×

தொடர் முகூர்த்தம் எதிரொலி: திருப்புவனம் சந்தையில் ரூ.1 கோடி ஆடு விற்பனை

திருப்புவனம்: தொடர் முகூர்த்த நாட்களால் திருப்புவனம் ஆட்டுச்சந்தையில், நேற்று ரூ.1 கோடிக்கு ஆடு, கோழி விற்பனை செய்யப்பட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை ஆடு, கோழி சந்தை நடைபெறும். இந்த சந்தைக்கு மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட அருகேயுள்ள மாவட்டங்களில் இருந்தும், கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வருவார்கள். இதுதவிர விவசாயிகள் தங்களது வீடுகளில் வளர்க்கவும் ஆடு, மாடு, கோழிகளை வாங்கிச் செல்வர்.

தென் மாவட்டங்களில் முகூர்த்த நாட்களில் நடைபெறும் காதணி விழா, வசந்த விழாக்களில் அசைவ உணவுக்கு முக்கிய இடமுண்டு. வரும் 15ம் தேதி வைகாசி மாதம் பிறக்கிறது. இதைதொடர்ந்து வரும் 16, 18 மற்றும் 19ம் தேதிகள் முகூர்த்த நாட்களாகும். இதையடுத்து திருப்புவனத்தில் நேற்று காலை நடைபெற்ற ஆடு, கோழி சந்தை களைகட்டியது. அதிகாலை முதலே வியாபாரிகள், பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்தனர். இவர்கள் ஆடு, கோழிகளை விவசாயிகளிடம் இருந்து போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். வழக்கமாக 10 கிலோ எடை கொண்ட ஆடு சந்தையில் ரூ.6 ஆயிரம் வரை விற்கப்படும். ஆனால் நேற்றைய சந்தையில் ரூ.8,500 வரை விற்கப்பட்டது. இருப்பினும் விலை உயர்வை பொருட்படுத்தாமல் வியாபாரிகள், பொதுமக்கள் ஆர்வமுடன் ஆடுகளை வாங்கிச் சென்றனர்.

இதேபோல நாட்டுகோழி விலை ரூ.200ல் இருந்து ரூ.300 ஆக உயர்ந்தது. இருப்பினும், செம்மறி ஆடுகள் வழக்கம்போல ரூ.6 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை விற்கப்பட்டது. நேற்று காலை 7 மணி வரை சுமார் ரூ.1 கோடிக்கு ஆடு, கோழி விற்பனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. ஆடுகளுக்கு நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

 

The post தொடர் முகூர்த்தம் எதிரொலி: திருப்புவனம் சந்தையில் ரூ.1 கோடி ஆடு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Muhurtham ,Thiruppuvanam market ,Thiruppuvanam ,Thiruppuvanam goat market ,Thiruppuvanam, Sivaganga district ,Madurai ,Theni ,Dindigul… ,Dinakaran ,
× RELATED 2026 ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு...