×

கொரோனா 2வது அலை காரணமாக ரத்த புற்றுநோய், உடல் பருமனால் பாதித்துள்ள குழந்தைகளை கவனமாக பார்க்க வேண்டும்: பெற்றோருக்கு மருத்துவர்கள் எச்சரிக்கை

சென்னை: ரத்த புற்றுநோய், உடல் பருமன் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தான் கொரோனா பாதிப்பு அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அந்தகைய குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என குழந்தைகள் நலத்துறை மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து மதுரை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் குழந்தைகள் நலத்துறை இணை பேராசிரியர் டாக்டர் ராஜ்குமார் கூறியதாவது: பெரியவர்கள் கொரோனா தொற்று ஏற்படாமல் என்ன செய்ய வேண்டுமோ, அதைத்தான் குழந்தைகளும் செய்ய வேண்டும். இரண்டாவது அலை வேகமெடுக்க மாஸ்க் அணிவது குறைந்து போனதே காரணம். முதல் அலையில் பெரும்பாலோனோருக்கு பாதிப்பு ஏற்படவில்லை. இதனால் பெரிய அளவில் பிரச்னை வரவில்லை. இதன் காரணமாக மக்கள் அலட்சியமாக இருந்து விட்டனர்.

ஏராளமான குழந்தைகள் மாஸ்க் அணிவதில்லை. குழந்தைகள் தான் வீடு, வீட்டுக்கு சென்று விளையாடிவிட்டு வருவார்கள். எனவே இவர்கள் தான் வைரசை வெளியில் இருந்து வீட்டிற்கு கொண்டு வந்து சேர்க்கிறார்கள். இதனால் வீட்டில் உள்ள முதியோர்களும், குழந்தைகளும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே நண்பர்களுடன் சேர்ந்து விளையாடும் விளையாட்டுக்களை தவிர்க்க வேண்டும். கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களில் 6 அடி இடைவெளியில் தான் இருப்பார்கள். எனவே அதுபோன்ற விளையாட்டுக்களை தேர்வு செய்து விளையாட வேண்டும். சில விளையாட்டுக்களை மாஸ்க் போட்டுக்கொண்டே விளையாடலாம்.

குழந்தைகளை வீட்டிற்கு உள்ளேயே வைத்திருக்க முடியாது. பள்ளிகளை மூடுவதே அங்கிருந்து கொரோனா பரவுவதை தடுக்க வேண்டும் என்பதற்காகத்தான். எனவே, குழந்தைகள் டியூசனுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். பிறந்தநாள் விழா கொண்டாடுதல் மற்றும் மற்ற வீட்டு விஷேசங்களுக்கு குழந்தைகளோடு செல்வதை பெற்றோர் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். வீட்டிற்கு தேவையில்லாமல் விருந்தினர்கள், உறவினர்கள் வருவதை தவிர்க்க வேண்டும். இரண்டாவது அலையில் தமிழகத்தில் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படவில்லை. மகாராஷ்டிரா, டெல்லியில் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படுவதாக கூறுகிறார்கள்.

தமிழகத்தில் கடந்த முறை என்ன பாதிப்பு ஏற்பட்டதோ அதே நிலைதான் தற்போது உள்ளது. ரத்த புற்றுநோய், உடல் பருமன் போன்ற வேறு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தான் கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. 100 பெரியவர்கள் பாதிக்கப்பட்டால் ஒரு குழந்தை பாதிக்கப்படுவதே அரிதாக இருக்கிறது. அப்படியே பாதிக்கப்பட்டாலும் உடனடியாக சரியாக வீடு திரும்புகின்றனர். ஐசியு, வெண்டிலேட்டருக்கு செல்வது இல்லை. இறப்பும் இல்லை. கொரோனா எதிர்ப்பு சக்தி குழந்தைகளுக்கு அதிகமாக இருக்கிறது. வயதாக, வயதாக அந்த திறன் குறைகிறது. மூன்றாவது, நான்காவது அலை வருவதற்கு வாய்ப்புள்ளது. இரண்டாம் அலையில் தான் பாதிப்பு அதிகமாக இருக்கும். மூன்று, நான்கில் பாதிப்பு குறைவாகத்தான் இருக்கும். விரைவில் குழந்தைகளுக்கான தடுப்பூசியும் வந்துவிடும். அப்போது குழந்தைகளுக்கும் போட்டுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* சத்தான உணவு எது?
குழந்தைகளுக்கு சத்துள்ள உணவு வழக்க வேண்டும். வைட்டமின் சி, டி, சிங்க் போன்ற சத்துக்கள் மிகுந்த உணவுகளை வழங்க வேண்டும். இந்த சத்துக்கள் முட்டை, கீரை, பால், பழங்கள் போன்றவற்றில் அதிகமாக இருக்கிறது. பெரும்பாலான குழந்தைகள் ஜூஸ் தான் குடிக்கிறார்கள். அதில் பயன் இல்லை. கெமிக்கல் உள்ளதால் ஜூஸை தவிர்க்க வேண்டும். பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். நுண் சத்துக்கள் மிகுந்த நட்ஸ் போன்ற உணவுகளை சாப்பிட செய்ய வேண்டும். இந்த உணவுகளை உட்கொள்ளும் போது நோய் எதிர்ப்பு சக்தி வளரும். உடற்பயிற்சிகளை குழந்தைகள் மேற்கொள்ள வேண்டும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எனவே, இதை ெபற்றோர் ஊக்குவிக்க வேண்டும். யோகா, மூச்சுப்பயிற்சி செய்ய வேண்டும்.

Tags : Children with leukemia and obesity due to corona 2nd wave should be looked after carefully: Doctors warn parents
× RELATED மஞ்சம்பாக்கம் சந்திப்பு அருகே...