×

திருவள்ளூரில் நாளை முதல்வர் பங்கேற்கும் திமுக பொதுக்கூட்டத்தில் தவறாமல் பங்கேற்க வேண்டும்: நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அழைப்பு

ஆவடி: திருவள்ளூரில் நாளை முதல்வர் பங்கேற்கும் திமுக பொதுக்கூட்டத்தில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று நிர்வாகிகள், தொண்டர்களுக்கு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர். இதுகுறித்து அமைச்சரும் மத்திய மாவட்டச் செயலாளருமான சா.மு.நாசர், மேற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.சந்திரன் எம்எல்ஏ மற்றும் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ரமேஷ்ராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் தொடர்ந்து வஞ்சித்து வரும் ஒன்றிய அரசை கண்டித்து, திமுக சார்பில் நாளை மாலை 4.30 மணியளவில் “தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும்” என்ற ஒன்றிய அரசுக்கு எதிரான கண்டனப் பொதுக்கூட்டங்கள் மாவட்ட கழகங்கள் சார்பில் நடைபெறுகிறது. தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டின் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்து நம்மை இரண்டாம் தர குடிமக்களாக் நினைக்கும் மோடி அரசின் சதியை மக்களிடம் எடுத்துக் கூறும் விதமாகவும், மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தித் திணிப்பை மேற்கொள்வதை மக்களுக்கு புரியவைக்கும் விதமாகவும், மாவட்டத்தில் உள்ள தலைநகரங்களில் இந்த பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது.

திருவள்ளூரில் தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை கலந்துகொண்டு கண்டன உரையாற்றுகிறார். ஒன்றிய அரசு செய்யும் அநீதிகள் குறித்து முதலில் குரல் கொடுப்பது இந்தியாவிலேயே ஒரே முதல்வர் தமிழ்நாடு முதல்வர்தான். தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் கடல் கடந்து வாழும் தமிழர்களுக்கும் பிரச்னை இருந்தாலும் போராட்டத்தில் முதலில் இருப்பதும் திமுகதான். பாஜ ஆளாத மாநிலங்களை வஞ்சிக்கும் மோடி அரசைக் கண்டித்து எழுப்பப்படும் உரிமைக் குரல் எப்போதும் தமிழ்நாட்டில் இருந்துதான் முதலில் ஒலிக்கும்.

அப்படித்தான் இப்போதும் கள நிலவரம் இருக்கிறது. அதிலும் சிறப்பம்சமாக கழகத்தின் சார்பாக தமிழ்நாடு முழுவதும் கண்டனப் பொதுக் கூட்டங்கள் நடைபெற்றாலும், அதற்கு தலைமையாய் திருவள்ளூரை தேர்வு செய்து, நம்முடைய கழகத்தினருடனும், மக்களுடனும் சேர்ந்து முதல்வர், ஒன்றிய அரசுக்கு எதிராக ஜனநாயகக் குரலை எழுப்ப இருப்பது நமக்கான பெருமை. ஆகையால் இந்தக் கண்டனப் பொதுக்கூட்டத்தில் கழகத்தின் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் நாளை தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளனர்.

The post திருவள்ளூரில் நாளை முதல்வர் பங்கேற்கும் திமுக பொதுக்கூட்டத்தில் தவறாமல் பங்கேற்க வேண்டும்: நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அழைப்பு appeared first on Dinakaran.

Tags : DMK general meeting ,Chief Minister ,Tiruvallur ,Avadi ,DMK ,Minister ,Central District ,S.M. Nassar ,Western District ,S.Chandran… ,meeting ,
× RELATED தமிழகத்தில் 88 உதவி கமிஷனர்கள் பணியிட...