×

தஞ்சாவூரில் சாலை விதிகளை விளக்கும் சிறுவர் பூங்கா பயன்பாட்டுக்கு வருவது எப்போது?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தஞ்சாவூர்: பணி முடிந்து 8 மாதங்களாகியும் திறக்கப்படாத சாலை விதிகளை விளக்கும் சிறுவர் பூங்கா பயன்பாட்டுக்கு வருவது எப்போது? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். அங்கு சாதனங்கள் பயன்பாடு இல்லாததால் பொலிவிழந்து காட்சியளிக்கின்றன. தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட்சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ரூ.965 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒருபகுதியாக பணிகள் மேற்கொள்ளப்பட்ட தஞ்சாவூர் பழைய பஸ் நிலையம், திருவையாறு பஸ் நிறுத்தத்தில் உள்ள வணிக வளாகம், அய்யன்குளம், சாமந்தான்குளம் உள்ளிட்டவற்றில் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டன. மேலும் சிவகங்கை பூங்கா பராமரிப்பு, அகழிகள் சீரமைப்பு, குடிநீர் மேம்பாட்டு திட்டப்பணிகள், சாலை பணிகள், விளையாட்டு அரங்கம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் செலவில் போக்குவரத்து பூங்கா (டிராபிக் பார்க்) அமைக்கப்பட்டு உள்ளது. தஞ்சாவூர் பெரியகோவில் மேம்பாலம் அருகே போலீஸ் துறைக்கு சொந்தமான இடத்தில் 35 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இந்த பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. இதற்காக மைதானம் முழுவதும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு உள்ளே நடைபாதை, போக்குவரத்து சிக்னல் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது. நகர வாழ் மக்களுக்கு, குறிப்பாக சிறுவர்களுக்கு சாலை போக்குவரத்து தொடர்பான விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு முறைகளை மிக எளிய முறையில் பயிற்றுவிக்கும் நோக்குடன் இந்த பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது.

மேலும் ஆங்காங்கே சாலை விதிமுறைகள் குறித்தும் அறிவிப்பு பலகைகள், போக்குவரத்து சிக்னல், சாலை குறியீடுகளும், எல்.இ.டி. விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. சிறுவர்களுக்கான விளையாட்டு சாதனங்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பணிகள் அனைத்தும் முடிந்து 8 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் திறக்கப்படவில்லை. தஞ்சாவூர் அருளானந்த நகர் பகுதியில் கட்டப்பட்டுள்ள ஸ்டெம் பூங்கா திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பூங்கா அமைக்கப்பட்டது.

இந்த இரண்டும் பணிகள் முடிந்து இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. எப்போது திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என தெரியவில்லை. இதனால் பூங்காவில் உள்ள சாதனங்கள் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் அதன் நிறம் பொலிவிழந்து வருகிறது. இதனை விரைந்து பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

The post தஞ்சாவூரில் சாலை விதிகளை விளக்கும் சிறுவர் பூங்கா பயன்பாட்டுக்கு வருவது எப்போது?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Children ,Park ,Thanjavur ,Children's Park ,Dinakaran ,
× RELATED அரியலூர் அருகே வீட்டிற்குள் லாரி...