×

தமிழ்நாடு சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் அப்பாவு

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்திவைத்தார். அக்.9ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் 3நாட்கள் பேரவை நிகழ்வுகள் நடைபெற்றன.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 3வது நாள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இன்று வேளாண் மண்டலத்தில், மயிலாடுதுறை மாவட்டத்தையும் சேர்க்கும் வகையில், வேளாண் மண்டல திருத்த சட்ட முன் வடிவு தாக்கல் ஆனது. சட்ட முன்வடிவை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தமிழ்நாட்டில் ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்துவது தொடர்பான சட்ட முன் வடிவும் இன்று தாக்கல் ஆனது. ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்தும் சட்ட முன்வடிவை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தாக்கல் செய்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு அறிவித்தபடி, நடப்பு ஆண்டின் இரண்டாவது சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 9ம் தேதி கூடியது. தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதில் அளித்தனர். முக்கியமாக காவிரி விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசை வலியுறுத்தி கொண்டு வரப்பட்ட தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகள் விடுதலை தொடர்பாக சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் தவிர, மற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

வணிகர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை வசூலிக்க சமாதான திட்டம் கொண்டுவரப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விதி எண் 110 இன் கீழ் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், வணிகர்கள், வணிக வரித்துறை இடையேயான பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். வணிக வரி நிலுவைத் தொடர்பான 2.11 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. 25,000 கோடி அளவுக்கு வணிக வரி வசூலிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது என முதலமைச்சர் தெரிவித்தார்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். சபாநாயகர் இருக்கை முன்பு அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை காவலர்கள் மூலம் வெளியேற்றப்பட்டனர். எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

இந்நிலையில் இன்று நடந்த சட்டப்பேரவையில் 2 மாசோதாக்கள் தீர்மானம் நிறைவேற்றபட்டது. துறை சார்ந்த கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். அதன்பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்திவைத்தார். கடந்த 3 நாட்கள் நடைபெற்ற சட்டபேரவை நிகழ்வுகள் இன்றுடன் நிறைவடைந்தது.

 

 

 

 

The post தமிழ்நாடு சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் அப்பாவு appeared first on Dinakaran.

Tags : Speaker ,Abavo ,Tamil Nadu ,Chennai ,Abavu ,Assembly of the Assembly of the Law ,Dinakaraan ,
× RELATED புதிய கல்விக் கொள்கையை...