×

தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நெல்லை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. செப்டம்பர் 8, 9, 10-ல் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (06.09.2023) முதல் செப். 12ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு; அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை; தமிழக கடலோரப்பகுதிகள்: 06.09.2023: தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்” என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Weather Centre ,Chennai ,Chennai Meteorological Survey Centre ,Weather Center ,
× RELATED சென்னையில் இன்று மிதமான மழைக்கு...