×

தமிழகத்தில் +2 வகுப்பு மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி தொடங்க பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் +2 வகுப்பு மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி தொடங்க பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. ஜூலை 30க்குள் மாணவர்கள் மின்னஞ்சல் முகவரி தொடங்க தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உதவ அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2023-24 ஆம் கல்வியாண்டில் நான் முதல்வன் திட்டம் சார்ந்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி கல்லுாரி சேர்க்கைக்கான அனைத்து விண்ணப்பங்களும் இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணபிக்க இயலும். மேலும் அவ்வாறு விண்ணப்பிக்கும் நிலையில் பெரும்பாலான கல்லூரிகள், கல்லூரி சேர்க்கை சார்ந்த தகவல்களை மின்னஞ்சல் வாயிலாகவே மாணவர்களுக்கு வழங்குகின்றன. எனவே, ஒவ்வொரு மாணவருக்கும் மின்னஞ்சல் முகவரி இருத்தல் என்பது கட்டாயமான ஒன்றாகும்

* மின்னஞ்சல் தொடங்கும் செயல்பாடு: தலைமையாசிரியர் மற்றும் உயர்கல்வி பயிற்சி பெற்ற ஆசிரியர் பொறுப்புகள்

எனவே, இவ்வாண்டு 12-ம் வகுப்பு பயிலும் ஒவ்வொரு மாணவருக்கும் ஓர் மின்னஞ்சல் முகவரியினை வகுப்பு ஆசிரியர்கள் உதவியுடன், அவர்களாகவே உருவாக்கிட தக்க தலைமையாசிரியர்களும் வழிகாட்டிட அனைத்து அரசு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான மின்னஞ்சல் உருவாக்குதல் குறித்த விளக்கக் காணொளி லிங்க் மூலம் வழங்கப்பட்டுள்ளது https://youtu.be/elGOCADPmsA. மேலும், அவ்வாறு மின்னஞ்சல் தொடங்க கற்பிக்கும் போது பின்வரும் கூடுதல் விவரங்களையும் வழங்குதல் வேண்டும். மாணவர்களுக்கு புதிதாக தொடங்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியினை EMIS மாணவர் தகவல் பதிவேட்டில் பதிவு செய்திடல் வேண்டும்.

* மாணவர்களுக்கான கூடுதல் விவரங்கள்:

அம்மின்னஞ்சலை உருவாக்கிய பின் மாணவர்கள் மின்னஞ்சலுக்குள் எவ்வாறு உள்நுழைவது, மற்றவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவது, பெறப்பட்ட மின்னஞ்சலை எவ்வாறு திறந்து படிப்பது, மின்னஞ்சலில் இருந்து எவ்வாறு வெளியேறுவது என்பது குறித்து மாணவர்களுக்கு அனைத்து ஆசிரியர்களும் கற்பித்தல் வேண்டும்.

* அவ்வாறு உருவாக்கப்படும் மின்னஞ்சலின் கடவுச்சொல்லை (PASSWORD) மாணவர்கள் நினைவில் வைத்திருத்தல் வேண்டும். மற்றவர்களுக்கு பகிரக் கூடாது எனவும், இதன் மூலம் மற்றவர்கள் தங்கள் மின்னஞ்சல் கணக்கை பயன்படுத்துதலை தவிர்க்கலாம் என்கின்ற விவரங்களை மாணவர்களுக்கு வழங்கி ஆசிரியர்கள் வழிகாட்டிடல் வேண்டும்.

* ஆசிரியர்களின் வழிகாட்டுதல் மூலம் மாணவர்கள் புதியதாக உருவாக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியிலிருந்து cgtnss@gmail.com என்கின்ற மின்னஞ்சலுக்கு “நான் புதிய மின்னஞ்சல் முகவரியினை பெற்றேன்” என்றும் ‘உயர்கல்வியில் மாணவர்களின் இலக்கு என்னவாக இருக்கின்றது” என்கின்ற விவரத்தினை மாணவர்கள் மின்னஞ்சல் வாயிலாக அனுப்புவதற்கு வழிகாட்டுதல் வேண்டும். இச்செயல்பாட்டினை அனைத்து அரசு மேல்நிலை பள்ளிகளிலும் ஜூலை 17-07-2023 முதல்30-07-2023 வரை Hi-tech லேப் கணினிகள் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.

* மாவட்ட முதன்மை பயிற்சியாளர்கள் பொறுப்புகள்:(DIET Faculties)

மாவட்ட முதன்மை பயிற்சியாளர்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர்களிடம் இச்செயல்பாடு குறித்த தகவல்களை கேட்டு உறுதி செய்து கொள்ள வேண்டும். முதன்மை பயிற்சியாளர்கள் பள்ளிகளில் உள்ள பயிற்சி பெற்ற ஆசிரியர்களை இணைத்து ஏற்கனவே உருவாக்கியுள்ள whatsapp குழுவில் இது குறித்து பகிர்ந்து அவர்களிடமிருந்து அறிக்கை பெற்று அனுப்புதல் வேண்டும். அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் இச்செயல்பாட்டினை தங்கள் மாவட்டம் சார்ந்த பள்ளிகளில் மேற்காணுமாறு நடத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

The post தமிழகத்தில் +2 வகுப்பு மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி தொடங்க பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Instruction of School Education Department ,Tamil Nadu ,Chennai ,
× RELATED பெண்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை...