×

மணிப்பூர் விவகாரம், நம்பிக்கையில்லா தீர்மானம் என பரபரப்புடன் நடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது

புதுடெல்லி: மணிப்பூர் விவகாரத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுடன் பரபரப்பாக நடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடியை நாடாளுமன்றத்தில் பேச வைப்பதற்காக 26 எதிர்க்கட்சிகள் கொண்ட இந்தியா கூட்டணி சார்பில் மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன் மீதான விவாதம் கடந்த 2 நாட்கள் நடந்தது. இதில் நேற்று முன்தினம் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘மணிப்பூரில் பாரத மாதாவை பாஜ கொன்று விட்டது. நீங்கள் தேச பக்தர்கள் அல்ல, தேச துரோகிகள்’ என கடும் ஆவேசத்துடன் பேசினார். இதே போல, திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்பிக்களையும் மணிப்பூர் நிலவரம் குறித்து கேள்வி எழுப்பினர்.

2 நாள் விவாதம் முடிந்த நிலையில், விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி நேற்று பேசினார். மக்களவையில் மாலை 5.10 மணிக்கு உரையை துவக்கிய அவர் 2.10 மணி நேரம் பேசினார். இதில் பெரும்பாலான நேரம் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்தார். மணிப்பூர் குறித்து சுமார் 15 நிமிடங்கள் மட்டுமே பேசினார். அவர் பேசி கொண்டிருந்த போது, பலமுறையும் எதிர்க்கட்சி எம்பிக்கள், மணிப்பூர் பற்றி பேச நினைவுபடுத்தி ‘மணிப்பூர், மணிப்பூர் என கோஷமிட்டனர். ஆனால் பிரதமர், மணிப்பூர் பற்றி பேசவில்லை என்பதால் வெளிநடப்பு செய்தனர். அதை பார்த்த பிரதமர் மோடி, மணிப்பூர் பற்றி பேச தொடங்கினார். அப்போது, ‘மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக கொடூரமான குற்றங்கள் நடந்துள்ளன. குற்றவாளிகளை தண்டிக்க ஒன்றிய, மாநில அரசுகள் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றன. எந்த ஒரு குற்றவாளியும் தண்டனையில் இருந்து தப்ப முடியாது.

ஒட்டுமொத்த நாடும் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மக்கள் பக்கம் துணை நிற்கிறது. இந்த அவையும் அவர்களுக்கு ஆதரவாக நிற்கிறது. மணிப்பூரில் விரைவில் அமைதி திரும்பும், நாங்கள் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுத்து சரியான தீர்வு காண்போம். மணிப்பூரில் நடந்த சம்பவங்கள் மிகுந்த வலியை தருகின்றன. அதில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம்’ என்றார்.
இதைத் தொடர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் தீர்மானம் தோல்வியடைந்தது. ஏற்கனவே வெளிநடப்பு செய்துவிட்டதால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் இல்லை. இந்நிலையில், பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அவையில் நேற்று பேசியதை தொடர்ந்து, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது தொடர்பாக மக்களவையில் இன்று காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி தலைவர் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டம் நடந்தது.

அப்போது, சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. அதே நேரத்தில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் இடைநீக்கம் குறித்து விவாதிக்க கோரி காங்கிரஸ் எம்பி தாகூர் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கினார். மேலும் காங்கிரஸ் எம்பி தாகூர், ‘மோடியும் அமித் ஷாவும் நாடாளுமன்ற நடைமுறைகளை தகர்க்கிறார்கள். ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விவகாரத்தை வலுவாக கையாள போகிறோம்’ என்றார். காங்கிரஸ் எம்பி மணீஷ் திவாரி கூறுகையில், மணிப்பூரின் முக்கிய பிரச்சினைகளையோ அல்லது எதிர்க்கட்சிகளால் எழுப்பப்பட்ட பிரச்னைகளையோ பிரதமர் பேசவில்லை. எங்களது கேள்விகளுக்கு பிரதமரால் பதிலளிக்கப்படவில்லை. இது உச்சநீதிமன்றத்தை அணுகுவதற்கு ஏற்ற வழக்கு’ என்றார். அதே நேரத்தில், நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தலைமையில் பாஜ அமைச்சர்களின் முக்கிய சந்திப்பு நடந்தது.

இந்நிலையில் இன்று காலையில் மக்களவை கூடியது. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டபடி வெளிநடப்பு செய்தன. இதையடுத்து அவை பகல் 12.30 மணி ஒத்தி வைக்கப்பட்டது. அதே நேரத்தில் மாநிலங்களவையிலும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கேள்வி எழுப்பினார். அத்துடன் மாநிலங்களவையில் இருந்து காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது. தொடர்ந்து மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவைகள் கூடியதும் இன்று பிற்பகலில் நிறைவடைந்தது.

இந்த கூட்டம் தொடங்கிய நாள் முதல் அனைத்து பிரச்னைகளிலும் எதிர்க்கட்சிகள் சேர்ந்தே குரல் கொடுத்தன. மோடி குறித்த சர்ச்சை பேச்சு வழக்கில் ராகுல்காந்தியின் தண்டனை நிறுத்திவைக்கப்பட்டு அவர் எம்பி பதவியை தக்கவைத்த நிகழ்வு எதிர்க்கட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்த்தது. எதிர்க்கட்சிகள் ஒரு பக்கம் அணி திரண்டாலும் பாஜ மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் சிறிதும் தயங்காமல் எதிர்க்கட்சிகளை எதிர்கொண்டன. காரசார விவாதங்களுக்கு ஒன்றிய அமைச்சர்களும் சளைக்காமல் பதிலளித்தனர். இந்த கூட்ட தொடர் வரும் 13ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் 2 நாட்கள் முன்னதாகவே இன்றுடன் நிறைவடைந்தது.

The post மணிப்பூர் விவகாரம், நம்பிக்கையில்லா தீர்மானம் என பரபரப்புடன் நடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது appeared first on Dinakaran.

Tags : Manipur ,New Delhi ,
× RELATED மணிப்பூரில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு