×

உஷ்.. ஸ்ஸ்ஸப்பா.. இந்த போடு போடுதே… தமிழகத்தில் 16 இடங்களில் வெயில் சதம்: அதிகபட்சமாக வேலூரில் 108.1 டிகிரி கொளுத்தியது; சென்னையில் 105.4 டிகிரி

சென்னை: தமிழ் நாட்டில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று 16 இடங்களில் வெயில் 100 டிகிரியை கடந்தது. அதிகபட்சமாக வேலூரில் 108.14 டிகிரி வெயில் அடித்து நொறுக்கியது. அக்னி நட்சத்திரம் கடந்த 4ம் தேதி தொடங்கியது. வருகிற 28ம் தேதி வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய 4ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் வெயிலின் கோரதாண்டவம் என்பது நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியது. பல மாவட்டங்களில் வெயில் அடித்து நொறுக்கியது. சில மாவட்டங்களில் வெயில் அதிகப்பட்சமாக 104 டிகிரி வரை பதிவானது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வெயிலின் தாக்கம் என்பது தமிழகம் முழுவதும் நிலை குலைய வைத்தது. காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை எப்போதும் இல்லாத அளவுக்கு வெயில் வாட்டி எடுத்தது. வெளியே சென்றாலே மயக்கம், உடம்பில் கடும் எரிச்சல் போன்றவை ஏற்பட்டது. சிறிது தூரம் நடந்து சென்றாலே உடல் முழுவதும் வியர்த்து தண்ணீர் வெளியேறுவது என்று மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். கொஞ்ச தொலைவுக்கூட நடக்க முடியாத அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருந்தது. இதனால், அத்தியாவசிய தேவைக்கு தவிர, காலை முதல் பிற்பகல் வரை மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கினர். இதனால், முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது. அதே நேரத்தில் இந்தாண்டின் அதிகபட்சமாக வேலூரில் 106.7 டிகிரி நேற்று முன்தினம் கொளுத்தியது.

வேலூரா அல்லது வெயிலூரா என்று சொல்லும் அளவுக்கு வெயிலின் கொடுமை மிக அதிகமாக இருந்தது. இதனால், அந்த மாவட்ட மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். அதற்கு அடுத்தப்படியாக சென்னையில் 105.26 டிகிரி வெயில் சுட்டடெரித்தது. இதனால், சென்னைவாசிகள் காலை முதலே வீட்டிற்குள் முடங்கினர். இதனால், சென்னையில் முக்கிய சாலைகளான அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட பல சாலைகளில் மக்கள் கூட்டம் என்பதை காண முடியாத நிலை ஏற்பட்டது. இதே போல தமிழ்நாட்டின் 13 மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வாட்டி எடுத்தது. மாலை 4 மணிக்கு பிறகு மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

அதே போல நேற்றும் மாநிலம் முழுவதும் 16 இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் வாட்டி எடுத்தது. குறிப்பாக வேலூரில் நேற்று 108.14 டிகிரி வெயியில் வாட்டி எடுத்தது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். அடுத்தப்படியாக திருத்தணியில் 105.8 டிகிரி வெயில் பதிவானது. சென்னை நுங்கம்பாக்கம் 105.44 டிகிரி, சென்னை மீனம்பாக்கம் 105.44 டிகிரி, கரூர் பரமத்தி 104.9 டிகிரி, பரங்கிப்பேட்டை 104.36 டிகிரி, ஈரோடு 103.64 டிகிரி, மதுரை விமான நிலையம் 103.28 டிகிரி, திருச்சி 103.1 டிகிரி, கடலூர் 102.92 டிகிரி, தஞ்சாவூர் 102.2 டிகிரி, மதுரை நகரம் 102.2 டிகிரி, பாளையங்கோட்டை 102.02 டிகிரி, சேலம் 100.4 டிகிரி, நாமக்கல் 100.4 டிகிரி, நாகப்பட்டினம் 100.04 டிகிரி வெயில் வாட்டி எடுத்தது.

மேலும் புதுச்சேரியில் 102.92 டிகிரியும் வெயில் பதிவானது. வேலூரில் வரும் நாட்களில் 110 டிகிரி வரை வெயில் அடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. வெயில் சுட்டெரித்ததால் மாலை 4 மணிக்கு மேல் இயற்கை காற்றை சுவாசிக்கும் வகையில் கடற்கரை, பூங்காக்களை நோக்கி மக்கள் படையெடுத்தனர். அங்கு இரவு வரை குடும்பத்துடன் பொழுதை போக்கினர். குறிப்பாக சென்னையில் மெரினா, பெசன்ட்நகர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகள் மற்றும் அனைத்து பூங்காக்களிலும் வழக்கத்தை விட இரட்டிப்பான கூட்டம் காணப்பட்டது.

சென்னை வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி கீதா கூறுகையில், ‘‘மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்று முதல் 19ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் காரணமாக அசௌகரியம் ஏற்படலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு(இன்றும், நாளையும்) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்’’ என்றார்.

The post உஷ்.. ஸ்ஸ்ஸப்பா.. இந்த போடு போடுதே… தமிழகத்தில் 16 இடங்களில் வெயில் சதம்: அதிகபட்சமாக வேலூரில் 108.1 டிகிரி கொளுத்தியது; சென்னையில் 105.4 டிகிரி appeared first on Dinakaran.

Tags : Szappa ,Tamil Nadu ,Vellore ,Chennai ,
× RELATED வாகனங்களில் மின்னணு தராசு...