×

திருப்பத்தூர் மாவட்டத்தில் 5 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்

*எஸ்பி தலைமையில் போலீஸ் ரெய்டு *ஒரே நாளில் 20 பேர் அதிரடி கைது

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டத்தில் எஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடத்திய அதிரடி சாராய வேட்டையில் 5 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் கள்ளச் சாராயம் விற்ற 20 பேர் கைது செய்யப்பட்டனர்.திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று எஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில் பயிற்சி பெற்ற போலீசார் 30 பேர் கொண்ட குழு மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, தமிழக ஆந்திர எல்லை உள்ளிட்ட பகுதிகளில் அதிரடி சாராய வேட்டை நடத்தினர்.
அதில் பல்வேறு பகுதிகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்த கள்ளச்சாராயங்கள் மற்றும் ஊறல்கள், வெளிமாநில மது பாட்டில்கள், சாராய பாக்கெட்டுகள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. அதில் 20பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 10க்கும் மேற்பட்ட பைக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து எஸ்பி பாலகிருஷ்ணன் கூறுகையில்: திருப்பத்தூர் மாவட்டம் ஒரு துளி சாராயம் இல்லாத மாவட்டமாக உருவாக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது சாராயத்தை முற்றிலும் ஒழிக்க 30 போலீசார் கொண்ட தனி குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்டங்களில் நாள்தோறும் அதிரடி சாராயம் வேட்டை நடத்தி வருகின்றனர்.

இதில் சாராய வேட்டை ஆனது நேற்று முதல் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெறும். பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் சாராயம் மற்றும் கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்தால் உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண்ணிற்கு தகவல் தெரிவித்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். தகவல் தெரிவிப்பவரின் ரகசியம் காக்கப்படும். எனவே பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றார்.

மேலும், இந்த சாராய ஆபரேஷன் என்பது தொடர்ந்து நடைபெறும். சாராய வழக்கில் பிடிபட்டால் அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.
எனவே சாராய வியாபாரிகள் மனம் திருந்தி வாழ்கிறோம் என்று எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்தால் அவர்களுக்கு தேவையான உதவிகளும், கால்நடை வளர்ப்பு, அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

The post திருப்பத்தூர் மாவட்டத்தில் 5 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Tirupattur district ,Tirupathur ,Tirupathur district ,Dinakaran ,
× RELATED திருப்பத்தூர் மாவட்டத்தில் காலை 9...