×

சுங்கச்சாவடிகள் தேவையில்லை என ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறோம் : அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!!

சென்னை : சுங்கச்சாவடிகள் தேவையில்லை என ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருவதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடரின் கேள்வி – பதில் நேரத்தின் போது பேசிய சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, “புதுக்கோட்டை நகராட்சி பழைய பேருந்து நிலையம் முதல் அறந்தாங்கி சாலையை 4 வழிச்சாலையாக தரம் உயர்த்தி கொடுத்த முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருந்து பிருந்தாவனம், அண்ணாசாலை வழியாக மாலையிடு வரை செல்லும் சாலை நகரத்தின் மைய பகுதியில் உள்ளது. பொதுமக்கள் அதிகளவில் இந்த சாலையில் செல்ல வேண்டி உள்ளது. ஆகவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் மருத்துவக் கல்லூரிக்கு செல்லும் ஆம்புலன்ஸ் மற்றும் பொதுமக்கள் வாகனங்கள் தடையின்றி செல்லவும் மேற்கொண்ட சாலையில் 4 வழிச்சாலையாக்க கோரிக்கை விடுகிறோம்,” என்று தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு,”தமிழ்நாட்டில், 7 மீட்டர் கொண்ட மாநில நெடுஞ்சாலையை, 10 மீட்டராக்கி தேசிய நெடுஞ்சாலையாக மாற்றுகின்றனர். அதில் சுங்கச்சாவடிகளை அமைக்கின்றனர், சுங்கச்சாவடிகள் அமைக்கக் கூடாது கூடாது என ஒன்றிய அரசுக்கு பலமுறை வலியுறுத்தித் தொடர்ந்து கடிதம் எழுதிவருகிறோம். புதிய அரசு பொறுப்பேற்ற உடனே முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டம் என்பது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் அடிப்படையில் தான் மாநில நெடுஞ்சாலைகள் 4 வழிச்சாலை ஆக்கப்படுகின்றன.

இதில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்படுவதில்லை. இதற்காக தான் சட்டமன்ற உறுப்பினர் நன்றி தெரிவித்தார். பொதுவாக நகர பகுதிகளில் 2 வகையான சாலைகள் உள்ளது. ஒன்று நகராட்சிக்கு தொடர்புடையது மற்றொன்று மாநில சாலைகள் ஆகும். முத்துராஜா குறிப்பிட்ட சாலை எந்த சாலை என்பது குறித்து ஆய்வு செய்து விரைவில் முதலமைச்சரின் அனுமதியோடு சாலையை 4 வழிச்சாலை ஆக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்,”என்றார்.

The post சுங்கச்சாவடிகள் தேவையில்லை என ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறோம் : அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!! appeared first on Dinakaran.

Tags : Union Government ,Minister ,AV Velu ,Chennai ,Minister AV Velu ,Tamil Nadu ,
× RELATED அதிமுக வாக்குகளும் திமுகவுக்குதான் கிடைக்கும்: அமைச்சர் எ.வ.வேலு பேட்டி