×

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு எதிரொலி செம்மொழி பூங்கா எதிரே ரூ.1000 கோடி நிலம் மீட்பு: தமிழக அரசு நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு

சென்னை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பையடுத்து சென்னையில் உள்ள செம்மொழி பூங்காவுக்கு எதிரே ரூ.1000 கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.சென்னை அண்ணா மேம்பாலத்தை ஒட்டியுள்ள கதீட்ரல் சாலையில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் அதிமுக பிரமுகரான தோட்டக்கலை வி.கிருஷ்ணமூர்த்தி என்பவர், ‘தோட்டக்கலை சங்கம்’ என்ற ஒரு தனியார் அமைப்பை உருவாக்கி அந்த நிலத்தை பயன்படுத்தி வந்தார். இந்த நிலத்தை மீட்க கடந்த 1989ம் ஆண்டு தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையை எதிர்த்து கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அந்த நிலம் அரசுக்கு சொந்தமானது என தீர்ப்பளித்தது.

இந்த நிலையில், அங்கு குத்தகை அடிப்படையில் செயல்பட்ட தனியார் டிரைவ்-இன் உணவு விடுதி வசம் இருந்த 20 ஏக்கர் நிலத்தை மீட்ட தமிழக அரசு, அந்த இடத்தில் செம்மொழி பூங்காவை உருவாக்கியது. ஆனால் அதன்பிறகு செம்மொழி பூங்காவுக்கு எதிரே உள்ள சுமார் ரூ.1000 கோடி மதிப்பிலான 114 கிரவுண்ட் நிலத்துக்கு சொந்தம் கொண்டாடி கிருஷ்ணமூர்த்தி கடந்த 2011ம் ஆண்டு தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, அண்ணா மேம்பாலம் அருகே அரசு நிலத்துக்கு சொந்தம் கொண்டாடிய தனியார் அமைப்பு சார்பில் தொடரப்பட்ட வழக்கை கடந்தாண்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு மீதான விசாரணை பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்து வந்தது.

இந்த வழக்கின் இடையீட்டு மனுதாரரான திமுக வழக்கறிஞர் புவனேஷ்குமார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் கடந்த அதிமுக ஆட்சியில் மாவட்ட ஆட்சியராக பொறுப்பு வகித்த அந்த அதிகாரி, யாரையோ திருப்திப்படுத்தும் நோக்கில் சுமார் ரூ.1000 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை தனியார் அமைப்புக்கு தாரை வார்த்து கொடுத்திருந்தார். ஆனால் சரியான நேரத்தில் நில நிர்வாகத்துறை முதன்மை செயலாளர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அந்த உத்தரவை நிறுத்தி வைத்ததால் முக்கிய பகுதியில் உள்ள இந்த அரசு நிலம் காப்பாற்றப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்து வருகிறார்” என்று வாதிட்டிருந்தார்.

அதேபோல தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், “தனிநபர் ஒருவர் நடத்தி வந்த தோட்டக்கலை சங்கத்துக்கும் இந்த 114 கிரவுண்ட் நிலத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து, இந்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என கோரினார். மேல்முறையீட்டு மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால் ஆஜராகி வாதிட்டிருந்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பை கடந்த மாதம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தனர். இந்நிலையில், அரசு நிலத்துக்கு சொந்தம் கொண்டாடி தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை எதிர்த்து தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி சார்பில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, சென்னை அண்ணா மேம்பாலம் அருகே தனியாரால் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.1000 கோடி மதிப்பிலான நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று மாலை மீட்டு, அந்த வளாகத்துக்கு ‘சீல்’ வைத்தனர். மேலும், அந்த இடத்தை கையகப்படுத்தியதற்கான அறிவிப்பு பலகையையும் கேட்டில் தொடங்க விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் இந்த அதிரடி நடவடிக்கையை பொதுமக்களும் பாராட்டி உள்ளனர்.

The post உச்ச நீதிமன்றம் தீர்ப்பு எதிரொலி செம்மொழி பூங்கா எதிரே ரூ.1000 கோடி நிலம் மீட்பு: தமிழக அரசு நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Semmozhi Park ,Tamil Nadu government ,Chennai ,
× RELATED அனைத்து மாவட்டங்களிலும் சதுப்புநிலம்...