- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- சென்னை
- இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அபிவிருத்தி
- உதவித் துறை அமைச்சர்
- திணைக்களம்
- நலன்புரி
- மற்றும் விளையாட்டு அபிவிருத்தி
- கல்யாணபுரம்
- தமிழ்நாடு நகர வீட்டுவசதி மேம்பாட்டு வாரியம்
- அங்கன்வாடி செண்டர் உம்
- உதயநிதி ஸ்டாலின்
- தின மலர்
சென்னை: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (6.2.2024) தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்பட்ட கல்யாணபுரம் திட்டப்பகுதிகளில் ரூ.44.91 கோடி மதிப்பீட்டில் 288 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளையும், அங்கன்வாடி மையம், மகளிர்கான உடற்பயிற்சி கூடத்தையும், சிறுவர் பூங்காவையும் திறந்து வைத்து பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகள் வழங்கினார்கள்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகளை வழங்கி பேசுகையில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்பட்ட கல்யாணபுரம் திட்டப்பகுதிகளில் ரூ.44.91 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 288 அடுக்குமாடி குடியிருப்புகள் உங்களிடத்தில் ஒப்படைக்கும் இந்த விழாவில் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். என்னுடைய வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்துள்ள அமைச்சர்கள் தா.மோ.அன்பரசனுக்கும், பி.கே.சேகர்பாபுக்கும், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அலுவலர்களுக்கும், பணியாளர்களுக்கும், அனைவருக்கும் இந்த நேரத்தில் என்னுடைய வாழ்த்துக்கள்.
மனிதராக பிறக்கும் போது எல்லோருக்கும் ஒரு பெரிய கனவு இருக்கும். அது என்னவென்றால் நமக்கான ஒரு சொந்த வீடு இருக்காதா என்ற ஒரு கனவு தான். அதுவும் சென்னை போன்ற பெரிய நகரங்களில் உழைக்கும் மக்கள் தங்களுடைய வருவாயில் பெரும் பங்கு வீட்டு வாடகைக்காக செலவிடும் சூழ்நிலை இருக்கின்றது. இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு தான் நம்முடைய திராவிட மாடல் கழக அரசு தொடர்ந்து பல புதிய குடியிருப்புகளை கட்டி வருகிறது.
இதற்கெல்லாம் அடித்தளமாக இந்தியாவிலேயே முதன் முறையாக முத்தமிழறிஞர் கலைஞரால் 1970-ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் தொடங்கப்பட்டது. 54 வருடங்களுக்கு முன்பே இந்த வாரியம் தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 1.9.2021 அன்று தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் பெயரினை தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று பெயர் மாற்றம் செய்து ஆணையிட்டார்.
இந்த பெயர் வித்தியாசத்தினை நீங்கள் புரிந்துக் கொள்ளலாம். 1970 -ல் ஆரம்பிக்கும் போது தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம். ஆனால் தற்போது தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம். குடிசைகள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்பதற்காக தான் முத்தமிழறிஞர் கலைஞர் இந்த வாரியத்தை தொடங்கினார். அந்த லட்சியத்தின் படி கீற்றுகளையும், தார் பாய்களையும், கூரைகளையும் கொண்ட பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு கான்கீரிட் அடுக்குமாடி வீடுகளை கட்டி தந்தவர் நம் முத்தமிழறிஞர் கலைஞர் தான்.
இன்றைக்கு அந்த குடியிருப்புகளை மேம்படுத்தும் விதமாக அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் பெயர் மாற்றம் செய்து ஏராளமான குடியிருப்பு திட்டங்களை மேம்படுத்தி வருகிறார். அதில் ஒன்று தான் இங்கு இருக்கின்ற கல்யாணபுரம் திட்டப்பகுதி.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 1974 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 50 வருடங்களுக்கு மேல் ஆனதால் குடியிருப்புகள் பழுதானது. இதற்கு பதிலாக புதிய குடியிருப்புகளை கட்டித் தரவேண்டும் என்று நீங்கள் கோரிக்கை வைத்தீர்கள் . ஏற்கனவே இங்கு இருந்தது 254 குடியிருப்புகள். ஆனால் இந்த அரசு கட்டி தந்தது 288 வீடுகள். 34 வீடுகள் கூடுதலாக கட்டி தந்துள்ளோம். கூடுதலாக கட்டுவதினால் வீட்டின் சதுர அடியை குறைக்கவில்லை. ஏற்கனவே 326 சதுர அடியாக இருந்த குடியிருப்பு தற்போது 412 சதுர அடி கூடுதலாக சதுர அடியில் கட்டித் தந்துள்ளோம். அனைத்து நன்மைகளையும் அதிகமாக தருவது தான் நம்முடைய திராவிட மாடல் அரசு. அதற்கான சிறந்த எடுத்துக்காட்டு இந்த கல்யாணபுரம் திட்டம்.
கடந்த அக்டோபர் மாதம் சென்னையில் வி.க நகர் , பெரியார் நகர் போன்ற இடங்களில் நம்முடைய வாரியத்தின் சார்பாக ரூ556.60 கோடி மதிப்பீட்டில் 3238 குடியிருப்புகளை கட்டுவதற்காக அடிக்கல் நாட்டினேன். இந்த கட்டுமான பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விரைவில் அந்த பகுதிகளும் திறக்கப்படும். என்னுடைய தொகுதியான சேப்பாக்கம் – திருவல்லிக்கேணியில் 4 பணிகள் நடைபெற்று வருகிறது. அதையும் நான் அமைச்சர் அவர்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றேன். விரைந்து பணிகள் முடிக்கப்பட்டு மக்களுடைய பயன்பாட்டிற்கு கொடுக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாடு முழுவதும் ரூ.2400 கோடி மதிப்பீட்டில் புதியதாக 15000 குடியிருப்புகள் கட்டும் பணியை நம்முடைய அரசு மேற்கொண்டு வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நம்முடைய தேர்தல் அறிக்கையில் முதலமைச்சர் பழுதடைந்த பழைய குடியிருப்புகளை இடித்து விட்டு புதிததாக குடியிருப்புகளை அதே இடத்தில் கட்டித் தருகிறோம் என வாக்குறுதி வழங்கினார்கள். சொன்னதை செய்யும் விதமாக இன்றைக்கு புதிய குடியிருப்புகளை அதே இடத்தில் கட்டி தருகிறோம். புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வருகிறோம். இவ்வரசு பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை 72 திட்டப்பகுதிகளில் 2544.19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 23259 அடுக்குமாடி குடியிருப்புகள் வீடற்ற ஏழை எளிய மக்களுக்காகவும், குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களுக்காகவும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இருக்க இடம், உண்ண உணவு , உடுத்த உடை இந்த மூன்றும் தான் மக்களுக்கு அடிப்படை தேவை. அதில் முதலாவது இருக்க இடம். அதை உறுதி செய்யும் வகையில் நம்முடைய திராவிட முன்னேற்ற அரசு ஏராளமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த 288 வீடுகளை கட்டி தந்துள்ளோம். இனி மேல் அது உங்களுடைய வீடு, உங்களுடைய வரி பணத்தில் கட்டப்பட்ட வீடு. எப்படி உங்கள் சொந்த முயற்சியில் வங்கியில் லோன் வாங்கியோ, நகைகளை விற்றோ வீடு வாங்குவீற்களோ அதே மாதிரி தான் இதுவும். நீங்கள் தான் இதற்கு முழு பொறுப்பு.
உங்களுக்கு என்று ஒரு சங்கத்தை தொடங்க வேண்டும். அந்த சங்கத்தின் மூலம் உங்களுடைய அடுக்குமாடி குடியிருப்புகளின் தேவைகளை, கோரிக்கைகளை மாநகராட்சி மற்றும் அரசின் பிற துறைகள் மூலமாக நிறைவேற்றி கொள்ள வேண்டும். சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
உங்கள் அனைவருக்கும் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் அவர்களும், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களும் இணைந்து பரிசு பொருட்கள் ஏற்பாடு செய்துள்ளனர். புத்தாடைகள், 25 கிலோ அரிசி, ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்கள், மேலும் ஊக்கத் தொகையும் ஏற்பாடு செய்துள்ளனர். எப்பொழுதும் போலவும் கழக அரசும், முதலமைச்சர் அவர்களும், அமைச்சர்கள், நாடாளுமன்ற , சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உறுதுணையாக இருப்போம் என சொல்லி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் பேசுகையில் இந்த திட்டத்தை செயல்படுத்த ஒவ்வொரு குடியிருப்புக்கும் தமிழ்நாடு அரசின் மானியத் தொகை ரூ.12.10 – இலட்சமும் , ஒன்றிய அரசின் மானியத் தொகை ரூ.1.50 இலட்சமும், மற்றும் பயனாளிகள் பங்கு தொகையாக ஏற்கனவே இத்திட்டப்பகுதியில் இருந்த பயனாளிகளுக்கு ரூ.1.50 இலட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு ரூ.5.38 இலட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
இன்றைய தினம் திறக்கப்பட்ட திட்டப்பகுதியில் ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையல் அறை மற்றும் கழிவறை ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. மேலும், அனைத்து குடியிருப்பு வளாகங்களும், சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவு நீரேற்று வசதி, சிறுவர் பூங்கா, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு , தெரு விளக்குகள் தீயணைப்பு வசதிகள், மின்தூக்கி, மற்றும் மின் ஆக்கி போன்ற வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கன்வாடி மையம், மகளிருக்கான உடற் பயிற்சி கூடம், குடியிருப்புதாரர்கள் இளைபாரும் வகையில் 30 கான்கீரிட் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வாரியத்தால், சென்னை மாவட்டத்தில் 207 திட்டப் பகுதிகளில் ஒரு இலட்சத்து 15 ஆயிரத்து 74 அடுக்குமாடி குடியிருப்புகளும் இதர மாவட்ட நகரங்களில் 218 திட்டப் பகுதிகளில் 72 ஆயிரத்து 78 அடுக்குமாடி குடியிருப்புகளும் என மொத்தம் 1 இலட்சத்து 89 ஆயிரத்து 152அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வாரியம் பராமரித்து வருகிறது.
மறுகட்டுமான திட்டத்தின் கீழ் சென்னையில் 27 ஆயிரத்து 138 வீடுகளும், பிற மாவட்டங்களில் – 3 ஆயிரத்து 354 வீடுகள் என மொத்தம் 30 ஆயிரத்து 492 பழைய குடியிருப்புகளை இடித்து விட்டு, புதிய வீடுகள் கட்ட முடிவு எடுக்கப்பட்டது. 2021-2022, 2022-2023 நிதி ஆண்டுகளில் ரூ. 2 ஆயிரத்து 400 கோடி மதிப்பீட்டில், 15 ஆயிரம் புதிய வீடுகள் கட்ட அறிவிக்கப்பட்டு, அதன்படி30 திட்ட பகுதிகளில் உள்ள. ஆயிரத்து 627 கோடியே 97 லட்சம் ரூபாய்மதிப்பீட்டில், 9 ஆயிரத்து 522 வீடுகள் கட்டும் பணி துவக்கப்பட்டு உள்ளது.
மேலும் மறுகட்டுமான திட்ட பயனாளிகளின் பங்களிப்பு தொகை ரூ.5 இலட்சம் முதல் 6 இலட்சமாக இருந்தது. மறுகட்டுமான திட்ட பயனாளிகளின் சிரமத்தை அறிந்த நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தாய் உள்ளத்தோடு பரிசீலித்து அவர்களது பங்களிப்பு தொகையை குறைக்க வேண்டும் என்பதற்காக மறுகட்டுமான திட்டப்பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சாலை வசதிகள், மழைநீர் வடிகால், தெரு விளக்குகள், பொது வசதி கட்டிடங்கள் போன்ற அடிப்படை வசதிகளுக்கு ஏற்படும் செலவுகளை அரசே ஏற்கும் என்று அறிவித்தார். இவ்வறிப்பினால் பயனாளிகள் பங்களிப்பு தொகை சுமார் ரூ4 இலட்சம் குறைக்கப்பட்டு தற்போது ரூ1.50 இலட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 2.5 ஆண்டுகளில் 24766 குடும்பங்கள் செலுத்த வேண்டிய பயனாளிகள் பங்களிப்பு தொகை ரூ.594 கோடியே 54 இலட்சம் அரசே ஏற்றுள்ளது என அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள்.
வாரியத்தால் 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு சிதிலமடைந்த குடியிருப்புகளை புனரமைக்க கணக்கெடுக்கப்பட்டது. இதில், 87 திட்டப் பகுதிகளில் உள்ள 50 ஆயிரத்து 29 அடுக்குமாடி குடியிருப்புகள் புனரமைக்க, கடந்த 2 ஆண்டுகளில், ரூ. 170 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், 18 ஆயிரத்து 698 குடியிருப்புகள் புனரமைக்கப்பட்டு,31 ஆயிரத்து 331 குடியிருப்புகளில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் ஒப்புதல் பெற்ற சுமார் 31 ஆயிரத்து 197 குடியிருப்புகள் கொண்ட 48 திட்டப் பகுதிகளுக்குதிட்ட அனுமதி, வரைபட அனுமதி, CMDA, DTCP அனுமதிசுற்றுச்சூழல் அனுமதி RERA ஒப்புதல் என எந்த அனுமதியும் பெறாமல்ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு பணிகள் நடைபெற்று வந்துள்ளன.
இதில், பல கட்டிடப் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டும் இருந்தன. உதாரணமாக 1,044 குடியிருப்புகள் கொண்ட மூலகொத்தளம், 288 குடியிருப்புகள் கொண்ட கல்யாணபுரம், மணலி புதுநகர் போன்ற திட்டப் பகுதிகளில் கட்டிடப் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டும், அரசின் பல்வேறு அனுமதிகள் பெறாத காரணத்தினால், இந்த குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு குடி நீர் இணைப்புகழிவு நீர் இணைப்பு ஆகியவை வழங்கப்படாமல் இருந்தது. கழக அரசு பொறுப்பேற்றபின், இந்த திட்டங்களுக்கு எல்லாம் அனுமதி பெற்று, குடியுருப்புகள் திறக்கப்பட்டு, ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், வி.க சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசுச் செயலாளர் சி.சமயமூர்த்தி, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் டாக்டர்.சு.பிரபாகர், இணை மேலாண்மை இயக்குநர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன், துணை மேயர் மு.மகேஷ்குமார், இராயபுரம் மண்டல தலைவர் பிஸ்ரீராமலு, மாமன்ற உறுப்பினர் ராஜேஷ் ஜெயின், வாரிய தலைமை பொறியாளர்கள் வே.சண்முகசுந்தரம், அ.மைக்கேல் ஜார்ஜ், மேற்பார்வை பொறியாளர்(பொ) இளம்பரிதி, வாரிய பொறியாளர்கள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post தமிழ்நாடு முழுவதும் ரூ.2544.19 கோடி மதிப்பீட்டில் 23259 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி திறந்து வைக்கப்பட்டுள்ளது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல் appeared first on Dinakaran.