×

தமிழகம் மற்றும் தெற்கு ரயில்வேயின் வளர்ச்சி திட்டங்கள் புறக்கணிப்புக்கு சு.வெங்கடேசன் கண்டனம்

மதுரை: தமிழகம் மற்றும் தெற்கு ரயில்வேயின் வளர்ச்சி திட்டங்கள் புறக்கணிப்புக்கு சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். நடப்பு கூட்டத்தொடரில் இரயில்வே துறை சார்ந்து இரண்டு முக்கிய கேள்விகளை கேட்டிருந்தேன். ஒரு கேள்வி தமிழக வளர்ச்சித் திட்டங்களை குறித்ததாகும். இன்னொரு கேள்வி தெற்கு ரயில்வேயில் ரயில் நிலைய வசதி விரிவாக்கம் குறித்ததாகும். இந்த இரண்டு கேள்விக்கும் அமைச்சர் கொடுத்துள்ள பதில் தமிழகமும் தெற்கு ரயில்வேயும் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதை உறுதிப்படுத்துகிறது.

ரயில் வளர்ச்சி திட்டங்களைப் பொறுத்தவரை 2023 ஏப்ரலில் தமிழகத்தில் 23 வளர்ச்சி திட்டங்கள் நடப்பில் உள்ளன என்று பதிலில் கூறியுள்ளார். இதில் ஒன்பது திட்டங்கள் புதிய பாதை திட்டங்கள் ஆகும் . மூன்று திட்டங்கள் அகல பாதை திட்டங்கள் ஆகும் .11 திட்டங்கள் இரட்டை பாதை திட்டங்கள் ஆகும். இந்த திட்டங்களுக்கான மொத்த தூரம் 2848 கிலோமீட்டர் ஆகும். இந்த திட்டங்கள்2006 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சேர்க்கப் பட்டவை ஆகும். இந்த 17 ஆண்டுகளில் இதுவரை வெறும் 839 கிலோமீட்டர் தூரம் தான் முடிக்கப்பட்டுள்ளது. இன்னும் 2009 கிலோ மீட்டர் தூரம் மீதமுள்ளது.

2848 கிலோமீட்டர் தூரத்திற்கு தேவையான மொத்த முதலீடு 35580 கோடி ரூபாய். இதுவரை 839 கிலோமீட்டர் தூரத்திற்கு செலவு செய்தது வெறும் 9078 கோடி ரூபாய். தமிழக திட்டங்களை முடிக்க இன்னும் 26 ஆயிரத்து 502 கோடி ரூபாய் தேவை. ரயில்வே அமைச்சர் பதிலில் 2009 முதல் 2014 வரை செய்த செலவை விட 2014-23 காலகட்டத்தில் அதிகம் செலவு செய்யப்பட்டது என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் காலத்தை காட்டிலும் மோடி காலத்தில் அதிக வளர்ச்சி உள்ளது என்பதை காட்ட அவர்கள் முயற்சி செய்கிறார்கள். ஆனால் புள்ளி விவரங்கள் அதற்கு நேர்மாறாக உள்ளன. தமிழகத்தின் ரயில் வளர்ச்சி திட்டங்களுக்கு குறிப்பாக புதிய பாதை திட்டங்களுக்கு மற்றும் சில ரெட்டை பாதை திட்டங்களுக்கும் வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கியதை நான் சுட்டிக் காட்டி இருந்தேன் .அதை ஒட்டி நடப்பாண்டில் வெறும் பத்து கோடி முதல் 50 கோடி வரை ஒதுக்கீடு செய்துள்ளார்கள். இருந்தபோதும் இந்த திட்டங்கள் முடிவடைய இன்னும் 20 ஆண்டுகள் ஆகும் என்பதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
தமிழகத்தில் ரயில்வே துறையை பொறுத்தவரை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுக் கொண்டிருப்பதன் சாட்சியாகத்தான் அமைச்சர் தந்துள்ள புள்ளிவிபரங்கள் இருக்கின்றன.

அதேபோல இன்னொரு பதிலில் ரயில் நிலைய வசதிகளை மேம்படுத்த திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாக அவர் பதில் அளித்துள்ளார். அதில் தெற்கு ரயில்வேக்கு 75 ரயில் நிலையங்கள் வசதி பெருக்க மிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதில் மதுரையும் உள்ளடங்கும்.

அவரது கணக்கில் 20 -21 ல் 204 கோடியும்: 2021-22ல் 154 கோடியும்; 2022-23ல் 147 கோடியும் செலவு செய்யப்பட்டதாம். 2023-24 ல்1242கோடி செலவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை மூன்று மாதங்களில் 49 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் பதில் அளித்துள்ளார். இத்திட்டங்களுக்கு அடுத்த ஒன்பது மாதத்தில் 1242 கோடி செலவு செய்ய வேண்டும். ஆனால் முதல் மூன்று மாதத்தில் ஒதுகீடு செய்யப்பட்டு நடைபெற்றுள்ள பணி ஐந்து சதவிகிதம் கூட இல்லாத நிலையில் அடுத்த ஒன்பது மாதத்தில் 95 சதவிகித பணிகள் எப்படி முடிக்கப்படும்?

மதுரை – போடி 90 கிலோமீட்டர் தூரத்தை 13 ஆண்டுகள் வேலைபார்த்ததைப் போல, இராமேஸ்வரம் – தனுஷ்கொடி 17 கிலோ மீட்டரை 5 ஆண்டுகளாக வேலை பார்த்துக்கொண்டிருப்பதைப் போல தமிழகத்தின் முக்கியமான 75 இரயில் நிலையங்கள் அடுத்த பல ஆண்டுகள் இடுபாடுகளுக்கிடையில் தான் இருக்கப்போகிறது. திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கி வேலைகளை தீவிரப்படுத்தாமல் தேர்தலுக்கான ஆடம்பர அறிவிப்பாக இரயில்வே அமைச்சரின் பதில் உள்ளது.

 

The post தமிழகம் மற்றும் தெற்கு ரயில்வேயின் வளர்ச்சி திட்டங்கள் புறக்கணிப்புக்கு சு.வெங்கடேசன் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Southern Railways ,SU ,Venkatesan ,Madurai ,Southern Railway ,Railway Department ,Tamil Nadu and Southern Railway ,Dinakaran ,
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...