×

பாரிமுனை, அருள்மிகு காளிகாம்பாள் கமடேஸ்வரர் திருக்கோயிலில் ரூ.1.51 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (19.05.2025) சென்னை, எருக்கன்சேரி அருள்மிகு வேதாம்பிகா சமேத விஜயலிங்கேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்ற திருக்குடமுழுக்கு பெருவிழாவில் பங்கேற்றார். அதனைத் தொடர்ந்து, பாரிமுனை, அருள்மிகு காளிகாம்பாள் கமடேஸ்வரர் திருக்கோயிலில் ரூ.1.51 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள திருப்பணி தொடக்க விழாவில் (பாலாலயம்) கலந்து கொண்டு சிறப்பித்தார்.

பின்னர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, நாள்தோறும் குடமுழுக்குகள் மற்றும் திருப்பணிகளை தொடங்கும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இன்றைய தினம் குடமுழுக்கு நடைபெற்ற 8 திருக்கோயில்களில் எருக்கன்சேரியில் அருள்மிகு அருள்மிகு வேதாம்பிகா சமேத விஜயலிங்கேஸ்வரர் திருக்கோயிலும் ஒன்றாகும். அக்குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்டோம்.

அதனைத் தொடர்ந்து, அருள்மிகு காளிகாம்பாள் திருக்கோயிலில் சுமார் ரூ. 1.51 கோடி செலவில் பாலவிநாயகர் சன்னதி, முருகர் சன்னதி, நாகராஜா சன்னதிகள் உட்பட 17 திருப்பணிகளை தொடங்கி வைத்தோம். 400 ஆண்டுகள் பழமையான அருள்மிகு காளிகாம்பாள் திருக்கோயிலுக்கு வருகின்ற செப்டம்பர் 4-ஆம் தேதி குடமுழுக்கு நடத்திடும் வகையில் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும். அதேபோல் இத்திருக்கோயிலுக்கு சுமார் ரூ.3 கோடி செலவில் திருக்கோயில் நிதி, உபயதாரர் நிதியின் மூலம் அறங்காவலர் குழுவின் பெருமுயற்சியினால் வெள்ளித் தேர் உருவாக்கப்பட்டு வருகிறது. வரும் மே மாதம் 28-ஆம் தேதி வெள்ளோட்டத்திற்கு பின் பக்தர்கள் நேர்த்திக் கடன் அர்ப்பணிக்கப்படும். சொன்னதை செய்கின்ற அரசு, செய்வதைத்தான் சொல்லுகின்ற அரசு என்பதற்கு இந்த வெள்ளித் தேரோட்டமே ஒரு சாட்சியாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

இந்த அரசு பொறுப்பேற்றபின், இதுவரை 2,956 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடந்தேறி இருக்கின்றது. 3,000-வது குடமுழுக்கு வருகின்ற ஜூன் மாதம் 5ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்டம், திருப்புகலூர் திருக்கோயிலில் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். அதோடு மட்டுமல்லாமல் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு திருக்கோயில் இடங்களை அடையாளம் காட்டுகின்ற வகையில் திருக்கோயில் நிலங்களை அளவிடும் பணி மயிலாப்பூரில் தொடங்கினோம். அதன் நீட்சியாக 50,001-வது ஏக்கரை காஞ்சிபுரத்திலும், ஒரு லட்சம் ஏக்கரை பெரியபாளையத்திலும் அளவீடு செய்து தற்போது 2,00,001-வது ஏக்கரை அளவிடும் பணியினை வருகின்ற 21ஆம் தேதி திரும்பெரும்புதூரில் தொடங்க உள்ளோம். இது இந்து சமய அறநிலையத்துறையின் வரலாற்றில் ஒரு புரட்சி என்றால் அது மிகையாகாது.

கடந்த நான்காண்டுகளில் திருக்கோயில்களுக்கு சொந்தமான ரூ.7,671.23 கோடி மதிப்பிலான 7,560 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மாநில வல்லுநர் குழுவினால் 12,104 திருக்கோயில்களுக்கு இதுவரை திருப்பணி மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக கடந்த நான்காண்டுகளில் ரூ.5,948.62 கோடி மதிப்பிலான 25,485 திருப்பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில் உபயதாரர்கள் மட்டும் ரூ.1,339 கோடி மதிப்பிலாக 10,534 திருப்பணிகளை செய்து தருகின்றனர். எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு திராவிட மாடல் ஆட்சியில் தான் இந்து சமய அறநிலையத்துறையில் இத்தகைய பெருந்தொகையில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, உபயதாரர்கள் அதிக அளவில் திருப்பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி செய்து தருகின்றனர். இப்படி பல்வேறு திருப்பணிகளை மேற்கொண்டு வரும் இந்த ஆட்சியினை பக்தர்கள் பக்தி பரவசத்தோடு ஆன்மீக ஆட்சி என்று புகழ்வது மேன்மேலும் எங்களுக்கு இறைப்பணியில் ஊக்கத்தையும் ஆக்கத்தையும் தந்து கொண்டிருக்கிறது.

நாங்கள் எவ்வித ஆர்ப்பாட்டமும், ஆரவாரமும் இல்லாமல் அமைதியாக இறைவனுக்கு தொண்டு செய்து கொண்டிருக்கின்றோம். 3,000-ஆவது திருக்கோயில் குடமுழுக்கை நாகப்பட்டினம் மாவட்டம் திருப்புகலூர் திருக்கோயிலில் நடத்த இருக்கின்றோம். அதில் துறையின் அமைச்சர் என்ற முறையில் நானும், அந்த மாவட்டத்தினுடைய பொறுப்பு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளோம்.

துணை முதலமைச்சர் திருவல்லிக்கேணியில் அன்னதானத் திட்டத்தை தொடங்கி வைத்தது குறித்து தமிழிசை தெரிவித்துள்ள கருத்துக் குறித்து கேட்டீர்கள். கைபட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம் என்கின்றனர். நாவலர் அவர்களின் பாணியில் சொல்ல வேண்டுமென்றால் பழுத்த மரத்தில் தான் கல்லடிபடும். ஆகவே எங்களுடைய துணை முதல்வர் புகழின் உச்சியில் இருக்கின்றார். முதல்வர் தளபதி அவர்களின் வழிகாட்டுதலோடு தளபதிக்கு தோள் கொடுத்து சுமக்க தயாராக இருக்கிறார் என்பதைதான் இது போன்ற விமர்சனங்கள் எடுத்துக்காட்டுகிறது. எம்மதமும் சம்மதமே, எல்லோருக்கும் எல்லாம் என்ற இந்த ஆட்சியில் அன்னதானத் திட்டத்தை துவக்கி வைப்பதில் எந்த விதமான தவறும் இல்லை. இறைப்பசியோடு வருகின்ற பக்தர்களுக்கு வயிற்றுப் பசியையும் போக்குகின்ற ஆட்சி இந்த ஆட்சி என்பதற்கு அந்த அன்னதானத் திட்டமே ஒரு உதாரணமாகும்.

ஆளுநர் அவர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் இந்த மூன்று -ஆண்டுகள் தான் சம்பந்தமே. அதற்கு முன் அவருக்கு தமிழ்நாட்டில் என்ன சம்பந்தம் என்று சொல்லுங்கள். தமிழே இங்க வந்து தான் கற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார். அவர் தமிழ் கலாச்சாரத்தை பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதை போல் உள்ளது என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிகளில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி. என். ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் டாக்டர் சி.பழனி, சென்னை மண்டல இணை ஆணையர் ஜ. முல்லை, உதவி ஆணையர் க.சிவக்குமார் திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் இ.எம்.எஸ்.மோகன், அறங்காவலர்கள் எஸ்.சர்வேஸ்வரன், வி.சீனிவாசன், இரா.இராஜேந்திரகுமார், ஜெ.ரமேஷ், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post பாரிமுனை, அருள்மிகு காளிகாம்பாள் கமடேஸ்வரர் திருக்கோயிலில் ரூ.1.51 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.

Tags : Minister ,Sekarbhabu ,Kamadeswarar Temple ,Barimuna, Arulmigu Kalikambal ,Chennai ,Chief Minister ,Tamil Nadu ,K. ,Stalin ,Hindu ,P. K. SEKARBABU ,THIRUKUTULUKKU PERUVIJU ,ERUKKANSERI ,ARULMIGU ,VETHAMBIKA SAMEDA ,TEMPLE ,CHENNAI, CHENNAI ,Barimuna, ,Arulmigu Kaligambala Kamadeswarar Temple ,Parimuna, ,Arulmigu Kaligampal Kamadeswarar Temple ,
× RELATED செவிலியர்கள் கோரிக்கைகளுக்கு...