டெல்லி: ராஜ்பவனுக்கு வெளியே பெட்ரோல் குண்டு வீசிய வினோத்தை அங்கேயே போலீஸ் மடக்கிப்பிடித்தது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆளூர் ஷா நவாஸ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் அலுவல்கள் இன்று வழக்கம்போல் நடைபெற்று கொண்டிருந்த நிலையில், மக்களவையின் பார்வையாளர்கள் மடத்தில் அமர்ந்திருந்த இருவர், திடீரென்று அவைக்குள் குதித்து களேபரத்தில் ஈடுபட்டனர்.
சர்வாதிகாரம் ஒழிக என்ற முழக்கங்களை எழுப்பியபடி, அவைக்குள் தாவிக் குதித்து தப்பியோட முயன்றவர்களை எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தியதாகவும், அப்போது அவர்கள் கையில் வைத்திருந்த மஞ்சள் நிறப் புகைக் குண்டுகளை வீசியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து மக்களவை ஒத்திவைக்கப்படுவதாக ஓம் பிர்லா அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இந்த தாக்குதலால் நாடாளுமன்றம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ராஜ்பவனுக்கு வெளியே பெட்ரோல் குண்டு வீசிய வினோத்தை அங்கேயே போலீஸ் மடக்கிப்பிடித்தது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆளூர் ஷா நவாஸ் தெரிவித்துள்ளார். போலீஸ் மடக்கிப் பிடித்த பிறகும், சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று ஆளுநரும் பாஜகவினரும் ஒப்பாரி வைத்தனர். இன்று நாடாளுமன்றம் உள்ளேயே தாக்குதல் நடந்துள்ளது; இதற்கு என்ன பதில்? யார் பொறுப்பு? சந்தி சிரிக்கும் பாதுகாப்பு! என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், 2 இளைஞர்களின் அத்துமீறலால் நாடாளுமன்றத்தில் கூச்சல், குழப்பம், பதற்றமான நிலைமை ஏற்பட்டது என்று சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். அத்துமீறி அவையில் நுழைந்த இளைஞர்கள் இந்தியில் முழக்கமிட்டனர். நாடாளுமன்றத்தில் இளைஞர்கள் அத்துமீறலில் ஈடுபட்டதற்கு பாதுகாப்பு குறைபாடே காரணம். ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் அத்துமீறல் நடந்துள்ளதால் அதிர்ச்சி அடைந்தனர் என்று அவர் கூறியுள்ளார்.
The post இன்று நாடாளுமன்றம் உள்ளேயே தாக்குதல் நடந்துள்ளது; இதற்கு என்ன பதில்? யார் பொறுப்பு? சந்தி சிரிக்கும் பாதுகாப்பு!: ஆளூர் ஷாநவாஸ் கண்டனம் appeared first on Dinakaran.