×

மஹுவா பதவி நீக்க விவகாரத்தில் கருத்து கூற உச்ச நீதிமன்றம் மறுப்பு: ஜன. 3க்கு விசாரணை ஒத்திவைப்பு

புதுடெல்லி: மஹுவா மொய்த்ராவின் எம்பி பதவி நீக்கம் தொடர்பான விவகாரத்தில் தற்போது எந்தவித கருத்தும் தெரிவிக்க முடியாது என தெரிவித்த உச்ச நீதிமன்றம், வழக்கின் விசாரணையை ஜனவரி 3ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பியாக இருந்த மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் கேள்விகள் கேட்க தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் இருந்து பணம் மற்றும் விலை உயர்ந்த பரிசுகள் பெற்றதாக, பாஜ. எம்பி. நிஷிகாந்த் துபே குற்றம் சாட்டினார்.

இதன் விளைவாக நாடாளுமன்றத்தின் நெறிமுறைக் குழு விசாரணையை தொடர்ந்து அவர் மக்களவை எம்பி. பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு எதிராக மஹுவா மொய்த்ரா தொடர்ந்திருந்த ரிட் வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எஸ்.வி.என்.பாட்டி ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, ‘‘ மஹுவா மொய்த்ரா விவகாரத்தில் அவர் மீது குற்றம் உறுதிபடுத்தப்படாத நிலையில், அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக எம்பி பதவியில் இருக்கு நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

குறிப்பாக இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தின் சட்ட ரீதியான அமைப்பு சரிவர செயல்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது என தெரிவித்தார். இதன் போது குறுக்கிட்ட நீதிபதி சஞ்சீவ் கண்ணா, இந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவின் கோப்பானது இன்று (நேற்று) காலையில் தான் கிடைத்தது. இதையடுத்து உடனடியாக அதனை ஆய்வு செய்ய முடியவில்லை. எனவே மஹுவா மொய்த்ரா தொடர்பான வழக்கு விவகாரத்தில் தற்போது எவ்வித கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை என கூறி விசாரணையை வரும் ஜனவரி 3ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

The post மஹுவா பதவி நீக்க விவகாரத்தில் கருத்து கூற உச்ச நீதிமன்றம் மறுப்பு: ஜன. 3க்கு விசாரணை ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Mahua ,New Delhi ,Mahua Moitra ,Dinakaran ,
× RELATED எதிர்கட்சிகளின் அழுத்தம், சுப்ரீம்...