*பொதுமக்கள் எதிர்பார்ப்பு
தேனி : தேனி நகரின் மத்தியில் தேனி தாலுகா அலுவலகம் அருகில் சுமார் 102 ஏக்கர் பரப்பளவில் மீறு சமுத்திரம் கண்மாய் உள்ளது. இக்கண்மாய்க்கு மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து வரும் நீரினை ஆதாரமாக கொண்ட பனசலாற்றில் இருந்து நீர்வரத்து உள்ளது. இந்த கண்மாய் நீரினைக் கொண்டு சுமார் 54 ஹெக்டேர் நிலப்பரப்பு பாசன வசதி பெற்று வருகிறது.
ஆண்டு முழுவதும் நீர்வரத்து உள்ளதால் இக்கண்மாயில் எப்போதும் நீர்நிரம்பியே இருக்கும். இத்தகைய கண்மாயில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூ.4 கோடி நிதியில் கண்மாய் கரையை பலப்படுத்தி, கண்மாய்க்குள் 3 உறைகிணறுகளை அமைத்தும், 2 மதகுகளை புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இத்தகைய கண்மாய், தேனி அல்லிநகரம் நகராட்சியில் சுமார் 10 வார்டுகளில் நிலத்தடி நீர்மட்டத்திற்கு ஆதாரமாக உள்ளது.
தேனி நகரானது மாவட்ட தலைநகரானதையடுத்து, கடந்த 28 ஆண்டுகளில் தேனி நகரின் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. தேனி நகருக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் பல்லாயிரக்கணக்கானோர் கல்வி, வேலை, மருத்துவம் உள்ளிட்ட பணிகளுக்கு வந்து செல்கின்றனர். மாவட்டத்தின் தலைநகராக உள்ள தேனி நகரில் பொழுதுபோக்கு அம்சத்திற்கு எந்தவொரு இடமும் இல்லாத நிலை உள்ளது. இதேபோல தேனி நகரில் வசிப்போர் நடைபயிற்சி செல்வதற்கும் இடவசதியும் இல்லை.
எனவே, தேனி நகரின் மத்தியில் பொதுப்பணித்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள மீறு சமுத்திரம் கண்மாய் பகுதியில் நடைபயிற்சிக்கான நடைபாதையை கண்மாயை சுற்றி அமைக்கவும், சிறுவர்கள் பூங்காவை அமைக்கவும், படகு சாவரிக்கான படகு குலாம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வருகின்றனர்.
பொதுமக்களின் கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு மீறு சமுத்திரம் கண்மாயில் படகுத்துறை அமைத்து நடைபயிற்சி மேடை, பூங்கா அமைக்க வேண்டும் எனவும், இதற்காக பொதுப்பணித்துறை நிர்வாகம், நகராட்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியது.
தேனி நகர மக்களின் நீண்டகால கோரிக்கைப்படி தேனி மாவட்ட சுற்றுலாத் துறை சார்பில் மீறு சமுத்திரம் கண்மாயில் படகுத்துறை, நடைபயிற்சி மேடை, மற்றும் பூங்கா அமைக்க அனுமதி கோரி பொதுப்பணித்துறைக்கு தேனி மாவட்ட கலெக்டர் மூலம் கடிதம் அனுப்பியுள்ளது.இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, மீறு சமுத்திரம் கண்மாயில் படகுதுறை அமைத்து பூங்கா மற்றும் நடைபயிற்சி மேடை அமைக்க திட்ட மதிப்பீடு கேட்டு கருத்துரு வந்தது. பொதுப்பணித் துறை நிர்வாகமும் இப்பகுதியில் பொழுதுபோக்கு அமைக்க ரூ.14 கோடி திட்டமதிப்பீடு ஆகும் என ஏற்கனவே, திட்ட மதிப்பீடு தயார்செய்துள்ளது என்றனர்.
இதுகுறித்து தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பினர் கூறுகையில், தேனி நகர மக்களுக்கு பொழுதுபோக்கும் இடம் தேனியில் இல்லை. உடல்சுகாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள நடைபயிற்சி மேடையும் இல்லை. சிறுவர்களை மாலைநேரங்களில் அழைத்து செல்ல பூங்கா இல்லாத நிலை உள்ளது. தேனி நகரின் மத்தியில் ஆண்டு முழுவதும் நீர்வற்றாத நிலையில் உள்ள மீறு சமுத்திரம் கண்மாயில் படகுசவாரி அமைக்கவும், பூங்கா அமைக்கவும், நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதை மேடை அமைக்கவும் தேனி நகராட்சி நிர்வாகம், பொதுப்பணித்துறை மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இது குறித்து தேனி அல்லிநகரம் நகர்மன்றத் தலைவர் ரேணுபிரியா பாலமுருகன் கூறுகையில், மீறு சமுத்திரம் கண்மாயில் நடைபயிற்சி மேடை அமைக்கவும், பூங்கா அமைக்கவும் நகராட்சி பொதுப்பணித்துறை மற்றும் சுற்றுலாத்துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும், எம்பி தங்கதமிழ்செல்வன் மற்றும் எம்.எல்.ஏ சரவணக்குமாரிடமும் கோரிக்கை விடுத்துள்ளோம். விரைவில் தேனி நகர மக்களின் நீண்டநாள் கனவான மீறு சமுத்திரம் கண்மாயில் பூங்கா மற்றும் நடைபயிற்சி மேடை அமைக்கும் பணி நடக்கும். மேலும், கண்மாயில் படகு குலாம் அமைக்க தேவையான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
The post தேனி மீறு சமுத்திரம் கண்மாயில் படகு சவாரி, பூங்கா, நடைபயிற்சி மேடை appeared first on Dinakaran.