×

திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா படகு போக்குவரத்து தற்காலிகமாக ரத்து

குமரி: கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியதால் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்லும் சுற்றுலா படகு போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள குமரி, உலக புகழ்பெற்ற சுற்றுலா தளங்களில் மிக முக்கியமான ஒன்றாகும். இங்கு கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்தை காண்பதற்காக உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

இதற்காக தமிழ்நாடு அரசின் சார்பாக சுற்றுலா படகு சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றுமுதல் கன்னியாகுமரி கடல் பகுதியில் அசாதாரண நிலை ஏற்பட்டு வருகிறது. கடல் உள்வாங்குதல், அலையின் சீற்றமும் அதிகமாக காணப்படுகிறது.

இதையடுத்து இன்று காலை முதல் கன்னியாகுமரி கடல்மட்டம் மிகவும் தாழ்வாக இருந்து வருகிறது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா போக்குவரத்து சேவையை மறுஅறிவிப்பு வரும்வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடலின் பருவநிலையில் அடிக்கக்கடி மாற்றம் ஏற்படுவதால் படகு சேவை உறுதியாக மீண்டும் எப்பொழுது தொடங்கப்படும் என்பது அவ்வப்போது உள்ள சூழ்நிலையை பொறுத்து முடிவெடுக்கப்படும் என பூம்புகார் கப்பல் விவாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா படகு போக்குவரத்து தற்காலிகமாக ரத்து appeared first on Dinakaran.

Tags : Thiruvalluvar statue ,Vivekananda Mandapam ,Kumari ,Kanyakumari ,
× RELATED குமரி கடல் நடுவே அமைந்துள்ள...