×

புலி வேட்டையில் ஈடுபட்ட பவாரியா கும்பலுடன் தொடர்பு மத்தியபிரதேசத்தில் கைதானவரிடம் நீலகிரியில் வைத்து விசாரணை

ஊட்டி : நீலகிரியில் புலி வேட்டையில் ஈடுபட்ட பவாரியா கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் மத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட நபரை நீலகிரியில் புலி வேட்டை நடைபெற்ற பகுதிக்கு நேரில் அழைத்து வந்து மத்திய பிரதேச மாநில வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.பவாரியா பழங்குடியினத்தை சேர்ந்த கும்பல் மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு உள்ளனர். இவர்கள் வீடுகளை உடைத்தும், நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களை பின்தொடர்ந்து சென்றும் கொள்ளை அடித்துவிட்டு கொடூரமாக கொலை செய்வது இவர்கள் பாணி. புலி உள்ளிட்ட வனவிலங்குகளின் உடல் பாகங்களுக்கு சீன மார்க்கெட்டில் நல்ல விலை உள்ளது. இதனால் இக்கும்பல் புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடி கடத்தும் சம்பவங்களிலும் ஈடுபடுகின்றனர்.

இதற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட பொறி மற்றும் இரும்பு ஈட்டிகளை பயன்படுத்தி வேட்டையாடுகின்றனர். இந்த வகையில் வேட்டையாடுவதில் வல்லவர்கள் ஆவார்கள். மன்னர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் பழங்காலம் தொட்டே வேட்டையாடுவதற்கு இவர்களை பயன்படுத்தி வந்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் சத்தியமங்கலத்தில் வைத்து பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ரத்னா (40), மங்கல் (28), கிருஷ்ணன் (59) மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராம்சந்தர் (50) ஆகிய 4 பேர் கொண்ட கும்பலை வனத்துறையினர் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து புலி தோல், நகம், எலும்பு உள்ளிட்டவைகள் கைப்பற்றப்பட்டன. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பவாரியா கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் என்பதும், நீலகிரி வனப்பகுதியில் புலி வேட்டையாடியதும் அவற்றின் உடல் பாகங்களை விற்பனை செய்வதற்காக சாலையோரம் கூடாரம் அமைத்து தங்கி இருந்ததும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து புலியை வேட்டையாடியதாக கூறப்படும் நீலகிரி வனப்பகுதியில் குற்றவாளிகளை நேரில் அழைத்து வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதில் அடர்ந்த வனப்பகுதியில் பதுக்கி வைத்திருந்த புலியை வேட்டையாட பயன்படுத்திய பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பொறி (ஜா டிராப்) மற்றும் இரும்பினால் ஆன இடுக்கி உள்ளிட்டவைகள் கைப்பற்றப்பட்டது. இந்நிலையில், அண்மையில் பவாரியா கும்பலை சேர்ந்த கல்ஹா என்பவர் மகாராஷ்டிராவிலும், புஜாரி என்பவர் மத்திய பிரதேசத்திலும் கைது செய்யப்பட்டனர். இதில் புஜாரி என்பவரிடம் மத்திய பிரதேச மாநில வனத்துறையினர் நடத்திய விசாரணையில் நீலகிரியில் புலி வேட்ைடயில் ஈடுபட்ட பவாரியா கும்பலுடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து மத்திய பிரதேசத்தை சேர்ந்த குழுவினர் புஜாரியை, நீலகிரியில் புலி வேட்டை நடந்த பகுதியில் நேரில் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் அவரை மீண்டும் மத்திய பிரதேசத்திற்கு அழைத்து சென்றனர். விசாரணையின்போது நீலகிரி கோட்ட மாவட்ட வன அலுவலர் கௌதம், முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் அருண்குமார், தலைமையிட உதவி வன பாதுகாவலர் தேவராஜ் மற்றும் வனத்துறையினர் உடனிருந்தனர்.

இது குறித்து மாவட்ட வன அலுவலர் கௌதம் கூறுகையில், ‘‘கடந்த பிப்ரவரி மாதம் அவலாஞ்சி பகுதியில் பவாரியா கும்பலால் புலி வேட்டையாடப்பட்டு புலி தோலினை எடுத்து சென்றனர். அந்த தோலினை அவர்கள் சத்தியமங்கலம் பகுதியில் விற்பனை செய்ய முற்பட்டபோது வனத்துறையால் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தது.

பவாரியா கும்பலுடன் புஜாரி மற்றும் கல்ஹா என்பவர் மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசத்தில் கைதாகி இருந்தனர். இதில் புஜாரி நீலகிரியில் புலி வேட்டையில் ஈடுபட்ட கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக தெரிவித்ததன் அடிப்படையில் மத்திய பிரதேச குழு அவரை நீலகிரி மாவட்டம், எமரால்டு பகுதிக்கு அழைத்து வந்து விசாரணை செய்து பின் மத்திய பிரதேசத்திற்கு அழைத்து சென்றனர்’’ என்றார்.

The post புலி வேட்டையில் ஈடுபட்ட பவாரியா கும்பலுடன் தொடர்பு மத்தியபிரதேசத்தில் கைதானவரிடம் நீலகிரியில் வைத்து விசாரணை appeared first on Dinakaran.

Tags : Madhya Pradesh ,Nilgiris ,Dinakaran ,
× RELATED வீட்டிலேயே குடிக்க சொல்லுங்க… ம.பி. பெண்களுக்கு அமைச்சர் அட்வைஸ்