×

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை வைத்து திறக்க உத்தரவிடக் கோரிய வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை வரும் 28ம் தேதி பிரதமர் மோடி திறக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நாளை அவசர வழக்காக விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள நாடாளுமன்ற கட்டிடம் 96 ஆண்டுகள் பழமையானது. அதனால், புதிய நாடாளுமன்றம் கட்ட ஒன்றிய அரசு முடிவு செய்தது. அதன்படி சுமார் ரூ.1000 கோடி செலவில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டு விழா கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி நடந்தது. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். கட்டுமான பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் புதிய நாடாளுமன்ற திறப்பு விழா வரும் 28ம் தேதி நடக்கிறது.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். ஆனால், மக்கள் பணத்தில் கட்டப்பட்டது என்பதாலும், நாட்டின் முதல் குடிமகன் என்பதாலும் ஜனாதிபதி திரவுபதி முர்முதான் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தின. மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி போன்றவர்கள் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டனர். 28ம் தேதி, சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கரின் பிறந்தநாள் என்பதும் எதிர்க்கட்சிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. எனவே, திறப்பு விழாவை கூட்டாக புறக்கணிக்க வேண்டும் என்று பல்வேறு எதிர்க்கட்சிகள் கருதுகின்றன.

இதையடுத்து முதல்நபர்களாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. டெரிக் ஓ பிரையனும், இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் டி.ராஜாவும், புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை தங்கள் கட்சிகள் புறக்கணிப்பதாக வெளிப்படையாக அறிவித்தனர். இதையடுத்து திமுகவும் புறக்கணிப்பதாக திமுக தரப்பில் அக்கட்சியின் எம்.பி திருச்சி சிவா அறிவிப்பு வெளியிட்டார். இதையடுத்து விசிக சார்பிலும் விழாவை புறக்கணிக்க உள்ளதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்தார். இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை காங்கிரஸ், திமுக, விசிக, மதிமுக, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்கட்சிகள் புறக்கணிக்க உள்ளதாக கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

இருப்பினும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திட்டமிட்டபடி 28ம் தேதி திறப்பதற்கு ஒன்றிய அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த போது, ‘1947-ம் ஆண்டு இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த போது ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவுக்கு அதிகார பரிமாற்றம் நடந்ததை குறிப்பிடும் வகையில் பிரதமர் நேருவிடம் தமிழக செங்கோல் வழங்கப்பட்டது. அந்த செங்கோல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்படும்’ என்றார். மேலும் புதிய நாடாளுமன்றத்தில் இந்தியாவின் விடுதலை சின்னமாக தமிழக செங்கோலை பிரதமர் மோடி நிறுவுவார். அந்த செங்கோல் நாடாளுமன்ற சபாநாயகர் இருக்கை அருகே வைக்கப்படும் என்றும் விளக்கம் அளித்தார். இந்நிலையில், இந்த புதிய கட்டிடத்தை பிரதமர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் உச்சநீதிமன்றத்தில் புதிய ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது: வரும் 28ம் தேதி திறக்கப்பட உள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதியை வைத்துதான் திறக்க வேண்டும். மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளையும் இந்திய அரசியல் சட்டம் பிரிவு 79ன்படி கூட்டவோ அல்லது கலைக்கவோ ஜனாதிபதிக்கு மட்டுமே உச்சபட்ச அதிகாரம் உள்ளது. அப்படி இருக்கும் நிலையில் அவரை நிராகரித்து விட்டு புதிய நாடாளுமன்றத்தை திறப்பது என்பது அவரது மாண்பை குறைக்கும் வகையில் உள்ளது. அதனால் இந்த ரிட் மனுவை உடனடியாக பட்டியலிட்டு அவசர வழக்காக விசாரிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை வைத்து திறக்க உத்தரவிடக் கோரிய வழக்கை நாளை உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

The post புதிய நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை வைத்து திறக்க உத்தரவிடக் கோரிய வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,President ,Draupadi Murmu ,New Delhi ,Modi ,Dinakaran ,
× RELATED கபில் சிபலுக்கு காங்கிரஸ் வாழ்த்து