×

தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் புறங்கணிப்பா?: தமிழகத்தை சேர்ந்த ஒருவர் மட்டுமே உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ளதால் அதிர்ச்சி

டெல்லி: உச்சநீதிமன்றத்தில் தமிழகத்தை சேர்ந்த ஒரே ஒரு நீதிபதி மட்டுமே உள்ள நிலையில் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் புறக்கணிக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. நாட்டின் உயரிய நீதி பரிபாலனை இடமான உச்சநீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34ஆகும். மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளே சீனியாரிட்டி அடிப்படையில் உச்சநீதிமன்றம் நீதிபதிகளாக நியமிக்கப்படுவது வழக்கம். இந்த நியமனங்களின் போது மாநில வாரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படுவது வழக்கம். சென்னை உயர்நீதிமன்றத்தை பொறுத்தவரை 75 நீதிபதி பதவி இடங்கள் உள்ளன. இதன்படி தமிழகத்தை சேர்ந்த 3 நீதிபதிகள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இருக்க வேண்டும்.

ஆனால் தமிழகத்தை சேர்ந்த எம்.எம்.சுந்தரேஷ் மட்டுமே தற்போது உச்சநீதிமன்ற நீதிபதியாக உள்ளார். கடந்த ஜூன் மாதம் தமிழகத்தை சேர்ந்த நீதிபதி ராமசுப்பிரமணியன் ஓய்வு பெற்றதை அடுத்து கடந்த 6 மாதங்களாக உச்சநீதிமன்றத்தில் தமிழகத்திற்கு உரிய பிரநிதித்துவம் வழங்கப்படாதது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவிக்கின்றனர் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள். உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம் விவகாரத்தில் சமூக நீதி கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர்கள் மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவ வழங்குவது உறுதி செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

தற்போது கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள சிவஞானம், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன், மகாதேவன் உள்ளிட்டோர் சீனியாரிட்டி பட்டியலில் இருப்பதாக சுட்டிக்காட்டுகின்றனர் வழக்கறிஞர் சங்கத்தினர். வரலாறு சிறப்பு மிக்க பல்வேறு தீர்ப்புகளை வழங்கிய பெறுமை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு உண்டு. அதன் பாரம்பரிய சிறப்பை காப்பாற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே வழக்கறிஞர்களின் கோரிக்கையாக உள்ளது.

The post தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் புறங்கணிப்பா?: தமிழகத்தை சேர்ந்த ஒருவர் மட்டுமே உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ளதால் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Supreme Court ,Delhi ,Dinakaran ,
× RELATED வெளி மாநில பதிவெண் ஆம்னி பஸ்களுக்கு...