×

எதிர்கால இந்தியாவை கருத்தில் கொண்டு மு.க.ஸ்டாலின் தலைமையில் அணி: எதிர்க்கட்சி தலைவர்கள் உறுதி

புதுடெல்லி: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்தும் அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு நேற்று டெல்லியில் நடந்தது. இந்த மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் உரையாற்றினார். மாநாட்டில் நாட்டில் உள்ள முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்று பேசினார்கள். அப்போது அவர்கள் எதிர்கால இந்தியாவை கருத்தில் கொண்டு மு.க.ஸ்டாலின் தலைமையில் அணி திரள வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். தலைவர்கள் பேச்சு விவரம் வருமாறு: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்: சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஒத்த கருத்துடைய கட்சிகள் முன்வர வேண்டும். இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

ஜார்க்கண்ட் முதல்வர் சிபுசோரன்: இந்த நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மிகக் குறைவாகவே உள்ளனர். நாம் இப்போது உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால், வரவிருக்கும் தலைமுறையினர் மிகுந்த வேதனையை அனுபவிப்பார்கள். பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்: நாடு முழுவதும் ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். பீகார் அரசு சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பை ஏற்கனவே அறிவித்துள்ளது. உபி முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ்: சமூக நீதி கிடைக்காத வரை பொருளாதார சமத்துவம் இருக்காது. அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும்.

அனைவரும் கண்ணியத்துடன் வாழ உரிமை உள்ளது. இந்தியா உண்மையிலேயே பிரகாசிக்க, அனைவரும் ஒன்றிணைய வேண்டும். நாங்கள் அனைவரும் மு.க ஸ்டாலினுக்குப் பின்னால் இருக்கிறோம். இந்த இந்தியாவை அனைவருக்கும் வழங்குவதற்கான அவரது முயற்சிகளில் அவருக்கு ஆதரவளிக்கிறோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி: பொருளாதார வளர்ச்சியை ஒரு சிலருக்கு மட்டும் கட்டுப்படுத்த முடியாது. கடந்த இரண்டு ஆண்டுகளில், 40.5 சதவீத சொத்துக்கள் ஒரு சதவீத மக்களால் முடக்கப்பட்டுள்ளன. கார்ப்பரேட் வகுப்புவாத உறவை நாம் எதிர்த்துப் போராட வேண்டும். இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா: ஜாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் தனியார் துறையில் இடஒதுக்கீடு வேண்டும்.

தேசியவாதகாங்கிரஸ் சகன் புஜ்பால்: தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கட்சிகள் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் மனோஜ் ஜா: ஜாதிவாரியிலான கணக்கெடுப்பு இல்லாவிட்டால், மக்கள் தொகைக் கணக்கெடுப்பைப் புறக்கணிக்க வேண்டும். திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன்: ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் தற்போதைய ஒன்றிய அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஒன்று சேர வேண்டும். ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்: ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஏனெனில் வர்ணாசிரம அமைப்பு தொடர வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் விரும்புவதால் பாஜ இதை செய்யாமல் ஓடி ஒளிகிறது.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி முகமது பஷீர்: இடஒதுக்கீட்டை அகற்ற பா.ஜ முயற்சி செய்கிறது. அதன் முதல்கட்டமாகத்தான் பொருளாதாரத்தில் நலிந்த உயர் ஜாதியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது கர்நாடகாவில் முஸ்லீம்களுக்கான 4 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தலைவர்கள் பேசினர். இம்மாநாட்டில் தி.க. தலைவர் கி. வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி. வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன், அசாம் எம்பி நபா குமார் சாரானியா, அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பி. வில்சன் எம்ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு உரையாற்றினர்.

The post எதிர்கால இந்தியாவை கருத்தில் கொண்டு மு.க.ஸ்டாலின் தலைமையில் அணி: எதிர்க்கட்சி தலைவர்கள் உறுதி appeared first on Dinakaran.

Tags : M. K. Stalin ,India ,New Delhi ,conference ,All India Social ,Justice ,Federation ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stalin ,Delhi ,
× RELATED ஜூன் 4ம் தேதி இந்தியாவின் புதிய...