×

உச்ச நீதிமன்றத்தில் காவிரி வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் பெயர் அறிவிப்பு: வெள்ளிக்கிழமை விசாரணை

புதுடெல்லி: காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள மனுவை விசாரிக்கும் மூன்று நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வில் இடம்பெற்றுள்ள நீதிபதிகளின் பெயர்களை உச்ச நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டெல்லியில் கடந்த 11ம் தேதி நடந்த காவிரி ஆணைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு எதிராகவும், அதேப்போன்று தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய தண்ணீரை திறக்க மறுக்கும் கர்நாடகா அரசின் நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,\”காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிலுவை நீரான 28.8 டி.எம்.சி தண்ணீரை உடனடியாக திறக்க உத்தரவிட வேண்டும்.

அதேப்போன்று வரும் செப்டம்பர் மாதம் காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு திறக்க வேண்டிய 36.76 டி.எம்.சி நீரை காலம் தாழ்த்தாமல் உரிய நேரத்தில் திறந்து விட கர்நாடகா அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு, இந்த வழக்கை விரிவாக விசாரிக்கும் விதமாக மூன்று நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வை உடனடியாக அமைப்பதாக நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரிக்கும் புதிய அமர்வு மற்றும் மூன்று நீதிபதிகளின் பெயர்களை உச்ச நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதில்,‘‘நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா மற்றும் நீதிபதி பி.கே.மிஸ்ரா ஆகியோர் அடங்கியுள்ளனர். இதையடுத்து இந்த மூன்று நீதிபதிகளின் தலைமையிலான அமர்வில் வரும் வெள்ளிக்கிழமை காவிரி தொடர்பான அனைத்து மனுக்களும் 57வது வழக்காக விசாரணைக்கு வருகிறது.

The post உச்ச நீதிமன்றத்தில் காவிரி வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் பெயர் அறிவிப்பு: வெள்ளிக்கிழமை விசாரணை appeared first on Dinakaran.

Tags : Cauvery ,Supreme Court ,New Delhi ,Tamil Nadu government ,
× RELATED கனிம வளங்கள் தொடர்பான உரிமைகளுக்கு...