×

தமிழ்நாடு இழந்த அனைத்து உரிமைகளும் மீட்கப்படும் ‘இந்தியா’ கொள்கை கூட்டணி அரசியல் கூட்டணி அல்ல: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தஞ்சாவூர்: ‘இந்தியா கூட்டணி அரசியல் கூட்டணி அல்ல. கொள்கை கூட்டணி’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். திராவிடர் கழகத்தின் சார்பில் தஞ்சாவூர் மாநகராட்சி திடலில் கலைஞர் நூற்றாண்டு விழா, சமூக நீதிக்கான சரித்திர நாயகர் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில், சமூக நீதிக்கான சரித்திர நாயகர் விருதை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வழங்கினார். தொடர்ந்து கி.வீரமணி தொகுத்த ‘தாய் வீட்டில் கலைஞர்’ என்ற நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட அதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெற்று கொண்டார்.

பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இந்திய ஒன்றிய அரசின் ஆட்சி கருத்தியலாக, கூட்டாட்சிக் கருத்தியல் மலர வேண்டும். அனைத்து தேசிய இனங்களும் உரிமை பெற்றவைகளாகவும், அனைத்து மாநில மொழிகளும் ஒன்றிய ஆட்சி மொழியாக உயர்ந்து நிற்க வேண்டும். அனைவர் குரலுக்கும் ஒரே மரியாதையும் மதிப்பும் இருக்க வேண்டும். இதுதான் இந்திய ஒன்றியமும் – அதில் உள்ளடங்கிய தமிழ்நாடும் இயங்க வேண்டிய முறை. அத்தகைய கூட்டாட்சிக் கருத்தியலை உள்ளடக்கிய இந்தியாவை அமைப்பதற்காகவே இந்தியா கூட்டணியை அமைத்துள்ளோம்.

இது அரசியல் கூட்டணி அல்ல. கொள்கைக் கூட்டணி. தேர்தல் வெற்றியை மட்டும் கணக்கில் கொண்டு இதனை நாங்கள் உருவாக்கவில்லை. அந்த வெற்றிக்குப் பின்னால் அமையப் போகும் ஆட்சியில் கோலோச்ச வேண்டிய கொள்கைகளை மனதில் வைத்தே நாங்கள் செயல்படுகிறோம். தமிழ்நாடு இதுவரை இழந்த அனைத்து உரிமைகளும் மீட்கப்படும். மீட்கப்பட்டே தீர வேண்டும். கல்வி உரிமை, நிதி உரிமை, சமூகநீதி உரிமை, மொழி உரிமை, இன உரிமை, மாநில சுயாட்சி உரிமை ஆகிய அனைத்தையும் மீட்போம். தமிழ்நாட்டின் நாடாளுமன்ற மக்களாட்சி உரிமைக்குக் கேடு விளைவிக்கப் பார்க்கிறார்கள். மக்கள் தொகை குறைந்துவிட்டது என்று சொல்லி நாடாளுமன்றத் தொகுதியின் எண்ணிக்கையைக் குறைக்கும் சதிச்செயலை அரங்கேற்றப் பார்க்கிறார்கள்.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான மகளிர் இடஒதுக்கீட்டை வழங்க மறுப்பது என்பது பா.ஜ.க.வின் உயர் வகுப்பு மனோபாவம், காலப்போக்கில் பட்டியலின இடஒதுக்கீட்டையும் காலி செய்துவிடும் ஆபத்தும் இதில் இருக்கிறது.தமிழ் மொழி காக்க, தமிழினம் காக்க, தமிழ்நாட்டை காக்க, இந்தியா முழுமைக்கும் சமதர்ம, சமத்துவ, சகோதரத்துவ, சமூகநீதியைக் காக்க எனது வாழ்க்கையை முழுமையாக ஒப்படைத்துக் கொள்கிறேன் என்பதுதான் எனக்கு திராவிடர் கழகம் நடத்தி இருக்கும் இந்த பாராட்டு விழாவில் நான் எடுத்துக் கொள்ளும் உறுதிமொழி. இவ்வாறு பேசினார்.

The post தமிழ்நாடு இழந்த அனைத்து உரிமைகளும் மீட்கப்படும் ‘இந்தியா’ கொள்கை கூட்டணி அரசியல் கூட்டணி அல்ல: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : India ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stal ,Thanjavur ,India alliance ,M.K.Stalin ,Dravidar Kazhagam ,
× RELATED சூறைக்காற்று மற்றும் புயல்...