×

தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் 10500க்கும் மேற்பட்ட குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்: ஆர்டிஐ தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் பத்தாயிரத்துக்கும் அதிகமான குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருப்பதாக தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் வெளியாகியுள்ளது.இந்தியாவில் 21 வயது நிறைவடைந்த ஆண்களுக்கும், 18 வயது நிறைவடைந்த மகளிருக்கும் திருமணம் முடிக்க வேண்டும் என்பது சட்டம். மீறினால், குழந்தை திருமணங்களாகக் கருதப்படும். சட்டப்படி குற்றமும் கூட. இந்திய அரசின் “குழந்தை திருமண தடைச்சட்டம் 2006” குழந்தை திருமணங்களை தடுப்பது மட்டுமின்றி, சிறார்களுக்கு பாதுகாப்பையும் நிவாரணங்களையும் வழங்குகிறது. குழந்தை திருமணங்களுக்கு உடந்தையாக இருப்போருக்கு அபராதமும், தண்டனையும் விதிக்கிறது. எனினும், இன்றும் குழந்தை திருமணங்கள் தொடரத்தான் செய்கின்றன.

இந்நிலையில், குழந்தை திருமணம் குறித்த பல்வேறு தகவல்கள் மருதுபாண்டி என்பவர் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் மூலம், சமூக நலத்துறை அதிகாரிகளிடம் முன்வைத்து, பதிலை பெற்றுள்ளார். அதில், தமிழ்நாடு முழுவதும் 2020 முதல் 2023ம் ஆண்டு வரை, குழந்தை திருமணங்கள் குறித்து 13,665 புகார்கள் வந்ததாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. கிடைக்கப் பெற்ற புகார்களின் அடிப்படையில், 10,551 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில், குழந்தை திருமணங்கள் பற்றி அதிகபட்ச புகார்கள் வந்த மாவட்டங்களின் பட்டியலில், தேனி மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. அந்த மாவட்டத்தில், கடந்த 4 ஆண்டுகளில் 872 புகார்கள் வந்துள்ளன. 784 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.தொடர்ந்து திண்டுக்கல்லில் 862 புகார்கள் பெறப்பட்டு, 685 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. சேலத்தில் 838 புகார்கள் பெறப்பட்டு, 713 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன. நாமக்கல்லில் பெறப்பட்ட 774 புகார்களில் 425 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற 632 புகார்களில், 510 குழந்தை திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், 3114 குழந்தை திருமணங்கள் நடந்ததாக புகார்கள் எழுந்த நிலையில், நேரில் சென்று ஆய்வு செய்தபோது, அதற்கான எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை. என ஆர்டிஐ மூலம் தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக வறுமை, விழிப்புணர்வு இன்மை, திருமணத்தின் மூலம் சொந்தங்களை உறுதிப்படுத்துவதாகவும், வயது முதிர்ந்தோரின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதாகவும் கருதுவது என்பன உள்ளிட்டவையே, குழந்தை திருமணங்களுக்கு காரணமாகிறது. குழந்தை திருமணங்களால், பிரசவ மரணங்கள், கருக்கலைப்புகள், ஆரோக்கியமற்ற நிலை உள்ளிட்ட உடல் பிரச்னைகள் ஏற்படும். புரிதலான உறவுகள் இருக்காது, குடும்ப வன்முறைகளும் தற்கொலை முயற்சிகளும் பெருகும், கல்வியறிவற்ற சந்ததிகள் உருவாகும் என்று மருத்துவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

மாவட்ட சமூக நல அலுவலரை, குழந்தை திருமண தடுப்பு அதிகாரியாக நியமித்தது. குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தவும், அவற்றை ரத்து செய்யுமாறு நீதிமன்றத்தை நாடவும், பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் இவருக்கு அதிகாரம் உள்ளது. கிராமங்களில் குழந்தை திருமணங்களை தடுக்க, ஊராட்சி மன்றத் தலைவர்கள் தலைமையிலான மத்திய குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உயர் கல்வி பயிலும் மாணவிகளின் எண்ணிக்கை 49.5% ஆக இருக்கிறது.

இது மாணவர்களைவிட ஒரு சதவீதம் மட்டுமே குறைவு என அகில இந்திய கணக்கீடு சொல்வதாக மாநில அரசு இந்த ஆண்டு சட்டமன்றத்தில் தாக்கல் செய்த ‘தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை’ கோப்பில் குறிப்பிட்டிருக்கிறது. மாநில அரசின் இலவசக் கல்வி, பாடப் புத்தகங்கள், சீருடைகள், உயர்கல்விக்கான ஊக்கத்தொகை ஆகியவை பெண்கள் உயர் கல்வியை தொடர முக்கிய காரணியாக இருப்பதாக அரசு கூறியுள்ளது. அதே வேளையில் தமிழ்நாட்டில் சராசரியாக ஆண்டுக்கு 2,000 குழந்தை திருமணங்களுக்கான முயற்சி நடைபெற்று அது அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டிருப்பதாக சமூக நலத்துறையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் 10500க்கும் மேற்பட்ட குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்: ஆர்டிஐ தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,RTI ,Chennai ,India ,
× RELATED கல்லூரிகளில் நாப்கின் வழங்கும்...