×

டிக்கெட் வசூலில் ரூ.7 அதிகமாக இருந்ததால் டிஸ்மிஸ் பஸ் கண்டக்டரை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும்: போக்குவரத்து கழகத்துக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு போக்குவரத்து கழகம் விழுப்புரம் கோட்டத்தில், நடத்துனராக பணியாற்றி வருபவர் அய்யனார். இந்நிலையில் அவர் ஒரு பெண் பயணிக்கு டிக்கெட் கொடுக்காமல் ரூ.5 வாங்கியதாகவும் அவரிடமிருந்த டிக்கெட் தொகையை கணக்கிட்டதில் ரூ.7 அதிகம் இருந்ததாகவும் சோதனையில் தெரியவந்தது. இதையடுத்து, அவருக்கு விழுப்புரம் போக்குவரத்து கழக பொது மேலாளர் கடந்த 2015 செப்டம்பர் 5ம் தேதி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். ஆனால், அதற்கு கண்டக்டர் அளித்த விளக்கத்தை ஏற்காமல், போக்குவரத்து கழக விசாரணை அதிகாரி, அய்யனாரை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்தும் தன்னை மீண்டும் பணியில் சேர்க்க கோரியும் அய்யனார் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி பி.பி.பாலாஜி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எஸ்.இளம்பாரதி ஆஜராகிவாதிட்டார். போக்குவரத்து கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அஸ்வின் ஆஜரானார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரர் அந்த பெண் பயணியிடம் டிக்கெட் கொடுத்த பிறகு அதற்காக ரூ.5 வாங்கியிருந்தால் அவரது பையில் கூடுதலாக ரூ.2 மட்டுமே இருந்திருக்க முடியும். 2 ரூபாய் கூடுதல் தொகையால் போக்குவரத்து கழகத்துக்கு இழப்பு ஏற்படப்போவதில்லை. இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்காக மனுதாரரை பணி நீக்கம் செய்திருப்பது ஆச்சரியம். ஆனால், அவருக்கு வழங்கிய தண்டனை அதிகபட்சம் என்று கோர்ட் கருதுகிறது. இந்த சம்பவம் நீதிமன்றத்தின் மனச்சாட்சியை அசைத்துள்ளது. எனவே, இந்த வழக்கில் மனுதாரரை பணி நீக்கம் செய்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அவரை பணியில் மீண்டும் சேர்க்க வேண்டும். அவருக்கு உரிய நிலுவை பணப்பலன்களை 6 வாரங்களுக்குள் தர வேண்டும்’’ என்றார்.

The post டிக்கெட் வசூலில் ரூ.7 அதிகமாக இருந்ததால் டிஸ்மிஸ் பஸ் கண்டக்டரை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும்: போக்குவரத்து கழகத்துக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Ayyanar ,Villupuram ,Tamil Nadu Transport Corporation ,Dinakaran ,
× RELATED பட்டாசு லோடு ஏற்றி சென்றவர் கைது