரிடலாம் என யோசனை வந்தது. அதைத் தொடர்ந்து எங்களுக்கு சொந்தமான இரண்டரை ஏக்கரில், அரை ஏக்கர் நிலத்தில் புடலங்காய் மற்றும் வெண்டைக்காய் சாகுபடி செய்து வருகிறேன். இதுபோக வேலி ஓரங்களில் கொத்தவரங்காய் செடிகள் பயிரிட்டு அதில் இருந்தும் லாபம் பார்த்து வருகிறேன்.

மற்ற இடங்களில் வேலைக்கு சென்றால் கூலிதான் மிஞ்சும். அதுவே நமது நிலத்தில் காலையில் 2 மணிநேரம், மாலையில் 2 மணிநேரம் விவசாயம் பார்த்தாலே போதும். மற்ற நேரங்கள் மற்ற வேலைகளைப் பார்த்துக்கலாம். இத்தனை வசதிகள் இதில இருக்கு. சரியானபடி சாகுபடி செஞ்சா நிச்சயம் லாபம்தான். அதனாலயே எனது நிலத்தில் காய்கறிகளைப் பயிரிடலாம் என நினைத்து விவசாயத்தைக் கையில் எடுத்தேன். முதலில் நிலத்தை தயார் செய்ய ஆரம்பித்தேன். முதற்கட்டமாக மண்ணை நன்றாக மேலும், கீழுமாக உழுது சாண எரு அடித்து பயிரிடுவதற்கு தகுந்தபடி நிலத்தைத் தயார் செய்தேன்.

இந்த நிலத்தில் சீசனுக்கு தகுந்த காய்கறிகளான புடலை, வெண்டையைப் பயிரிட்டு இருக்கிறேன். அரை ஏக்கரில் வெண்டைக்காயும், அரை ஏக்கரில் புடலங்காய் சாகுபடியும் செய்து வருகிறேன். கடந்த வருசம் சுமார் 1 ஏக்கர் நிலத்தில் அரை ஏக்கர் புடலங்காய் மற்றும் அரை ஏக்கர் பாகற்காய் சாகுபடி செய்தேன். ரெண்டுமே 3 மாத பயிர்தான். புடலங்காய் சாகுபடியில் மட்டும் ரூ.1.80 லட்சம் வரை லாபம் கிடைச்சுச்சு. இப்பொழுது அதே 3 மாத பயிரான புடலங்காய் சாகுபடி செய்து இருக்கேன். பாகற்காய்க்கு பதிலா இப்போ வெண்டைக்காயை அரை ஏக்கர் நிலத்தில் மட்டும் பயிரிட்டு இருக்கேன். இந்த பருவத்தில சாகுபடி செய்து வரும் இக்காய்கறிகள் மூலமா நல்ல லாபத்தை ஈட்ட முடியும். ஒரே காய்கறிகளை சாகுபடி செய்யாம மாற்றி மாற்றி செய்யும்போது நிச்சயம் லாபம் எடுத்துடலாம். இந்த சீசனுல காய்கறிகள் விலை உச்சத்தில இருப்பதால் நல்ல லாபமும் பார்க்க முடியும்.சந்தை நிலவரத்தைப் பொறுத்தவரை 300 கிலோ வரை புடலங்காய் வந்தால் நல்ல விலை இருக்கும். அதிகமாக புடலங்காய் வரத்து இருந்தால் விலைவாசி குறைஞ்சிடும். கடந்த மாதம் பருவம் தவறி பெய்த மழையால் நாடு முழுவதும் இப்போ வரைக்கும் காய்கறிகளின் விலை அதிகரிச்சுக்கிட்டேதான் இருக்கு. அதனால் இந்த சீசனில் காய்கறிகளை நம்பி பயிரிடலாம்.

அரை ஏக்கர் நிலத்தில் பயிரிட்ட வெண்டைக்காய் இப்போ பயிரிட்டு 1 மாசத்தை கடந்திடுச்சு. ஆரம்பத்தில், இரண்டு நாளுக்கு ஒருமுறை அறுவடை செய்தேன். அப்பவே 15-20 கிலோ வரை வெண்டை கிடைச்சது. இப்போ 60-80 கிலோ வரை கிடைக்குது. ஒரு வாரத்துக்கு முன்னாடி 1 கிலோ வெண்டைக்காய் ரூ.35-40 வரைக்கும் விற்றது. அந்த வகையில் ஒரு கிலோ வெண்டைக்காயை ரூ.40க்கு மார்க்கெட்லயும், நேரடியாக வரவங்களுக்கு ரூ.35க்கும் விற்றேன். இதன் மூலம் இந்த ஒரு மாதத்தில் மட்டுமே ரூ.20 ஆயிரம் லாபம் கிடைத்தது. அடுத்த இரண்டு மாதத்திற்கு விளைச்சல் அதிகமாக வரும். அப்படி விளைச்சல் அதிகரித்தால் மேலும் ரூ.80 முதல் 90 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும். இந்த லாபம் கடந்த ஆண்டை விட தற்போது அதிகம்தான்.

அரை ஏக்கரில் பயிரிட்ட புடலங்காயிலயும் இப்போ அறுவடை செஞ்சுக்கிட்டு இருக்கேன். ஒரு கிலோ புடலங்காய் மார்க்கெட் விலைக்கு ரூ.30லிருந்து 40 வரை விற்பனை செய்துக்கிட்டு இருக்கேன். இன்னும் 2 மாதம் அறுவடை இருக்கும். அதனால எப்படி பார்த்தாலும் காய்கறி விற்பனையில எனக்கு மாதம் ரூ.35 லிருந்து ரூ.40 ஆயிரம் வரைக்கும் லாபம் கிடைச்சிடும். புடலங்காய்க்கு பந்தல் செலவு, பராமரிப்பு செலவுன்னு ரூ.25 ஆயிரம் ஆச்சு. மொத்த அறுவடையில் கிடைக்கும் மகசூல் மூலமா பல மடங்கா லாபம் பார்த்துடுவேன்.

இப்போ புடலங்காயும், வெண்டைக்காயும் ஒரே நேரத்தில் பயிரிட்டு ஒரு மாதத்தை கடந்துடுச்சு. கடந்த ஆண்டை விட குறைந்த அளவிலான நிலத்தில்தான் பயிரிட்டு உள்ளேன். ஆனால் சற்று அதிகமான லாபம்தான் கிடைச்சுக்கிட்டு இருக்கு. வரும் இரண்டு மாதங்களில் இரண்டிலுமே சாகுபடி அதிகரிக்கும். ஆனால் கனமழை பெய்தால் காய்கறிகள் முற்றிலும் பாதிக்கப்படும். வானிலை மாற்றத்தைப் பொறுத்துதான் லாபம் ஏற்ற இறக்கமாக இருக்கும். ஆனால் மற்ற சாகுபடியை விட காய்கறி சாகுபடி சிறந்தது. நான் நெல் மற்றும் உளுந்தும் சாகுபடி செய்திருக்கிறேன். அப்போது 15 ஆயிரம், 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாவதே அரிதாக இருக்கும். அதுவும் மழை வந்தால் அவ்வளவுதான்.

ஆனால் காய்கறி சாகுபடியில், மழை வந்தாலும், வராவிட்டாலும் ஓரளவுக்கு நிறைவான லாபம் கிடைக்கும். மழையால் காய்கறி முற்றிலும் அழுகாமல் வழக்கத்தில் உள்ள அறுவடையை விட சற்று குறைந்தால் விலைவாசி அதிகரிக்கும். அதற்கேற்ற லாபம் கிடைக்கும். அந்த நிலைதான் தற்போது ஏற்பட்டுள்ளது. காய்கறி சாகுபடியில் முக்கியமாக கவனிக்க வேண்டியது பூச்சி தாக்குதல்தான். இதை மட்டும் முறையாக கவனித்தோம் என்றால் நல்ல லாபம் ஈட்டலாம்.

வேறு இடத்தில் 8 மணிநேரம் வேலை பார்த்து கிடைக்கிற சம்பளத்தை விட என் வயலில் 4 மணி நேரம் வேலை பார்த்தாலே போதும். மாதம் ரூ.40 ஆயிரம் வரைக்கும் கிடைச்சிடும். இங்கு நான் மட்டும் இல்லாம மற்ற காய்கறி விவசாயிகள் சேர்ந்து அறுவடை செய்த காய்கறிகளை எடுத்துக்கிட்டு மொத்தமா ஒரே வண்டியில சந்தைக்கு செல்வோம். இதனால் வண்டி வாடகைச் செலவும் குறையும். லாபமும் அதிகம் கிடைக்கும். மழைக்காலத்துல கடலை சாகுபடி செய்வேன். கொஞ்ச இடத்துல மட்டும் புடலங்காய் சாகுபடி செய்வேன். காரணம் அதிக மழை பெஞ்சு பாதிச்சா கொஞ்சம்தானே நஷ்டம் ஆகும். இதுமட்டும் இல்லாம புடலங்காய் பந்தலுக்கு இடையில ஊடுபயிரா கீரை பயிரிடுவேன். இது அப்பப்போ ஆகும் செலவுக்கு உதவும்’’ என நம்பிக்கையுடன் பேசுகிறார்.
தொடர்புக்கு:
வெற்றிச்செல்வன் – 82488 75688

The post நம்பிக்கை தரும் புடலை! appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED ஆயுர்வேதத் தீர்வு!