×

விளையாட்டு துறையிலும் தமிழ்நாட்டை உலகளவில் கவனம் ஈர்க்கிற மாநிலமாக உயர்த்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: அன்பு பாலங்களையும், சமூக நல்லிணக்கத்தையும் உருவாக்குகிற ஆற்றல் விளையாட்டுக்கு உண்டு. விளையாட்டு துறையிலும் தமிழ்நாட்டை உலகளவில் கவனம் ஈர்க்கிற மாநிலமாக உயர்த்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: எல்லாருக்கும் எல்லாம், அனைத்து துறை வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி என்பதை உள்ளடக்கமாக கொண்ட நமது திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக வளர உழைத்துக்கொண்டு வருகிறோம்.

ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்பது எப்படி நமது இலக்கோ, அதேபோல தமிழ்நாட்டை இந்தியாவுடைய விளையாட்டு தலைநகரமாக நிலைநிறுத்துவதும் நமது குறிக்கோள். இந்த இலக்கை நோக்கி பயணிக்கிற இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதியை நான் பாராட்டுகிறேன். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு சென்னை, மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி-2023, அலைச்சறுக்கு போட்டி, கிராண்ட் மாஸ்டர் செஸ் சாம்பியன் ஷிப் போட்டி போன்ற வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகளை தமிழ்நாட்டில் நடத்தி இருக்கிறோம்.

அதேநேரத்தில், விளையாட்டு கட்டமைப்புகளையும் உலக தரத்திற்கு உயர்த்திக்கிட்டு வருகிறோம். இந்தியாவில் முதன்முறையாக பாரா விளையாட்டு வீரர்களுக்கு 6 அரங்குகள், ராமநாதபுரத்தில் ஒலிம்பிக் நீர் விளையாட்டு அரங்கம், சென்னை, மதுரை, திருச்சி மற்றும் நீலகிரியில் ஒலிம்பிக் அகாடமி, முதல் கட்டமாக 10 சட்டமன்ற தொகுதிகளில் மினி ஸ்டேடியம், புதிய மாவட்டங்களான தென்காசி, மயிலாடுதுறை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, செங்கல்பட்டில் மாவட்ட விளையாட்டு மையங்கள் என்று பல்வேறு உட்கட்டமைப்பு பணிகள் நடந்துகொண்டு வருகிறது.

தமிழர்களின் பண்பாட்டு அரங்கமாக விளங்கும் ஜல்லிக்கட்டுக்கு மதுரையில் ரூ.62.77 கோடி மதிப்பீட்டில் ‘கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்’ கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அந்த அரங்கத்தை வருகிற 24ம் தேதி அன்று நான் திறந்து வைக்க இருக்கிறேன். தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் மையம் இந்த ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் வெகுவிரைவில் தொடங்கப்பட இருக்கிறது. கேலோ இந்தியா போட்டி தமிழ்நாட்டில் நடக்கிறது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய மகிழ்ச்சி. தமிழ்நாட்டின் பாரம்பரியமான விளையாட்டான சிலம்பம் டெமோ விளையாட்டாக இந்தமுறை சேர்க்கப்பட்டுள்ளது.

கேலோ இந்தியா-2023 லோகோவில் வான்புகழ் வள்ளுவர் இடம் பெற்றிருக்கிறார். அந்த சிலை கலைஞரால் திருவள்ளுவருக்கு தென்முனையில் வானுயர அமைக்கப்பட்டது. அதேபோல ஆங்கில ஆதிக்கத்துக்கு எதிராக போராடிய வீரமங்கையார் வேலு நாச்சியார் சின்னமும் அதில் இடம் பெற்றிருப்பது நமக்கு கூடுதல் பெருமை. விளையாட்டையும் வளர்ச்சியின் இலக்காக கருதி செயல்பட்டு வருகிறோம். சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கையை மேம்படுத்தி எல்லோருடைய நல்வாழ்வுக்கு விளையாட்டு உதவுகிறது.

அன்பு பாலங்களையும், சமூக நல்லிணக்கத்தையும் உருவாக்குகிற ஆற்றல் விளையாட்டுக்கு உண்டு. விளையாட்டு துறையிலும் தமிழ்நாட்டை உலகளவில் கவனம் ஈர்க்கிற மாநிலமாக உயர்த்த வேண்டும் என்று அமைச்சர் உதயநிதியை நான் இந்த நேரத்தில் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். அரசின் அழைப்பை ஏற்று வந்த மோடிக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பல்வேறு மாநிலங்களில் இருந்து பங்கேற்று இருக்கக்கூடிய 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களை வரவேற்று, வெற்றிபெற வாழ்த்துகிறேன். நன்றி. இவ்வாறு பேசினார்.

* ‘உளி ஓவியங்கள்’ நூலின் சிறப்பு
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் எதிரில் உள்ள புதுமண்டபம் எனும் வசந்த மண்டபத்தில் உள்ள சிற்பங்களை க.கு.ர.மு. ரத்தின பாஸ்கர் கோட்டோவியங்களாக வரைந்துள்ளதுதான் பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிய நூல். ஓவியங்களை கொண்ட இந்த நூலின் முன்னுரையில் மதுரை மாநகரின் வரலாறும், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் கிழக்கு கோபுரத்திற்கு எதிரில் அமைந்துள்ள புதுமண்டபத்தின் வரலாறும் அடங்கியுள்ளது. சுமார் 380 ஆண்டுகளாக மதுரையின் கலைப்பெட்டகமாக விளங்கி வரும் புதுமண்டப சிற்பங்களின் கோட்டோவியங்களையும், அவற்றை பற்றிய விளக்கங்களையும் கொண்டுள்ள அரிய கலை ஆவணம் தான் உளி ஓவியங்கள் நூல் என்பது குறிப்பிடத்தக்கது.

The post விளையாட்டு துறையிலும் தமிழ்நாட்டை உலகளவில் கவனம் ஈர்க்கிற மாநிலமாக உயர்த்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Minister ,M. K. Stalin ,CHENNAI ,M.K.Stalin ,Gallo India Youth Sports Competition ,Tamil ,Nadu ,M.K.Stal ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர்...