×

நாகை அருகே கோடை மழை அறுவடைக்கு தயாராக இருந்த 5,000 ஏக்கர் எள் சாகுபடி பாதிப்பு

வேதாரண்யம்: நாகப்பட்டினம் அருகே கோடை மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 5 ஆயிரம் ஏக்கர் எள் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆதனூர், பன்னாள், கருப்பம்புலம், தகட்டூர், கரியாப்பட்டினம், செம்போடை, குரவப்புலம் நெய்விளக்கு, தெள்ளம்புலம், தகட்டூர், தாணிக்கோட்டகம் உள்ளிட்ட 20 கிராமங்களில் சம்பா நெல் சாகுபடிக்கு பிறகு, 5,000 ஏக்கரில் கோடைகால எள் சாகுபடி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் எள்பயிர் நன்கு வளர்ந்து அறுவடைக்கு 20 நாட்களே இருந்த நிலையில் வேதாரண்யம் பகுதியில் கடந்த 10 நாட்களாக விட்டு விட்டு கனமழை பெய்து வருவதால் வயல்களில் மழைநீர் தேங்கி எள் செடிகள் அழுகி சாய்ந்து விட்டது. இதனால் எள் சாகுபடி செய்த விவசாயிகள் வேதனையில் உள்ளனர். எள் பாதித்த வயல்களை வேளாண்துறையினர் கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

கொடைக்கானலில் 2 மலைக்கிராமங்கள் துண்டிப்பு: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் தாலுகாவுக்கு உட்பட்ட சின்னூர் மற்றும் பெரியூர் மலைக்கிராமங்களில் ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களில் இருந்து பெரியகுளம் செல்லும் மலைச்சாலையில் குப்பம்பாறை என்ற பகுதியில் கல்லாறு என அழைக்கப்படும் காட்டாறு உள்ளது.நேற்று முன்தினம் இரவு கொடைக்கானல் மலைப்பகுதியில் கனமழை கொட்டியது. இதனால் கல்லாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால், அதனை கடக்க முடியாமல் சின்னூர் மற்றும் பெரியூரை சேர்ந்த மலைக்கிராம மக்கள் தவித்து வருகின்றனர். கிராம மக்கள் கூறுகையில், ‘‘கல்லாற்றை கடந்து செல்ல நிரந்தரப்பாலம் கட்டித்தர வேண்டும்’’ என்றனர்.

கொடிவேரி அணை மூடப்பட்டது: ஈரோடு மாவட்டம் கோபி அருகே கொடிவேரி அணை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கன மழை காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கொடிவேரி அணையில் பாதுகாப்பு கம்பிகளை தாண்டி தண்ணீர் விழுவதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள், கொடிவேரி அணையை மூடி சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து உள்ளனர். பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டது. ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: தமிழகம் மற்றும் கர்நாடக எல்லை பகுதியான பிலிகுண்டுலுவில் கனமழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 1057 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 3,980 கனஅடியாக அதிகரித்தது. நேற்று முன்தினம் 101.16 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 101.30 அடியாக சற்று உயர்ந்துள்ளது.

The post நாகை அருகே கோடை மழை அறுவடைக்கு தயாராக இருந்த 5,000 ஏக்கர் எள் சாகுபடி பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Nagai ,Nagapattinam ,Nagapattinam District ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் மாவட்டத்தில் விளையும்...