×

திருப்பதி கோயிலில் ஏழுமலையானுக்கு 17 வகை மலர்களால் புஷ்ப யாகம்


திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மலையப்ப சுவாமிக்கு 17 வகையான மலர்களால் புஷ்ப யாகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தெலுங்கில் கார்த்திகை மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் புஷ்ப யாகம் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று புஷ்ப யாகம் நடைபெற்றது. இதற்காக பாபவிநாசம் சாலையில் உள்ள தோட்டத்துறை அலுவலகத்தில் இருந்து, பல வண்ண மலர்கள் கோயிலுக்கு ஊர்வலமாக ஸ்ரீவாரி சேவா தன்னார்வலர்கள் பக்தர்கள், தேவஸ்தான ஊழியர்கள் எடுத்து வந்தனர்.

பின்னர் கோயிலில் உள்ள சம்பங்கி மண்டபம் என அழைக்கப்படும் கல்யாண மண்டபத்தில் தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு, ஜீயர்கள் முன்னிலையில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து வேத பண்டிதர்கள் சதுர்வேத பாராயணம் படிக்க சர்வ பூபால வாகனத்தில் கொலு வைக்கப்பட்ட தேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு சாமந்தி, மல்லி, முல்லை, தாழம்பூ, ரோஜா, உள்பட 17 வகையான மலர்கள், துளசி, மருவம், வில்வம் போன்ற 6 இலைகளைக் கொண்டு புஷ்ப யாகம் நடத்தப்பட்டது. சுமார் 9 டன் மலர்களால் இந்த புஷ்ப யாகம் நடைபெற்றது.

புஷ்ப யாகத்தையொட்டி ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் கல்யாண உற்சவம், வசந்த உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் ஆகியவை ரத்து செய்யப்பட்டது. இதில் கட்டண டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டும் தரிசனம் செய்தனர்.

* 3.79 கோடி காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 73,558 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 32,675 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் 3.79 கோடி காணிக்கை செலுத்தியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமையான இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 25 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். 300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

The post திருப்பதி கோயிலில் ஏழுமலையானுக்கு 17 வகை மலர்களால் புஷ்ப யாகம் appeared first on Dinakaran.

Tags : ALUMALAYAN ,TIRUPPATI TEMPLE ,Thirumalai ,Tirupathi Elumalayan Temple ,Malayappa Swami ,Swami ,Pushba Yakam ,Tiruvonam Star ,Karthigai ,Tirupathi Temple ,
× RELATED ஒரேநாளில் அதிக `பாலோயர்ஸ்’ ஆசைக்காக...