புதுடெல்லி: டெல்லி புதிய மதுபானக் கொள்கை விவகாரத்தில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க மறுத்த உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை 8 மாதத்தில் முடிக்க கெடு விதித்துள்ளது. டெல்லியில் கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட புதிய மதுபானக் கொள்கையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்த நிலையில், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில், கடந்த பிப்ரவரி 26ம் தேதி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். தற்போது வரை நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் மருத்துவ காரணங்களை அடிப்படையாக கொண்டு ஜாமீன் வழங்க கோரி டெல்லி சிபிஐ நீதிமன்றம் மற்றும் டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடினார். இரு நீதிமன்றமும் மனுவை தள்ளுபடி செய்தன. இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். உச்ச நீதிமன்றம் அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்டு கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது.
இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எஸ்.வி.என்.பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று வழங்கிய தீர்ப்பில், ‘‘வழக்கு விசாரணையின் போது சில முக்கிய கேள்விகளுக்கு நாங்கள் விளக்கம் கேட்டிருந்தோம். ஆனால் பெரும்பாலானவைக்கு சிசோடியா தரப்பில் உரிய பதிலளிக்கவில்லை. குறிப்பாக சட்ட விரோத பணிப்பரிமாற்ற விவகாரத்தில் சந்தேகத்திற்குரிய சில அம்சங்கள் உள்ளன.
மேலும் மதுபான கொள்கை தொடர்பான பிரதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மற்றொரு அமர்வு முன்பு நிலுவையில் இருந்து வருகிறது. இதுபோன்ற சூழலில் சிசோடியாவுக்கு கண்டிப்பாக ஜாமீன் வழங்க முடியாது. எனவே, ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்றோம். மேலும் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அடுத்த 6 முதல் 8 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
* கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் டெல்லியின் புதிய மதுபானக் கொள்கை வழக்கு விசாரணைக்காக நவம்பர் 2ம் தேதி நேரில் ஆஜராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை நேற்றிரவு சம்மன் அனுப்பியது.
The post டெல்லி மதுபான கொள்கை வழக்கு மணீஷ் சிசோடியாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் மறுப்பு: 8 மாதத்தில் விசாரணை முடிக்க சிபிஐக்கு கெடு appeared first on Dinakaran.