×

முறைகேடு புகாரில் திரிணாமுல் தலைவர்கள் கைது விவகாரம்; மற்றவர்கள் பணத்தில் ஒரு கப் டீ கூட குடிக்கவில்லை: மோடியை மறைமுகமாக கிண்டல் செய்த மம்தா

கொல்கத்தா: திரிணாமுல் தலைவர்கள் சிலர் முறைகேடு புகாரில் சிக்கியுள்ள நிலையில், மற்றவர்கள் பணத்தில் ஒரு கப் டீ கூட குடித்ததில்லை என்று மம்தா பானர்ஜி கூறினார். மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் சிலர், பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ளனர். பாஜக, இடதுசாரி எதிர்கட்சிகள், திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகளை திருடர்கள் என்று விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் திரிணாமுல் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி அளித்த பேட்டியில், ‘நான் ஒரு பைசா கூட யாரிடமும் வாங்கவில்லை. நான் யாரிடமும் எதுவும் கேட்கவில்லை.

மற்றவர்கள் பணத்தில் ஒரு கப் டீ கூட குடிக்கவில்லை. முன்னாள் எம்பி என்ற அடிப்படையில் எனது ஓய்வூதிய சம்பளத்தை கூட பெறுவதில்லை. கடந்த 2011ல் இடதுசாரி கூட்டணியை தோற்கடித்து திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு, ஒரு கோடி போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை ரத்து செய்யப்பட்டன. இடதுசாரி கூட்டணி அரசின் ஊழல் அம்பலமானது. தற்போது சிலர் வேண்டுமென்றே பிரச்னைகளை உருவாக்கி வருகின்றனர்.

கடந்த எட்டு ஆண்டுகளாக மாநில அரசின் நிர்வாக அமைப்பை சீர்படுத்தி உள்ளோம். போலி ரேஷன் கார்டுகளை ரத்து செய்ததால், கொரோனா காலங்களில் பட்டினி மரணங்கள் எதுவும் நடக்கவில்லை. இடதுசாரி கூட்டணி ஆட்சியின் போது, பீர்பஹாரி பகுதி மக்களை நான் எம்பியாக சந்தித்த போது, அவர்கள் எறும்புகளை பிடித்து சாப்பிடுவதை அறிந்து திகைத்துப் போனேன். என்னால் முடிந்தவரை எனது பணியை செய்து வருகிறேன். ஆனால், மற்றவர்களைப் போல என்னைப் புகழ்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை. மைதானத்திற்கு என் பெயரை வைக்கவில்லை’ என்றார். அகமதாபாத்தில் கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு பிரதமர் மோடியின் பெயர் வைக்கப்பட்டுள்ளதால், அதனை கிண்டல் செய்யும் விதமாக மம்தா பானர்ஜின் பேச்சு இருந்ததாக பார்க்கப்படுகிறது.

The post முறைகேடு புகாரில் திரிணாமுல் தலைவர்கள் கைது விவகாரம்; மற்றவர்கள் பணத்தில் ஒரு கப் டீ கூட குடிக்கவில்லை: மோடியை மறைமுகமாக கிண்டல் செய்த மம்தா appeared first on Dinakaran.

Tags : Trinamool ,Mamata ,Modi ,Kolkata ,Trinamul ,Dinakaran ,
× RELATED பாஜக மைனாரிட்டி அரசு ஆகிவிட்டது...