×

குழந்தைகளுக்கான கோடை கால ஆலோசனைகள்!

கோடை விடுமுறை வந்துவிட்டாலே குழந்தைகள் வீட்டிலிருந்து வெளியேறி விளையாடத்தான் விரும்புவர். ஆனால் இந்த வருடம் கோடையின் தாக்கமும், வெப்ப அலைகளின் வீரியமும் சற்றே அதிகமாக உள்ளன. குழந்தைகளை கோடை வெயிலின் பிடியிலிருந்து பாதுகாக்க சில ஆலோசனைகள்.

உடலின் குளிர்ச்சி முக்கியம்

அதீத வெயில் காரணமாக வீட்டுக்குள்ளே இருந்தாலும் கூட உடலின் நீர் சக்திக் குறைந்து வறட்சி ஏற்படும். இதனைத் தடுக்க கூடுமானவரை தர்பூசணி, நுங்கு, இளநீர், மற்றும் அதிக அளவில் நீர் கொடுப்பது நல்லது. வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை எண்ணெயைக் காய்ச்சி தேய்த்து தலை குளிப்பதும் அவசியம். பழங்கள், சி வைட்டமின் நிறைந்த பழச்சாறுகளான ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி, திராட்சை உள்ளிட்டவைகளின் ஜூஸ்கள் அருந்த வைப்பது நல்லது.

11 முதல் 3 மணி வேண்டாமே!

அடம்பிடித்தாலும் கூட பகலில் 11 மணி முதல் 3 மணி வரை குழந்தைகள் வெளியே விளையாடுவதை அனுமதிக்காதீர்கள். மேலும் வீட்டில் இருந்தாலும் அவர்களுடன் அதிகம் பேசி, வீட்டுக்குள் விளையாடும் விளையாட்டுகளை இணைந்து குடும்பமாக விளையாட முயற்சியுங்கள். குழந்தைகள் கோடை விடுமுறையின் தனிமை மற்றும் வெப்பத்தால் உண்டாகும் மனநிலைமாற்றங்களையும் தவிர்க்க இது உதவியாக இருக்கும்.

எண்ணெய் பலகாரங்கள் வேண்டாம்

எண்ணெயில் பொரித்த உணவுகள், டபீட்சா, பர்கர் உள்ளிட்ட அவசர உணவுகளைத் தவிர்க்கவும். மேலும் சிப்ஸ், சமோசா, அதீத இனிப்புப் பதார்த்தங்களும் உடல் உபாதைகளை உண்டாக்கி வயிற்றுப் பிரச்னைகளை ஏற்படுத்தும். மசாலாக்களும் கூட எரிச்சலை உண்டாக்கும்.

ஏசியில் நேரத்தை குறைவாக பயன்படுத்துங்கள்

சிலக் குழந்தைகள் வெளியே வெப்பம் காரணமாக ஏசி பொருத்தப்பட்ட அறையைத் தாண்டி வெளியே வரவே மாட்டார்கள். அவர்களை திசைதிருப்பி இயற்கையான காலநிலைக்கும், அறை வெப்பத்திற்கும் பழக்கப் படுத்துங்கள். அதிக ஏசி பயன்பாடு உடலுக்கும் நல்லதல்ல, நம் வருமானத்துக்கும் கூட நல்லதல்ல.

ஆடைகளில் கவனம் தேவை

இயற்கையான காட்டன் உடைகள், மெல்லிசான கைத்தறி உடைகள் பயன்பாடு அவசியம். குறிப்பாக ஜீன்ஸ், உலோக பட்டன்கள், டிசைன்கள் பொருத்தப்பட்ட ஆடைகள், நிறைய ஜிமிக்கி, கற்கள் , சரிகை வேலைப்பாடுகள் கொண்ட உடைகளைத் தவிர்க்கவும். இவையெல்லாம் உடலின் வெப்பத்தை மேற்கொண்டு அதிகரிக்கும். மேலும் வெப்பத்தையும் ஈர்க்கும் திறன் கொண்டவை. பள்ளிகள் திறக்கும் நேரம் நெருங்கிவிட்டது, வெயில் குறைந்தாலும் இன்னும் சில ஊர்களில் வெப்பம் குறையவில்லை. பள்ளிக்குச் செல்லும் போதும் கூட உணவுகளில் கவனம் தேவை. அதிக நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை கொடுத்தனுப்புங்கள். ரெடிமேட் உணவுகளை மதிய உணவில் தவிர்த்திடுங்கள்.
– ஷாலினி நியூட்டன்

The post குழந்தைகளுக்கான கோடை கால ஆலோசனைகள்! appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED தயாரிப்பு முறையில் பல்வேறு...