×

தேனி பழைய பஸ் நிலையத்தில் சாக்கடை இரும்பு கம்பி வேலி சேதம்-உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை

தேனி : தேனிபழைய பஸ் நிலைய நுழைவு வாயிலில் சாக்கடைக்கு மேல் அமைக்கப்பட்டுள்ள இரும்பு கம்பி வேலி சேதமடைந்து உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
தேனி நகருக்கான பழைய பஸ் நிலையம் கம்பம் ரோடு, மதுரை ரோடு ,பெரியகுளம் ரோடு இணையும் பகுதியில் உள்ளது. இப்பழைய பஸ் நிலையம் வழியாக போடி, மூணாறு, கம்பம், குமுளி ஆகிய பகுதிகளுக்கு பஸ்கள் சென்று வருகின்றன. இது தவிர தேனியை சுற்றியுள்ள கிராமப்புறங்களுக்கு இங்கிருந்து நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. போடி, கம்பம் ஆகிய பகுதிகளில் இருந்து திண்டுக்கல், மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லக்கூடிய அனைத்து பேருந்துகளும் பழைய பேருந்து நிலையம் வழியாக தேனி நகருக்கான புதிய பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து பிற ஊர்களுக்கு பயணிக்கின்றன.

இதன் காரணமாக ,தேனி நகர் பழைய பஸ் நிலைய வளாகத்திற்குள் பயணிகளின் எண்ணிக்கை எப்போதும் நெரிசல் மிகுந்ததாகவே இருந்து வருகிறது. இதில் புதிய பஸ் நிலையத்தில் இருந்து போடி மற்றும் கம்பம் பகுதிகளுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் நுழையக்கூடிய பஸ் நிலையத்தின் வடக்கு வாயிலில் சாக்கடைக்கு மேல் அதனை மூடும் வகையில் இரும்பினால் ஆன கம்பி வலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கம்பி மற்றும் இரும்பினால் ஆன வலையின் மீது நாள்தோறும் ஏராளமான பேருந்துகள் பயணிப்பதால் இரும்பு கம்பியினாலான வேலியில் உள்ள வெல்டிங் பிரிந்து வேலியில் உள்ள தகடுகள் தனியாக ஒரு அடி உயரத்திற்கு துரத்திக் கொண்டு வெளியே நீட்டியபடி உள்ளன.

இதனை அறியாமல் இதன் மீது ஏறி வரும் பேருந்துகளின் டயர்கள் சேதமடையும் நிலையும் உள்ளது. மேலும் இவ்வேலியின் மீது ஏறி இருசக்கர வாகனங்கள் பயணிக்கும் போது விபத்துக்குள்ளாகும் அபாயமும் உள்ளது. நகராட்சி நிர்வாகம் பழுதடைந்துள்ள இந்த பாலத்தின் மீதான இரும்பு கம்பி வேலியை விரைந்து வெல்டிங் செய்து போக்குவரத்திற்கு ஏற்றதாக மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

The post தேனி பழைய பஸ் நிலையத்தில் சாக்கடை இரும்பு கம்பி வேலி சேதம்-உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Theni Old Bus Station ,Theni ,Dinakaran ,
× RELATED பல ஆண்டுகளாக போடப்படாத கனவுப்பாதை...