×

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ ரயில் சேவை 2 மணி நேரம் பாதிப்பு: பயணிகள் தவிப்பு

சென்னை: தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சென்னை மெட்ரோ ரயில் சேவை நேற்று 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். சென்னையில், மக்கள் போக்குவரத்து நெரிசலின்றி பல்வேறு இடங்களுக்கு குறுகிய நேரத்தில் செல்லும் விதமாக மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. அதன்படி சென்னையில் முதல்கட்டமாக விம்கோ நகர் முதல் விமான நிலையம், பரங்கிமலை முதல் சென்ட்ரல் என மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இது பச்சை வழித்தடம், நீல வழித்தடம் என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.

இதில், சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் முதல் பரங்கிமலை மெட்ரோ நிலையம் வரை பச்சை வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சின்னமலை -ஆலந்தூர் இடையேயான மெட்ரோ சேவையில் 2 மணி நேரம் பாதிப்பு ஏற்பட்டது. மெட்ரோ சேவை பாதிப்பு காரணமாக சென்னையில் வாகன போக்குவரத்து வழக்கத்தைவிட அதிகமாக காணப்பட்டது. பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. பேருந்துகளிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இந்நிலையில் நீல வழித்தடத்தில் கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் மேல்நிலை உபகரணங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக நீல விம்கோ நகர் பணிமனை மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து நந்தனம் வழியாக விமான நிலையம் வரை செல்லும் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக சின்னமலை மெட்ரோ ரயில் நிலையம் வரை இயக்கப்பட்டது. பச்சை வழித்தடத்தில், புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து திருமங்கலம், கோயம்பேடு வழியாக பரங்கிமலை மெட்ரோ செல்லும் மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கம்போல் இயக்கப்பட்டன. பிறகு கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை தொழில் நுட்ப வல்லுநர்கள் சரிசெய்தனர். அதனை தொடர்ந்து மெட்ரோ ரயில் சேவை இரண்டு வழித்தடங்களிலும் வழக்கம்போல் இயக்கப்பட்டது.

The post தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ ரயில் சேவை 2 மணி நேரம் பாதிப்பு: பயணிகள் தவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Metro ,CHENNAI ,Dinakaran ,
× RELATED 2024 ஜூன் மாதத்தில் 84.33 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம்