×

மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் தான் பத்திர பதிவு கட்டணம் குறைவு: அமைச்சர் மூர்த்தி தகவல்

சென்னை: மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது, இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் பதிவுத்துறையில் குறைவான கட்டணம் வசூலிக்கிறது என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார். சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் பதிவுத்துறை சார்பில் பதிவு நடைமுறைகள் குறித்த கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் அமைச்சர் மூர்த்தி தலைமையில் 100க்கும் மேற்பட்ட பத்திரப்பதிவு துறையை சார்ந்த சங்கங்கள், ரயில் எஸ்டேட் துறையினர், அடுக்குமாடி குடியிருப்போர் நல சங்கத்தினர் இதில் பங்கேற்று தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கூடுதல் பதிவுத்துறை தலைவர்கள் முகமது ஜாபர் சாதிக், நல்லசிவம் ஆகியோர் உடன் இருந்தனர்.

கருத்து கேட்பு கூட்டத்திற்கு பின் அமைச்சர் மூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது: பதிவுத்துறையில் கடந்த ஆண்டு 2022-23ல் ரூ.17,298.67 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 2023-24ல் இதுவரை ரூ.5,34,165 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. போலி ஆவணங்களை ரத்து செய்ய புதிய சட்டம் இயற்றப்பட்டு மாநிலம் முழுவதும் 10,555 மனுக்கள் மீது இறுதி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது இதில் 959 ஆவணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்த பின் தவறுகளை நடப்பதை தடுக்க போலி ஆவணங்களை பதிவு செய்தால் அதை ரத்து செய்யும் அதிகாரம் வழங்கும் சட்டத்தை நிறைவேற்றியுள்ளோம்.

பத்திர பதிவு கட்டணம் 33 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது என கூறுகின்றனர். 2012ம் ஆண்டில் இருந்த நடைமுறையை தான் மீண்டும் 2023ல் கொண்டு வந்துள்ளோம். 2017ம் ஆண்டு முறைபடுத்தபடாமல் எற்றத்தாழ்வுகளுடன் இருந்தது அதை சரி செய்த பின் 2012ல் இருந்த நடைமுறையையே மீண்டும் கொண்டு வந்துள்ளோம். கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களையும் ஒப்பிடும் போது இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் பதிவுத்துறையில் குறைவான கட்டணம் வசூலிக்கிறது. அதேபோல வழிகாட்டு மதிப்பும் மிக குறைவாக இருப்பதை கூட்டத்தில் தெரியபடுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் தான் பத்திர பதிவு கட்டணம் குறைவு: அமைச்சர் மூர்த்தி தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister Murthy ,Chennai ,Minister ,Murthy ,Tamil ,Nadu ,India ,
× RELATED பெண்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை...