×
Saravana Stores

விண்ணை பிளக்கும் அரோகரா முழக்கத்துடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலை: விண்ணை பிளக்கும் அரோகரா முழக்கத்துடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப விழாவை ஒட்டி மகா தீபம் ஏற்றப்பட்டது. ரோகரா’ கோஷம் விண்ணை பிளக்க 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டது. ஏராளமான மக்கள் விண்ணை பிளக்கும் அரோகரா முழக்கத்துடன் தரிசனம் செய்து வருகின்றனர்.

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபவிழாவையொட்டி இன்று அதிகாலை அண்ணாமலையார் கோயில் வளாகத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என பக்தியுடன் தரிசனம் செய்தனர். இதையடுத்து தீபவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது. மகாதீபத்தை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர்.

‘நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம்’ திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில். இக்கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா, கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து விமரிசையாக நடந்து வருகிறது. தினமும் காலையிலும் இரவிலும் பஞ்சமூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளினர்.

முக்கிய நிகழ்வுகளான கடந்த 22ம்தேதி வெள்ளி தேரோட்டமும், 23ம்தேதி மகா தேரோட்டமும் வெகு விமரிசையாக நடந்தது. தீபத்திருவிழா உற்சவத்தின் 10ம் நாளான இன்று, மகாதீப பெருவிழா கோலாகலமாக தொடங்கியது. அதிகாலை உண்ணாமுலையம்மன், அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் அண்ணாமலையார் கருவறை முன்பு அதிகாலை 4 மணியளவில் ‘ஏகன் அநேகன்’ எனும் தத்துவத்தை உணர்த்தும் வகையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கலெக்டர் முருகேஷ், எஸ்பி கார்த்திகேயன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கோயிலுக்குள் பக்தர்கள் அதிகாலை 2 மணி முதல் அனுமதிக்கப்பட்டனர். அண்ணாமலையார் சன்னதியில் ஏற்றப்பட்ட பரணி தீபத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு ஒவ்வொரு சன்னதியாக கொண்டு செல்லப்பட்டது.

வைகுண்ட வாயில் வழியாக மகா தீபம் ஏற்றப்படும் 2,668 அடி உயர மலைக்கு பரணி தீபம் காண்பிக்கப்பட்டது. பின்னர் 3ம் பிரகாரத்தில் பரணி தீபம் பக்தர்களுக்கு காட்சியளித்தது. அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமுலையம்மனுக்கு அரோகரா’ என முழக்கமிட்டு பரணி தீபத்தை தரிசனம் செய்தனர்.

ஆண்டுக்கு ஒருமுறை சில நிமிடங்கள் மட்டுமே காட்சிக்கொடுக்கும் அர்த்தநாரீஸ்வரர் கோயில் கொடிமரம் முன்பு ஆனந்த தாண்டவத்துடன் எழுந்தருளி காட்சியளித்தார். அப்போது, கொடிமரம் முன்பு அகண்டத்தில் தீபம் ஏற்றியதும், 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் அண்ணாமலையாரின் ஜோதி வடிவமான ‘மகா தீபம்’ ஏற்றப்பட்டது. இன்று மாலை மலை மீது ஏற்றப்படும் மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் காட்சியளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை எந்த ஆண்டும் இல்லாத அளவில், மகாதீபத்தை தரிசிக்க தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் திரண்டு வருகின்றனர். சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மகாதீபத்தை தரிசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் மகாதீப விழாவை தரிசிக்க, இன்று மதியம் 2 மணியில் இருந்து கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கட்டளைதாரர், உபயதாரர் அனுமதிச் சீட்டு மற்றும் ஆன்லைன் கட்டண தரிசன டிக்கெட் பெற்றிருப்போர் மட்டும் ராஜகோபுரம் அடுத்துள்ள திட்டிவாசல் வழியாக அனுமதிக்கப்பட்டனர்.

அவசரகால மீட்பு பணிக்காக ஆம்புலன்ஸ், மொபைல் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. கோயில் மற்றும் கிரிவலப்பாதையில் சிறப்பு மருத்துவ முகாம்கள், முதலுதவி மையங்கள், நடமாடும் மருத்துவ குழுக்கள், காவல் உதவி மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று காலை முதலே பக்தர்கள் திருவண்ணாமலையில் திரள தொடங்கினர். மாலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். அவர்கள் மலையை சுற்றி கிரிவலமாக வந்தனர்.

மேலும், கூடுதல் டிஜிபி (சட்டம் ஒழுங்கு) அருண், வடக்கு மண்டல ஐஜி கண்ணன் ஆகியோர் தலைமையில், 5 டிஐஜிக்கள், 30 எஸ்பிக்கள் உள்பட 14 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மலையேறும் பக்தர்களின் பாதுகாப்புக்காக 120 சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் (எஸ்டிஎப்) பணியில் உள்ளனர். காணாமல் போகும் குழந்தைகளை கண்டறிய வசதியாக செல்போன் எண்ணுடன் கூடிய ’ரிஸ்ட் பேண்ட்’ குழந்தைகளின் கைகளில் கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கூட்ட நெரிசலில் திருட்டு செயின் பறிப்பு போன்றவற்றில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்காணிக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க ‘பேஸ் டிராக்கிங்’ எனும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மகா தீபத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை நகரம் விழாக்கோலமாக காட்சியளிக்கிறது.

The post விண்ணை பிளக்கும் அரோகரா முழக்கத்துடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Maha ,Deepam ,Tiruvannamalai Annamalaiyar Temple ,Arokara ,Tiruvannamalai ,Thiruvannamalai Annamalaiyar ,Maha Deepam ,
× RELATED மஹா பத்மாடவி ஸம்ஸ்தா