×

பாடப்புத்தகங்கள், நோட்டுகள் இன்று வினியோகம் 4 மாவட்டங்களில் பள்ளிகள் திறப்பு

சென்னை: சென்னை மாவட்டத்தில் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் 925 உள்பட மொத்தம் 2200 பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. மழையால் பாதிக்கப்பட்ட மாணவ மாணவியருக்கு இன்று பாடப்புத்தகம், நோட்டுகள் உள்ளிட்ட விலையில்லாப் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 4ம் தேதி சென்னையை கடந்து சென்ற மிக்ஜாம் புயல், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த மழையை கொட்டித் தீர்த்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. சீரமைப்பு பணிகள் நிறைவடைந்தவுடன் 4 மாவட்டங்களில் நேற்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன.

சென்னை மாவட்டம் மற்றும் புறநகரில் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், சென்னை பள்ளி்கள் மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 2206 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் எர்ணாவூர் பகுதியில் 2 பள்ளிகளில் வெள்ள நிவாரண முகாம்கள் நடக்கிறது. அதே போல போரூர் பெண்கள் மேனிலைப் பள்ளி வளாகத்தில் மழை நீர் இன்னும் வடியவில்லை. மேலும் ஒரு அரசுப் பள்ளியில் மழை நீர் பாதிப்புள்ளது. இது தவிர சென்னையில் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் வரும் 6 பள்ளிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த பள்ளிகளை நேற்று திறக்க முடியவில்லை. இவை தவிர சென்னை மாவட்டத்தில் இயங்கும் பள்ளிகளில் 2200 பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. அவற்றில் அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், 925 பள்ளிகள் அடங்கும். வழக்கமாக காலை 9 மணிக்கு இறை வணக்கத்துடன் தொடங்கிய பள்ளிகளுக்கு மாணவர்கள் உற்சாகத்துடன் வந்தனர். எழும்பூரில் உள்ள பெண்கள் மேனிலைப் பள்ளியில் பள்ளிகல்வித்துறை முதன்மைச் செயலாளர் குமரகுருபரன், இணை இயக்குநர் நரேஷ், சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் கல்வி அதிகாரிகள் நேரடியாக விசாரணை நடத்தி, மழை பாதிப்பு குறித்து கேட்டறிந்தனர்.

யாருக்கெல்லாம் புத்தகம், நோட்டு, சீருடை தேவை என்பதையும் கேட்டனர். இன்று முதல் புத்தகம் உள்ளிட்ட விலையில்லா பொருட்கள் வழங்கப்பட உள்ளன. பள்ளிகள் தூய்மைப்பணி, பள்ளிகள் சீரமைப்புக்காக அரசு ரூ.1 கோடியே 90 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது. அதன் மூலம் மேற்கண்ட பணிகள் துரிதமாக நடந்தவும், அரையாண்டுத் தேர்வுக்கான பணிகளை கண்காணிக்கவும், 17 கல்வி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நேற்று முதல் மேற்கண்ட 4 மாவட்டங்களுக்கும் நேரடியாக சென்று ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் 6 பள்ளிகள் தவிர மற்ற பள்ளிகள் வழக்கம் போல செயல்படத் தொடங்கியுள்ளன.

The post பாடப்புத்தகங்கள், நோட்டுகள் இன்று வினியோகம் 4 மாவட்டங்களில் பள்ளிகள் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை பட்டினப்பாக்கத்தில் கடையில்...