திருப்பதிக்கு சென்றுவிட்டு திரும்பியபோது பைக் மீது கார் மோதி ஓட்டல் உரிமையாளர் உள்பட 3 பேர் பலி

*மயிலம் அருகே பரிதாபம்

மயிலம் : சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் நள்ளிரவில் பைக் மீது கார் மோதிய விபத்தில் ஓட்டல் உரிமையாளர் உள்பட 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே பேரணி கிராமத்தை சேர்ந்தவர்கள் பூபாலன்(45), இவர் அதே பகுதியில் பங்க் கடை நடத்தி வந்தார். இதே பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தவர் ஐயப்பன்(35). நண்பர்களான இருவரும் புரட்டாசி சனிக்கிழமை தினமான நேற்றுமுன்தினம் திருப்பதிக்கு பேருந்தில் சென்றுவிட்டு, மீண்டும் ஊர் திரும்பினர். நள்ளிரவு 12 மணி அளவில் கூட்டேரிப்பட்டில் இறங்கி அங்கு நிறுத்தி வைத்திருந்த பைக் மூலம் பேரணி நோக்கி சென்றனர்.

மயிலம் அருகே விளங்கம்பாடி சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் ஒன்று எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையை கடந்த பைக் மீது மோதி, அங்குள்ள தடுப்புக்கட்டை மற்றும் எதிர்புறம் சென்று கொண்டிருந்த பூபாலன் பைக் மீதும் மோதி விபத்துக்குள்ளானது. இதில், சாலையை கடக்க முயன்ற விழுப்புரம் மாவட்டம் மாம்பழப்பட்டை சேர்ந்த தெய்வசிகாமணி மகன் சார்லஸ்(39), பைக்கில் சென்ற ஐயப்பன் மற்றும் பூபாலன் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் இதுகுறித்து மயிலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு காரை விட்டு தப்பி சென்றவரை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் விளங்கம்பாடி பகுதி திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post திருப்பதிக்கு சென்றுவிட்டு திரும்பியபோது பைக் மீது கார் மோதி ஓட்டல் உரிமையாளர் உள்பட 3 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: