×

தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழைக்கு பிறகு கிடையில் இருந்து ஆடுகள் மேய்ச்சலுக்கு சென்றன-வயல்களில் புல், பூண்டுகள் முளைத்தன

வல்லம் : தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழைக்கு பிறகு, கிடையில் இருந்து ஆடுகள் மேய்ச்சலுக்கு விடப்பட்டன. மழையால் வயல்களில் அதிகளவில் புல், பூண்டுகள் முளைத்தன.
தஞ்சாவூர் மாவட்டம் சித்திரக்குடி, ஆலக்குடி, சிவகாமிபுரம் உட்பட பல இடங்களில் ஆட்டு கிடை போடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த மழையால் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட முடியாமல் தவித்து வந்தனர். தற்போதைய மழையால் வயல்களில் புல், பூண்டுகள் வளர்ந்துள்ளதால் ஆடுகள் மட்டுமின்றி கொக்கு, நாரைகளும் வயல்களில் உணவை தேடி வருகின்றன.

குறுவை, சம்பா, தாளடி மற்றும் உளுந்து, பயறு சாகுபடி என்று தொடர்ந்து நடந்து பின்னர் கோடை உழவும் பல பகுதிகளில் மேற்கொள்ளப்படும். இதில் கோடை உழவை அதிகளவு விவசாயிகள் மேற்கொள்வதில்லை. காரணம் வயலை காற்றாடப் போட்டு வைத்து மண் வளத்தை மேம்படுத்துவர். இதனால் அடுத்த சாகுபடி பயிர்களுக்கு இயற்கையான மண் சத்துக்கள் கிடைக்கும் என்பதால்தான், காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி சாகுபடி செய்த பிறகு ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை மூன்று மாதங்களுக்கு வயலில் எந்த சாகுபடியும் செய்யாமல் அப்படியே விட்டு விடுவர்.

இந்த காலக்கட்டடத்தில் இதுபோன்ற வயல்களில் புற்கள் முளைத்து வளரும். அப்போது வயல்களில் ஆட்டு மந்தைகளை மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். இதற்கு ஆட்டு கிடை போடுவது என்று பெயர். மண் வளத்தை உயர்த்தும் என்பதால், ஆட்டு கிடை விவசாயிகளின் ஆதரவும் அதிகம் இருக்கிறது. இப்படி ஆட்டுக்கிடை போடுபவர்கள் இரவு நேரத்தில் வயல்களில் பட்டி போடுகிறார்கள். ஆடுகள் வெளியே செல்லாத வகையில் வட்டமாக வலை விரித்து, அதனுள்ளே ஆடுகளை அடைத்து விடுகின்றனர். ஆடுகளின் சிறுநீரும், புழுக்கைகளும் வயலுக்கு இயற்கை உரமாக கிடைக்கும்.

இப்படிக் கிடை போடுவதற்காக, காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு வரும் ஆடு கிடை போடுபவர்கள் சாகுபடிப் பணிகள் தொடங்கும் வரை இங்கேயே தங்கி விடுகிறார்கள். அந்த வகையில், தற்போது தஞ்சாவூர் அருகே பூதலூர், சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை, ஆலக்குடி, சிவகாமிபுரம் பகுதிகளில் ஆட்டுக்கிடை போடப்பட்டுள்ளது. இதற்காக ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து கொண்டு வரப்பட்ட வெள்ளாடுகளை பட்டி அமைத்து வயல்களில் மேய்ச்சல் காட்டி வருகின்றனர். ஆடுகளை கிடை போடுவதால் வயலுக்குத் தேவையான இயற்கை உரம் கிடைத்து விடுகிறது. அடுத்த சாகுபடியின்போது, அதற்கான பலன் அதிகளவில் கிடைக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக, தஞ்சாவூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட முடியாத நிலை ஏற்பட்டு இருந்தது. இதற்கிடையில் இந்த மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது, மேலும் புல், பூண்டுகள் நிறைய வளர்ந்துள்ளது. வெள்ளாடுகளுக்கு உணவு தடையின்றி கிடைத்து வருகிறது. இதன் காரணமாக ஆடுகளை மேய்ச்சலுக்கு திறந்து விட்டு வயல்களில் மேய்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

The post தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழைக்கு பிறகு கிடையில் இருந்து ஆடுகள் மேய்ச்சலுக்கு சென்றன-வயல்களில் புல், பூண்டுகள் முளைத்தன appeared first on Dinakaran.

Tags : Thanjavur district ,Vallam ,Dinakaran ,
× RELATED சொட்டுநீர் பாசனத்தில் விளைந்த நிலக்கடலை அறுவடை மும்முரம்