திருமலை: உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டந்த பிப்ரவரி மாதம் 19.06 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அவர்கள் உண்டியலில் காணிக்கையாக ₹111.71 கோடியை செலுத்தியுள்ளனர். 95.43 லட்சம் லட்டுகளை பக்தர்கள் வாங்கி சென்றுள்ளனர். மேலும் 6.56 லட்சம் பக்தர்கள் மொட்டையடித்து தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர்.
திருமலையில் நேற்று நிருபர்களிடம் தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா கூறியதாவது:
கோடை விடுமுறையையொட்டி ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் செய்துள்ளோம். இதற்காக ஏப்ரல் முதல் ஜூலை வரை பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் விஐபி, வாணி, சுற்றுலா ஒதுக்கீடு, மெய்நிகர் சேவைகள் மற்றும் ₹300 தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கை குறைத்து வழங்கப்பட்டுள்ளது. திருமலையில் சுமார் 7,500 அறைகள் உள்ளன. இதில் 45 ஆயிரம் பேருக்கு போதிய இடவசதி உள்ளது. 85 சதவீத அறைகள் சாதாரண பக்தர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
வரும் 20ம் தேதி முதல் 24ம் தேதி வரை ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர தெப்பல் உற்சவம் நடைபெற உள்ளது. இரவு 7 முதல் 8 மணி வரை தெப்ப குளத்தில் சுவாமியும், தாயாரும் பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளனர். வரும் 8ம் தேதி கோகர்ப்ப தீர்த்தத்தில் க்ஷேத்திர பாலகருக்கு மகாசிவராத்திரி உற்சவம் நடைபெறும்.
இவ்வாறு தெரிவித்தார்.
The post திருப்பதியில் ஒரே மாதத்தில் 95.43 லட்சம் லட்டு விற்பனை: ரூ.111.71 கோடி காணிக்கை கிடைத்தது appeared first on Dinakaran.